தேடல் தொடங்கியதே..

Saturday 30 June 2012

கீழக்கரையில் மின்சார வாரிய கணக்கெடுப்பு பணியாளர்களின் மெத்தனப் போக்கால் தொடர்ந்து அவதியுறும் பொதுமக்கள் !

நம் கீழக்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார எல்லைக்குள் சுமார் 10000 க்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் இருக்கிறது. இவை அனைத்திற்கும் சுழற்சி முறையில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வீட்டு மின் இணைப்புகள் மற்றும் கடை மின் இணைப்புகளுக்கான கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது. இந்த பணியினை அந்தந்த பகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள மின் துறை கணக்கெடுப்பு பணியாளர்கள் செய்து வருகின்றனர்.




அவர்களில் சிலர் சரியான மின் அளவுகளை, அதற்குரிய அட்டைகளில் பதியாமல், கூடுதலாக பயனீட்டு அளவுகளை பதிவதாக, பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதனால் இரண்டு மடங்கு தொகைக்கும் அதிகமாக பணம் செலுத்த வேண்டிய கட்டாய சூழலுக்கு தள்ளப்படுவதாக பலர் புகார் தெரிவித்து வருகின்றனர்.



இது குறித்து பாதிக்கப்பட்ட ஹமீதியா மேனிலைப் பள்ளியின் ஓய்வு ஆசிரியர். லெப்பை தம்பி அவர்கள் கூறும் போது " முஸ்லீம் பஜாரில் இருக்கும் எனது கடையின் மின் இணைப்பு மீட்டரின் அளவு, இன்றைய தேதியில் 647 என்று உள்ளது. ஆனால் 955 என்று மீட்டரை பார்க்காமலே அதிகமாக எழுதியதோடு மட்டுமல்லாமல், அதிகமான தொகையை கட்டணமாக பதிந்துள்ளனர்.



கீழக்கரையில் மின்சார வாரியத்தின் வசூல் மையம் தற்போது வண்ணாந்துறை பகுதியில் செயல்பட்டு வருகிறது. கீழக்கரை நகரிலிருந்து இது சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது சம்பந்தமாக வன்னாந்துறைக்கும், கீழக்கரைக்கும் அலைந்து திரிந்தது தான் மிச்சம். மின்சார வாரிய  அலுவலர்களிடம் இருந்து சரியான பதில் இல்லை. இதனால் பணம் கட்ட தாமதமாவதால், இப்போது பீஸையும்  பிடுங்கி சென்று விட்டார்கள்" என்றும் வருத்தம் தோய்ந்த முகத்துடன் தெரிவித்தார்.


இது குறித்து புது கிழக்குத் தெருவைச் சேர்ந்த நஸ்ருன் கரீமா அவர்கள் கூறும் போது, "கணக்கெடுக்க வருபவர்கள் வீட்டின் கதவுகளை கூட தட்டுவதில்லை. வீட்டின் வாசலை திறந்து வைத்திருந்தால் மட்டும் கணக்கெடுத்து செல்கிறார்கள். அப்படி இல்லை என்றால் மனக்கணக்காகவே, தாங்கள் வைத்திருக்கும் மின்னணு பதிவியில் ஏதாவது ஏகத்துக்கு கிறுக்கி விட்டு சென்று விடுகிறார்கள்.

எங்கள் வீட்டில் இதே போன்று ஆள் இல்லை என்று கூறி ஒவ்வொரு தடவையும் (மூன்று முறை) மின் பயனீட்டு அளவினை 100 என்று எழுதி விட்டு, தற்போது மொத்த வசூலாக, மிகக் கூடுதல் பயனீட்டு அளவாக, 820 என்று குறிப்பிட்டு உள்ளார்கள். மின் பயனீட்டு அளவு கூட, கூட, மின்சார கட்டணமும் உயர்கிறது. அந்த வகையில் நாங்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி இருக்கிறோம். பலர் இந்த குளறுபடிகள் தெரியாமல் இவர்கள் கிறுக்கி செல்லும் கட்டணத்தை அப்படியே கட்டி செல்கின்றனர்." என்று பெரும் ஆதங்கத்துடன் தெரிவித்தார்.




இது குறித்து சம்பந்தப்பட்ட கணக்கெடுப்பாளரிடம் கேட்ட போது, "ஏதோ ஒரு முறை தவறு நடந்து விட்டது. விடுங்கள்" என்று மட்டுமே கேசுவலாக பதில் வந்தது. ஆனால் இதே போன்று, புகார்களை அளிக்க பலர் அங்கு காத்திருந்ததை பார்க்கும் போது, மின் வாரிய கணக்கெடுப்பாளர்களின் தவறான அணுகுமுறையை உறுதி செயவதாய் இருந்தது. ஏற்கனவே அமுலில் இருக்கும் மின்சார கட்டணத்தின் உயர்வால் பாதிக்கப்பட்டிருக்கும் பொதுமக்கள், இது போன்ற மின்சார வாரிய அலுவலர்களின் மெத்தனப் போக்கால், பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

1 comment:

  1. நல்ல விழிப்புணர்வு இதுபோன்ற குற்றங்களை அம்பலப்படுத்தினால்தான் தவறு செய்பவர்கள் திருந்துவார்கள்

    ReplyDelete