தேடல் தொடங்கியதே..

Sunday 5 August 2012

கீழக்கரை - இராமநாதபுரம் சாலையில் காவிரி குடி நீர் குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர் - சமூக ஆர்வலர்கள் கவலை !

கீழக்கரை - இராமநாதபுரம் சாலையில் வண்ணாந்துறை வளைவு அருகே உள்ள பாலையாறு பகுதியில் செல்லும் காவிரி கூட்டுக் குடி நீர் குழாயில் உடைப்பு ஏற்ப்பட்டு, கீழக்கரை பகுதிக்கு வர வேண்டிய குடி நீர் பெருமளவு வீணாகி வருகிறது. இதனால் கீழக்கரை பகுதி சமூக ஆர்வலர்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர். தமிழகத்திலேயே மிகவும் வறட்சியான மாவட்டமாக இருக்கும், நம் ராமநாதபுரம் மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக ரூ. 616 கோடியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆனால் காவிரி குடிநீர் அவ்வப்போது மட்டுமே சப்ளை செய்யப்படுகிறது.

மழையில்லாத நேரத்திலும் நிரம்பி வரும் பாலையாறு !

இது குறித்து கீழக்கரை நகர் மக்கள் விழிப்புணர்வு நல முன்னேற்ற (KMSS சங்கம்) சங்கத்தின் செயலாளர் ஜனாப்.இஸ்மாயில் அவர்கள் கூறும் போது "இந்த பாலையாறு பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே, கடுமையான வறட்சியின் காரணமாக நீர் முழுவதும் வற்றி காணப்பட்டது. ஆனால் திடீரென கடந்த வாரம் மழை எதுவும் பெய்யாத நிலையில் பாலையாரில் நீர் ஆறாக ஓடுகிறது. சாலையை விட்டு கீழே இறங்கி பார்க்கும் போது, கீழக்கரைக்கு வரும் காவிரி கூட்டுக் குடி நீர் குழாயில் உடைப்பு ஏற்ப்பட்டு குடி நீர் வீணாவது தெரிய வந்தது.  இன்னும் இராமநாதபுரம் செல்லும் வழிகளில் சில இடங்களில் கால்நடைகளுக்காக காவிரி குடிநீர் குழாய் உடைக்கபட்டு, மக்களுக்கு சென்றடையாமல் வயல் வெளிகளில் தண்ணீர் வீணாகி வருகிறது. 

தற்போது கண்மாய்கள், ஊரணிகள் வறண்டு போய் உள்ளதால், மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் உள்ளது. இதனையறிந்த சில விவசாயிகள் மேய்ச்சலுக்கு சென்று திரும்பும் கால்நடைகளின் தண்ணீர் தேவைக்காக, வேறு வழியின்றி சாலையோரங்களில் செல்லும் காவிரி குடிநீர் குழாய்களை உடைத்து, வயல் வெளிகளில் தேக்கி, கால்நடைகளுக்கு வழங்கி வருகின்றனர். ரோட்டோரங்களில் உடைக்கபடும் குடிநீர் குழாய்களால், கீழக்கரை பகுதிக்கு குடிநீர் செல்லாமல் வயல் வெளிகளில் தேங்கி வீணாகி வருகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை விரைவில் சீர் செய்ய அதிகாரிகள் முன் வர வேண்டும்" என்று ஏக்கத்துடன் தெரிவித்தார்.



'சிறு துளி.. பெரு வெள்ளம்..' இது சிறிய உடைப்பு தானே.. என்று சம்பந்தப்பட்ட துறையினர் காலம் தாழ்த்தாமல் உடனடியாக குழாயை சரி செய்ய முன் வர வேண்டும். நம் கீழக்கரை நகரில் சில பகுதிகளுக்கு மட்டும், மிகக் குறைந்த அளவே வந்து கொண்டிருக்கும் இந்த காவிரி நீர்,  நம் நகர மக்கள் முழுமைக்கும் தாகம் தீர்க்கும் தண்ணீராக என்று மாறும்?? என்ற ஏக்கத்தோடு காத்திருக்கும் மக்களுக்கு, குடி நீர் வீணாகும் குழாயையாவது சரி செய்து ஆறுதல் படுத்த அதிகாரிகள் விழைய வேண்டும்.

No comments:

Post a Comment