தேடல் தொடங்கியதே..

Tuesday 3 July 2012

குற்றாலத்தில் சாரல் மழையுடன் களை கட்டும் சீசன் - கீழக்கரைவாசிகள் மகிழ்ச்சி !

ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை மாதங்களில் குற்றாலத்தில் சீசன் களை கட்ட துவங்கும். தற்போது கொஞ்சம் தாமதமாக சீசன் துவங்கி இருக்கிறது. குற்றாலம் நகரமெங்கும் சாரல் மழை பெய்து, இதமான சீதோஷ்ணம் நிலவுவதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. இம்முறை கேரளாவில் தாமதமாகவே தென்மேற்கு பருவமழை தொடங்கினாலும், அங்கும் கூட சாரல் மழையே பெய்கிறது. ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றால அருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத் தொடங்கியுள்ளதால், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.




ஒவ்வொரு ஆண்டும் குற்றாலம் சீசன் துவங்கியதுமே, கீழக்கரையிலிருந்து, குற்றாலம் நோக்கி அதிகளவில் நண்பர்களுடனும், குடும்ப அங்கத்தினர்களும் சென்று தென் பொதிகையின் மூலிகை நீரில் மகிழ்ச்சி குளியல் போடுவது வழக்கம். தற்போது துவங்கியுள்ள சீசனால், கிழக்கரைவாசிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கிடையே கீழக்கரையிலிருந்து, பலர் வாகனங்களில், இப்பொழுதே குற்றாலம் நோக்கி  படையெடுக்க ஆராம்பித்துள்ளனர். 



 
வெளிநாட்டில் வசிக்கும் கீழக்கரை நண்பர்கள் கூட பெரும்பாலும், இந்த குற்றாலம் சீசன் நேரங்களில் தான் விடுப்பில் வருவதுண்டு. கீழக்கரையிலிருந்து, குற்றாலம் செல்வதற்காக, மகேந்திரா வேன், டாட்டா சுமோ உள்ளிட்ட பெரும்பாலான உள்ளூர் வாகனங்களும் அட்வான்ஸ் புக்கிங் செய்யப்பட்டு வருகிறது. குற்றாலத்தில் ஹோட்டல் அறைகளும், தொலை  பேசி வாயிலாக முன் பதிவு செய்யப்பட்டு வருகிறது. 




இது குறித்து நண்பர்களுடன் குற்றாலம் சென்றிருக்கும் கீழக்கரை பணியக்காரத் தெருவைச் சேர்ந்த இஸ்மாயில் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட போது "இன்று காலை முதலே குற்றாலத்தில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. இதமான தென்றல் காற்றும் வீசுகிறது. தொடர்ந்து சாரல் மலை பெய்து வருவதால் உள்ளத்திற்கும், உடலுக்கும் புத்துணர்வாக இருக்கிறது. பெரும்பாலும் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது." என்றும் மகிழ்ச்சியுடன் கூறினர்.




குற்றால அருவிகளில், அதிக கூட்ட நெரிசலில் குளிப்பதை தவிர்க்க,சனி, ஞாயிறு கிழமைகள் மற்றும் அரசு விடுமுறை நாட்களில் செல்வதை தவிர்ப்பது நல்லது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை இன்னும் சில நாட்களில், மேலும் தீவிரம் அடையும் என எதிர்பார்க்கப்படுவதால், சீசன் ஆகஸ்டு மதத்தின் இறுதி வரை தொடர வாய்ப்புள்ளது. 

தென் பொதிகையின் அழகாய் இரசிக்க செல்லும் சுற்றுலாப் பயணிகள், குற்றாலம் அருவிகள் தவிர, மறக்காமல் கேரளா பாடரில் உள்ள, கும்பா உருட்டி அருவி, பாலருவி, பாபநாசம் அகஸ்தியர் அருவி மற்றும் மணிமுத்தாறு அருவிகளுக்கு செல்ல மறக்க வேண்டாம்.

No comments:

Post a Comment