தேடல் தொடங்கியதே..

Thursday 10 May 2012

கீழக்கரை - இராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் நடப்பட்டிருக்கும் 5000 நிழல் தரும் மரக்கன்றுகள் !

கீழக்கரையிலிருந்து இராமநாதபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் வன்னார்துறை (காஞ்சிரங்குடி) பகுதியிலிருந்து, சாலையின் இரு புறங்களிலும் ஒவ்வொரு 10 மீட்டர் இடைவெளியிலும், ஒரு மரம் வீதம் 5000 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. 


எதிர்கால நலனை கருத்தில் கொண்டு செயலாற்றப் பட்டிருக்கும் இந்த நல்ல திட்டம், தமிழக சாலை போக்குவரத்து துறையினரின் வழிகாட்டுதல் படி, தமிழக வனத் துறையினர்  செய்துள்ளனர். ஆடு, மாடு போன்ற கால்நடைகளிடமிருந்து  மரக்கன்றுகளை பாதுகாக்கும் பொருட்டு, தென்னங் கீற்றுகளால் வேயப்பட்ட தட்டிகளை கொண்டு பாதுகாப்பு தடுப்பும் உருவாக்கப்பட்டுள்ளது. 


இது குறித்து வனத் துறை நிர்வாக ஆய்வாளர். பாரி அவர்கள் கூறுகையில் "கிழக்கு கடற்கரை சாலை அமைக்க முற்படும் போது பல்லாயிரக்கணக்கான மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டது. அதற்கு பகரமாக, அதை விட இரண்டு மடங்கு மரங்களை நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பகுதியில் நிழல் தரும் புங்கை, வேம்பு, கொன்றை, இலுப்பை போன்ற மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. 

 
 ஓராண்டுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டத்தின் படி, இது வரை குளத்தூர் முதல் காட்டுமாவடி வரை 27000 மரக் கன்றுகள் நடப்பட்டுள்ளது.

நடுவது மட்டுமல்லாமல், இன்னும் ஓராண்டுகளுக்கு, நீர் விட்டு பராமரிப்பதும் எங்களுடைய வேலை தான்.

அது வரை தொடர்ந்து இந்த பகுதியில் தான் ஆய்வுகள் மேற்கொண்டு வருவோம்" என்று கணீரென்று தெரிவித்தார்.

அது மட்டுமல்லாமல் இராமநாதபுரம் செய்யது அம்மாள் மேனிலைப் பள்ளியின் சார்பில், மரம் வளர்ப்பதை ஊக்குவிக்கும் முகமாக, இலவச மரக் கன்றுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக பள்ளி நிர்வாகத்தினரால்,  இராமநாதபுரம் ரோமன் சர்ச் பகுதியில் விழிப்புணர்வு பலகை வைக்கப்பட்டுள்ளது. 

விழிப்புணர்வு கட் அவுட் (இடம் : ரோமன் சர்ச் பகுதி, இராமநாதபுரம்)

'அசோகர் ஆட்சி காலத்தில் சாலையோரங்களில் மரங்களை நட்டு வளர்த்தார்' என்று சிறு வயதில் பாட புத்தகத்தில் படித்திருக்கிறோம். ஆனால் தற்போது நிஜமாகவே சாலையோரங்களில், நிழல் தரும் மரங்களை நட்டு பராமரிக்க முனைந்திருக்கும் தமிழ் நாடு சாலை போக்குவரத்து துறையினரின் இந்த ஆக்கப்பூர்வ செயல் பொது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

No comments:

Post a Comment