தேடல் தொடங்கியதே..

Friday 30 March 2012

கீழக்கரையில் மக்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும் 'பத்திரப் பதிவு அலுவலகம்' !

தமிழக அரசின் நடப்பாண்டுக்கான புதிய நிதி நிலை அறிக்கை (பட்ஜெட் 2012-2013) தாக்கல் செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, சொத்துக்கள் மீதான வழிகாட்டுதல் மதிப்பு உயர்வானது, ஏப்ரல் 1 ஆம் தேதி (01.04.2012) முதல் அமலுக்கு வர உள்ளது. இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களும் மக்கள் வெள்ளத்தில் மிதக்கிறது.




சார்பதிவாளர் அலுவலகம், கீழக்கரை


கூட்ட நெரிசலில் பத்திரப் பதிவு அலுவலகம்

நம் கீழக்கரை நகரிலும், பத்திரப் பதிவு அலுவலகம், வேலை நேரம் முழுதும், சொத்துக்களை பதிவு செய்ய காத்திருக்கும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி காணப்படுகிறது. அவசர கோலத்தில் சொத்துக்களை பதிவு செய்ய முண்டியடிக்கும் பொதுமக்களை கட்டுப்படுத்த, முறையாக அனைவருக்கும் 'டோக்கன்' வழங்கப்பட்டு  சார்பதிவாளர் அறைக்குள் அனுமதிக்கப் படுகின்றனர்.


டோக்கனோடு காத்திருப்போரின் ஒரு பகுதி

பத்திரப் பதிவுக்கு காத்திருக்கும் பெண்கள்  


இது குறித்து சாலைதேருவைச் சேர்ந்த சீனி முஹம்மது ஆலிம் அவர்கள் கூறும் போது "தமிழக அரசின் பட்ஜெட்டில், வழிகாட்டுதல் மதிப்பு, இப்போது இருக்கும் தொகையை விட ஏறக்குறைய 250% உயர்த்தப்பட்டு இருப்பதால், பத்திரப் பதிவு செய்ய தற்போது மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.


சீனி முஹம்மது ஆலிம் அவர்கள்
ஒரே நேரத்தில் அதிகமானோர் இங்கு குவிவதால், பத்திரப் பதிவு அலுவலர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். புதிய மதிப்பினை செயல்படுத்த இன்னும் ஒரு நாள் மட்டுமே இருப்பதால் தான், இந்த அளவுக்கு கூட்டம் காணப்படுகிறது" என்று தெரிவித்தார்.


கடும் பிஸியில் பத்திர எழுத்தர்கள் !
 


பொதுமக்களின் மேலான கவனத்திற்கு 

பழைய வழிகாட்டுதல் மதிப்பின்படி, பத்திரம் பதிய வேண்டுமென்ற அவசரத்தில், பத்திரத்தில் அச்சிடப்பட்டிருக்கும்  பெயர், முகவரி, சர்வே எண், பட்டா எண், நான்கு மால்கள், தாய் பத்திரத்தின் பதிவு எண்கள் மற்றும் வருடம், உட்பிரிவு புல எண்கள்  போன்ற சரத்துக்களை சொத்துக்களை வாங்குவோரும், விற்போரும் தெளிவாக படித்துப் பார்க்காமல் கையெழுத்திட வேண்டாம். அவ்வாறு தவறுகள் ஏற்படும் போது, பின்னாளில் தேவையற்ற பல பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டி வரும்.

வேகத்துடன்.. விவேகமும் இருப்பது நல்லது...  கவனம் தேவை !

Tuesday 27 March 2012

கீழக்கரையில் வபாத்து அறிவிப்பு

கீழக்கரை தம்பி நைனா பிள்ளை  தெருவைச் சேர்ந்த மர்ஹூம். 'வாட்டி' செய்யது அபுதாகிர், மர்ஹூமா. செய்யது அலி பாத்திமா  ஆகியோர்களின் மூத்த மகளும், நெய்னா முஹம்மது, மர்ஹூம். சீனி மதார் சாஹிபு (சின்னத்தம்பி), ஐனுன் பரிதா ஆகியோரின் சகோதரியும், மர்ஹூம். சுல்தான் அமீர்தீன் (செல்லாப்பா), ரமீஸ் நெய்னா ஆகியோரின் மாமியாரும், முஹம்மது நவாஸ்தீன், செய்யது சிராஜுதீன், செய்யது இபுராஹீம், செய்யது ஹமீது தாஹிர், செய்யது ஹாஜா நஜிமுதீன், நஜிமு நிசா பேகம், சித்தி ஜரினா பேகம் ஆகியோரின் தாயாருமாகிய ஜனாபா. செய்யது அஹமத்  நாச்சியா   அவர்கள் நேற்று (26.03.2012) இரவு  வபாத்தாகி விட்டார்கள். 


(இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்). அவர்களின் ஜனாஸா   நல்லடக்கம் இன்று (27.03.2012) மதியம் 3.30 மணிக்கு கடற்கரைப் பள்ளி மைய வாடியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 



அவர்களின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


தொடர்புக்கு 

சிராஜுதீன் -  00971504246598 

ஹாஜா நஜிமுதீன் - 00918056884272

Monday 26 March 2012

கீழக்கரையில் மீண்டும் கிணறுகளில் விடப்படும் 'கம்பூசியா மீன்கள்' - மலேரியா ஒழிப்பு நடவடிக்கையால் பொது மக்கள் ஆறுதல் !

கீழக்கரையில் மலேரியா மற்றும் விஷ காய்ச்சலால் தற்போது பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரம் பெய்த சிறு மழையின் காரணமாகவும் கொசுக்களின் உற்பத்தி பெருகி விட்டது. கடந்தாண்டு வீடுகள் தோறும் கிணறுகளில் மலேரியா கொசு ஒழிப்புக்கான "கம்பூசியா' என்ற மீன் குஞ்சுகள் விடப்பட்டன. தற்போது இந்த மீன்கள் பெரும்பாலான வீடுகளில் செத்து விட்டன. மீண்டும் இந்தப் பணி செயல்படுத்தப்படுவதால் பொது மக்கள் பெரும் ஆறுதல் அடைந்துள்ளனர்.


கம்பூசியா மீன்கள் உள்ள வாளியுடன் ஊழியர்கள் 


இது குறித்து நெய்னா முகம்மது தண்டையல் தெருவைச் சேர்ந்த ஹாமீது இபுறாகீம் அவர்கள் கூறும் போது  "இந்த வகை மீன்கள் வீடுகளின் கிணறுகளில் விடப்பட்டிருந்த காலக் கட்டத்தில் மலேரியா காய்ச்சல் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது.


மலேரியா கொசுப்புளுக்களின் எதிரி - 'கம்பூசியா மீன்கள்'

இந்த நல்ல திட்டத்தை திரும்பவும் செயல்படுத்த வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களும் நகராட்சிக்கு வேண்டுகோள் விடுத்தனர். அதனை ஏற்று திரும்பவும் செயல் படுத்தப்படும் இந்த திட்டம் பொது மக்கள் அனைவருக்கும் ஆறுதலளிக்கிறது. ஒரு சில வார்டுகளுக்கு மட்டும் மீன்களை விடுவதோடு நிறுத்தி விடாமல் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வீடுகளின் கிணறுகளிலும் விட வேண்டும்" என்று தெரிவித்தார்.


கம்பூசியா மீன்கள் விடும் பணியில் ஊழியர்கள்


மலேரியா நோயை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்படுகின்ற போதிலும், நாமும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

*  மழை நீர் மற்றும் குடிநீரில் உற்பத்தியாகி பகல் நேரங்களில் கடிக்கும் கொசுக்களால் மலேரியா மற்றும் டெங்கு காய்ச்சல் பரவுகிறது.

*  வீட்டில் உள்ள மழை நீர் தேங்ககூடிய பயன்படுத்தாத உரல், தேங்காய் மூடி, டயர், பெயின்ட் டப்பாக்கள், பூந்தொட்டிகள், உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.

* வீட்டில் குடிநீர் சேமிக்கும் பாத்திரங்களை மூடி வைத்து பயன்படுத்த வேண்டும்.

*தண்ணீரில் உள்ள புழுக்கள் சிறிது நாட்களில் கொசுவாக மாறிவிடும். எனவே, தண்ணீர் சேகரிக்கும் தொட்டிகளில் சிறிய புழுக்கள் இருந்தால், நீரை துணியால் வடிகட்ட வேண்டும்
.
*  பயன்படுத்தாத கிணறுகள் மற்றும் நீர்த்தொட்டிகளில் கம்பூசியா வகை மீன்களை வளர்ப்பதால் கொசு உற்பத்தியை கட்டுப்படுத்தலாம். இதற்கு மாநகராட்சி மலேரியா பிரிவை அணுகவும்.

*  செப்டிங் டேங்க் காற்று போக்கியில் கொசுவலையை கட்டி வைக்கவும். செப்டிங் டேங்கை ஓட்டை இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

* குளிர் காய்ச்சல் மற்றும் மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சலால் அவதிப்படுபவர்கள் மலேரியா மற்றும் டெங்கு காய்ச்சல் பரிசோதனை செய்யவும்.


வீடுகளின் கிணற்ற்றுக்குகுள் மீன்கள் விடப்படும் காட்சி


மலேரியா கொசுப்புழுக்களை அடியோடு அழிக்கும் கம்பூசியா மீன்களை கிணறுகளில் விடும் திட்டம் ஒரு பக்கம் நடைபெற்றாலும் வெளியே உலவும் மலேரியா கொசுக்களை ஒழிக்க புகை அடிப்பதையும் அனைத்து பகுதிகளிலும் நகராட்சியினர் துரிதப்படுத்த வேண்டும்.