தேடல் தொடங்கியதே..

Friday 3 August 2012

கீழக்கரையில் ஒரு வரலாற்று ஆய்வாளர் - ஆனா. மூனா சுல்தான் அவர்களின் ஆச்சரியமூட்டும் ஆய்வுகள் !

'வரலாறு தெரியாதவர்களால்... வரலாறுகள் படைக்க முடியாது' என்று சொல்லுவார்கள்.  இன்று நம் கீழக்கரையின் சிறப்புமிகு வரலாறுகளை அத்தாட்சிகளுடன், தகுந்த சான்றாவணங்களுடன் எடுத்துரைக்கும் அறிவாற்றல் மிகுந்த ஆசானாக ஆனா. மூனா சுல்தான் அவர்கள் திகழ்ந்து கொண்டிருக்கிறார்.  1968 ஆம் ஆண்டுகளிலேயே உலகத் தமிழ்க் கழகத்தின் கீழக்கரை நகரச் செயலாளராக சேவையாற்றியவர். அதே ஆண்டில் வள்ளல் சீதக்காதிக்கு நினைவு நாள் கொண்டாடி மகிழ்ந்தவர்.

ஓலைச் சுவடிகளை ஆய்வும் செய்யும் வரலாற்று ஆய்வாளர்

உலக மொழிகளில் தமிழ் மொழி தான் மூத்ததும், மிகத் தொன்மையான காலத்திலேயே செம்மையான மொழியாக வடிவம் பெற்றது என்பதையும் உலகுக்கு காட்டிய, பல நூல்களை படைத்த  தேவநேயப் பாவாணர், பெருஞ்சித்திரனார், தமிழ்க் குடிமகன் போன்ற சான்றோர்களிடம் மிகுந்த நட்புறவு கொண்டிருந்தவர். தமிழ் மீது கொண்டிருக்கும் அவாவின் காரணமாக தற்போது பழங்காலத்து தமிழ் எழுத்துக்களை, எதிர் கால சந்ததியருக்கு எளிதில் விளங்க வைக்கும் முகமாக, எழுத்துக்களை தொகுத்துக் கொண்டிருக்கிறார். 

கல்வெட்டு எழுத்துக்களை விளக்கும் ஆசான்

பழங்காலத்து பத்திரங்களை பிழையில்லாமல் படிக்கும் இவரிடம், பல்வேறு சமூகத்தினரும் தங்கள் வீட்டில் தூசு படிந்து கிடந்த மூதாதையர் காலத்து சொத்து பத்திரங்களை படிக்க கொடுத்து, பல்வேறு சொத்துக்களை மீட்டுள்ளனர் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி. இவை மட்டுமின்றி கல்வெட்டுகள், ஓலைச் சுவடிகள் போன்றவற்றை தங்கு தடையின்றி தெளிவுறப் படிக்கும் ஆற்றல் மிக்கவர். கடந்த மாதம் கீழக்கரைக்கு வருகை தந்திருந்த அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாண பல்கலைகழகத்தின் வரலாற்று மாணவர் திரு.சுந்தர், "18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டில் தமிழ் முஸ்லீம்களின் கடல் வணிகமும், சமூகமும்" என்ற தலைப்பில் ஆய்வறிக்கை சமர்ப்பிக்க இவருடன் பல நாள்கள் தங்கியிருந்து சான்றாவணங்களுடன் குறிப்பெடுத்து சென்றது குறிப்பிடத்தக்கது. 


இது குறித்து ஆனா. மூனா சுல்தான் அவர்களிடம் கேட்ட போது "நான் எந்த பல்கலைகழகத்திலும் வரலாற்று மாணவனாக இருந்ததில்லை. சிறு வயதிலிருந்தே கல்வெட்டுகள், ஓலைச் சுவடிகள் போன்றவற்றினை படிக்கும் ஆர்வம் மிகுதியாக இருந்தது. அதன் காரணமாக பல்வேறு வரலாற்று ஆய்வு நூல்களைத் தேடித் தேடி புரிதலுடன் வாசிக்கத் துவங்கினேன். இதனால் பல்வேறு ஆய்வு நூல்களில், ஒரே விசயத்தில் பல முரண்பாடுகளை காண நேர்ந்தது. அதனை களையும் நோக்கோடு, நான் என்னுடைய ஆய்வுகளை தொடர்ந்தேன். அந்த வரலாற்று ஆய்வுகள் இன்றளவும் தொடர்கிறது. ஆனால் எனக்கு சரியான அங்கீகாரம் யாரும் வழங்காததன் விளைவாக, வரலாற்று ஆய்வுகளில் சற்றே தொய்வு நிலை காணப்படுகிறது. இருந்தாலும் விடா முயற்சியோடு, சில ஆர்வமுடைய நல்ல உள்ளங்களின் ஒத்துழைப்போடு, தொடர்ந்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறேன்." என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

தற்போது பெயிண்டர் தொழிலை கசடற செய்து வரும் இவர், கீழக்கரையின் ஆதி வரலாறுகளை முற்காலம் முதல் இக்காலம் வரை, இளம் தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் பொருட்டு, தகுந்த ஆதாரங்களுடன் நூலாக்கம் செய்யும் பெரும் முயற்சியில், பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் ஈடுபட்டு வருகிறார். இவருடைய கீழக்கரை குறித்த பல்வேறு தலைப்பிலான ஆய்வுகளும், பார்வைகளும் ஆச்சிரியமூட்டுவதாக இருக்கிறது. இவருடைய வரலாற்று ஆய்வுப் பணிகள் மென் மேலும் சிறக்க கீழை இளையவன் வலை தளம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். 

தொடர்புக்கு : ஆனா. மூனா சுல்தான் - 98655 69595
3/252,பெத்தரித் தெரு, கீழக்கரை , இராமநாதபுரம் மாவட்டம் 

1 comment: