தேடல் தொடங்கியதே..

Tuesday 2 October 2012

கீழக்கரையில் விழ இருக்கும் மரங்களால் எழ இருக்கும் ஆபத்துக்கள் - விரைந்து வெட்டக் கோரி நூதன முறையில் கண்டனம் !

கீழக்கரை சின்னகடை தெரு கருவாட்டுக் கடை அருகாமையில் உள்ள மிகப் பழமையான வேப்ப மரம் ஒன்று உயிர் பலி வாங்க காத்திருப்பது போல் பேயாட்டத்துடன் நிற்கிறது. எந்த நேரம் விழுவோ ? எத்தனை உயிர்களை காவு கொள்ளுமோ ? என்று தெரியாமல் இந்த பகுதி பொது மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இந்த மரம் பட்டுப் போய் ஆண்டுகள் பல ஆகிறது. இதனுடைய கிளைகள் மின் கம்பங்களை ஒட்டியவாறு செல்வதால் இது நிச்சயம் பேராபத்துக்களை விளைவிக்கும் என்பதால் விரைந்து இதனை வெட்ட வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத்திற்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், சமூக ஆர்வலர்கள் பலர் மனுக்கள் மூலம் வேண்டுகோள்  விடுத்தும் பயனொன்றும் இல்லை.



இந்நிலையில் மக்கள் நண்பன் டீம் என்ற பெயரில் இளைஞர்கள் சிலர், முறிந்து விழ இருக்கும் மரத்தில் ஒரு அறிவிப்புப் பலகையை மாட்டியுள்ளனர். அதில் இறந்து போன மரம் தன்னை அப்புறப்படுத்தக் கோருவது போல கண்டன கவிதையாக வடித்துள்ளனர். இந்த நூதன எச்சரிக்கை பலகையை பாதசாரிகள் பலர் பயந்தபடியே நின்று படித்த வண்ணம் செல்கின்றனர். இப்போதாவது சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுப்பார்களா ?? என்ற கேள்வி கணைகளை மனதில் ஏந்தியபடி இப்பகுதி பொதுமக்கள் காத்திருக்கின்றனர். 


இது குறித்து அல்லையன்ஸ் சமூக சேவை இயக்கத்தின் நிர்வாகி J.M.ஹபீப் முஹம்மது அவர்கள் கூறும் போது "பொது மக்கள், பள்ளி செல்லும் மாணவ மாணவிகள், சிறு குழந்தைகள் அதிகம் பயன்படுத்தும் சாலையாக இது இருக்கிறது. இதே போன்று கீழக்கரையில் பல இடங்களில் பட்டுப் போன மரங்கள் கொலை வெறியுடன் காத்திருக்கிறது. கிழக்குத்தெரு முஸ்லீம் பஜாரிலும் மக்கள் அதிகம் நடமாடும் கடைகளுக்கு மத்தியில் (புறாக்கடை அருகில்) பட்டமரம் ஒன்று எந்த நேரமும் முறித்து விழும் நிலையில் உள்ளது. ஆகவே இது போன்ற அச்சுறுத்தும் மரங்களை வெட்ட நகராட்சி நிர்வாகம் உடனடியாக முன் வர வேண்டும்." என்று தெரிவித்தார்.

Comments  :

 
  • கீழக்கரை 'புதிய ஒற்றுமை' நல்ல முயற்சி.. சம்பந்தப்பட்டவர்கள் இப்போதாவது முன் வந்து நல்லது செய்வார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம்... ஆனால் பொறுக்கும் காலத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க இறைவன் துணை செய்ய வேண்டும்.

    இதனை சிரத்தையுடன் எழுதி வைத்திருக்கும் நண்பர்கள் குழுவினை வாழ்த்துவோம்.. தொடரட்டும் 'மக்கள் நண்பன் டீமின்' மக்கள் பணிகள்...

No comments:

Post a Comment