தேடல் தொடங்கியதே..

Saturday 9 June 2012

கீழக்கரையில் டெங்கு காய்ச்சலை ஒழிக்க சீன தேசத்திலிருந்து 'போதி தர்மரா'வருவார்? - டெங்கு பீதியில் உலவும் மக்களுக்கான தகவல் !

நம் கீழக்கரை நகரில் தற்போது எங்கு நோக்கினும் டெங்கு காய்ச்சல் பற்றிய பயம் பெருமளவில் காணப்படுகிறது. நமது நகரிலுள்ள 114  தெருக்களில், பாரபட்சமின்றி தெருவுக்கு இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் வீதம் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, இராமநாதபுரத்திலோ அல்லது மதுரையிலோ உள்ள தனியார் மருத்துவமனைகளில் தங்கி, ஆயிரக்கணக்கில் செலவழித்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 


நமது ஊர் மக்கள் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டிருப்பது கண் கூடாக தெரிந்தாலும், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு செல்லாததால், டெங்கு குறித்த புள்ளி விபரங்கள் அரசுக்கு சரியாக கிடைக்காதது பெரும் வருத்தமளிக்கிறது. இருப்பினும் நம் தமிழக அரசு, நகராட்சி நிர்வாகத்தினரையும், சுகாதாரத் துறையினரையும் முடுக்கி விட்டு, போர்க்கால அடிப்படையில் அனைத்து ஆக்க நடவடிக்கைகளையும் எடுத்து வருவது மன ஆறுதலை அளிப்பதாக உள்ளது. 


குறிப்பாக பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, டெங்கு கொசுக்களை முற்றிலும் ஒழிக்க புகை மருந்துகள் அடிப்பது, நீர் நிலைத் தொட்டிகளை சரியான முறையில் பராமரிப்பது உள்ளிட்ட பணிகளை முழு வீச்சில் செய்து வருகிறது. இது தவிர, நமதூரின் பொது நல அமைப்புகளும் பல்வேறு விதமான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அராங்கமும், ஆட்சியாளர்களும், சமூக ஆர்வலர்களும் எத்தனை முயற்சிகளை மேற்கொண்டாலும், எவ்வளவு அரும்பாடு பட்டாலும், பொது மக்களின் மேலான ஒத்துழைப்பு இல்லாத வரை, இந்த கொலை வெறி டெங்கு கொசுக்களின் அட்டகாசம் ஒழியப் போவதில்லை. டெங்கு காய்ச்சலுக்கு இன்னும் முறையான மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில், சீன தேசத்திற்கு கிடைத்த போதி தர்மன் போல, நம் நகரத்திற்கும் ஒருவர் வரும் வரை காத்திருக்க போகின்றோமா?

(FILE PHOTO)
நிஜத்தில் அப்படியொரு கதாபாத்திரம் நிச்சயம் வரப் போவதில்லை.. ஆனால் ஒவ்வொரு தனி மனிதனும், தன்னையும், தன் சுற்றுப் புறத்தையும் பேணும் போது அவரும் உண்மையில் கதாநாயகர் தான்... நீங்களும் நம் நகரை அச்சுறுத்தும் டெங்கு கொசுக்களை ஒழிக்க முயற்சிகள் மேற்கொண்டு, நகரம் போற்றும் நாயகனாக மாற பின் வரும் செயல்களை முயற்ச்சிக்கலாமே...

  • வீட்டிற்குள் குளிர்பான பாட்டில்கள், பீப்பாய்கள், ஜக்குகள், பானைகள், வாளிகள், பூந்தொட்டிகள்(பிரிட்ஜ்), தாவரத் தொட்டிகள், நீர்தேக்கத் தொட்டிகள், பள்ளங்கள், பாட்டில்கள், டப்பாக்கள், டயர்கள், கூரையில் உள்ள நீர் வடி பள்ளங்கள், குளிப்பதனப் பெட்டியிலிருந்து சொட்டும் தண்ணீரை சேமிக்கும் பாத்திரங்கள், சிமெண்ட் தொட்டிகள், சிமெண்ட் கலசங்கள், மூங்கில் குடில்கள் (புட்டிகள்) தேங்காய் ஓடுகள், மரத்திலுள்ள துணைக் குழிகள் மற்றும் மழைநீர் தேங்கியுள்ள / சேகரிக்கப்பட்டுள்ள அனைத்து இடங்களையும் சுத்தப்படுத்தி நீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும.
  •  

    • வீட்டைச் சுற்றிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
    • அனைத்து நேரங்களிலும் கொசு மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும்.
    • டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள், தங்களை கொசுக்கள் கடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
    • தங்கள் பகுதிகளுக்கு, டெங்கு கொசுக்களை ஒழிக்க, இது வரை புகை மருந்து அடிக்கப் படாமல் இருந்தால், அந்தந்த  வார்டு கவுன்சிலர்களை அணுகி, விபரங்களை தெரிவிக்கவும்.

    டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு குறித்து நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த செய்திகள் :



    யா அல்லாஹ் ! என்னையும், எங்கள் குடும்பத்தாரையும், தெருவாசிகளையும், நகர மக்களையும் டெங்கு போன்ற கொடிய உயிர் கொல்லி நோய்களிடமிருந்து காப்பாற்றுவாயாக... எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக... ஆமீன் 

    கீழக்கரை பொதுமக்களை 'மன நோயாளிகள்' ஆக்கும் நகராட்சி அலுவலர்கள் - கொதிக்கும் பொது மக்கள் !

    நம் கீழக்கரை நகராட்சியில் வரி விதிப்புக்கும், வீட்டு வரி மாற்றத்திற்கும், முறையான ஆவணங்களுடன் விண்ணப்பித்தும், சரியான பதில் கிடைக்கப் பெறாமல்,  இரண்டு மாதங்களுக்கும் மேலாக பொது மக்கள் அலைக்களிக்கப்படுவது வாடிக்கையாகி வருகிறது. இது குறித்து விளக்கம் கேட்க முனையும் போதெல்லாம், "ஆணையர் இல்லை.. அதனால் தான் தாமதம்" என்று மட்டும் பதில் வருகிறது. என்ன நோக்கத்திற்காக தாங்கள் அலைக்களிக்கப்படுகிறோம் என்று கூட தெரியாமல் பல அப்பாவிகள், நம் நகராட்சிக்கு நாள் கணக்கில் நடையாய் நடந்து திரிகின்றனர். இவர்கள் கடைசியில் கவுன் 'சிலர்' போர்வையில் இருக்கும் புரோக்கர் பெருமக்களை நாடியே, அவர்கள் கேட்கும் தொகையை கொடுத்து வேலையை முடிக்கும் நிர்பந்தம் ஏற்படுகிறது.




    இது குறித்து பாதிக்கப்பட்ட N.M.T. தெருவைச் சேர்ந்த செய்யது நாச்சியா அவர்கள் கூறும் போது "நான் கடந்த 28.03.2012 அன்று வீட்டு வரி மாறுதலுக்காக, முறையான ஆவணங்கள் இணைத்து விண்ணப்பித்தேன். அவர்கள் தந்த ஏற்புச் சீட்டில் 30.04.2012 தேதிக்குள், வரி மாற்றித் தருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பிட்ட அந்த தேதியிலிருந்து நேற்று வரை 25 முறை நான் அலைக்கழிக்கப்பட்டு, இறைவன் அருளால், ஏறத்தாழ 72 நாள்கள போராட்டத்திற்கு பிறகு வரி விதிப்பு செய்த இரசீதை இன்று தான் கிடைக்க பெற்றேன். என்னை போல இங்கு நகராட்சி வரி விதிப்பு அலுவலர்களால் அலைக்கழிக்கப்படும் அப்பாவிகள் ஏராளம். இது போன்ற அலுவலர்களின் அராஜக செயல்களை கண்டித்து நமதூரின் அனைத்து பொது நல அமைப்பினரும் கேள்விகள் கேட்க முன் வர வேண்டும்." என்று மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்தார்.

    இது குறித்து மற்றொரு பாதிக்கப்பட்ட நபரான நடுத் தெருவைச் சேர்ந்த ஹாமீது இபுறாகீம் அவர்கள் கூறும் போது "நானும் வீட்டு வரி மாறுதல் செய்ய 16.02.2012 அன்று விண்ணப்பித்தேன். நான் எங்கே மன நோயாளியாகி விடுவேனோ ? என்று அச்சப்படும் வண்ணம் 30 க்கும் மேற்பட்ட தடவை சரியான பதில் கூறாமல் அலைக்களிப்புக்கு உள்ளாகி,  நகராட்சி தலைவர் அளவுக்கு புகார் தெரிவித்ததின் பேரில் சுமார் 55 நாள்களுக்கு பிறகு தீர்வு கிடைத்தது. நான் ஒவ்வொரு முறையும் என் மனு குறித்து விசாரிக்க செல்லும் போதெல்லாம், வரி விதிப்பு அலுவலர்கள் அவர்களுக்கான இருக்கையில் அமர்ந்திருப்பதில்லை. தலைமை அலுவலரிடம் கேட்டால், 'அலுவலக பணி நிமித்தமாக மதுரையில் மீட்டிங்கில் இருக்கிறார். இராமநாதபுரம் கலக்டர் அலுவலகம் சென்றிருக்கிறார்' என்ற பதிலே வருகிறது. வாரத்தில் நான்கு நாள்களா...! வெளியே அரசுப் பணி ?? என்று தெரிய வில்லை.
    .

    "ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல"

    ஒரு வேலை அவர்களை கண்டு பிடித்து, என் மனு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கேட்டால் எகத்தாளமான பதிலே வருகிறது. இவர்களின் நடவடிக்கைகள் அத்தனையும் மறைமுகமாக இலஞ்சப் பணத்தை எதிர்நோக்கியே இருப்பதாக எண்ணத் தோன்றுகிறது. அவர்கள் PROPER CHANNAL மூலமாக வரச் சொல்கிறார்கள். அதாவது கவுன் 'சிலர்' புரோக்கர்கள் வழியாக வரச் சொல்கிறாகள். இது போன்ற தரித்திரங்களை நகராட்சியிலிருந்து களை எடுக்காத வரை, ஒரு வேலையும் நியாயமாக நடக்காது." என்று பொரிந்து தள்ளினார்.

    இது குறித்து கீழக்கரை நகர் மக்கள் விழிப்புணர்வு நல சங்கத்தின் (K.M.M.S) தலைவர் ஜமால் அசரப் அவர்கள் கூறும் போது "தொடர்ந்து எங்களுக்கு நகராட்சி வரி விதிப்பு அலுவலர்களின்  முறையற்ற போக்கு குறித்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் மனு அளித்ததின் பேரில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், ஒவ்வொரு மனுவும் எந்தெந்த அலுவலரின் மேஜையில் எத்தனை நாள்கள் இருந்தது? நீண்ட கால தாமதத்திற்கான காரணம் என்ன? வீட்டு வரி மாற்றத்திற்கான உரிய கால அவகாசம் எவ்வளவு? போன்ற கேள்விகளை கேட்டிருக்கிறோம். அவர்கள் தரும் பதில்கள் அடிப்படையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுப்போம்." என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

    இது குறித்து கீழக்கரை நகராட்சித் தலைவர் ராவியத்துல் கதரியா அவர்களிடம் கேட்ட போது "பாதிக்கப்பட்டவர்கள் எங்களிடம் புகார்கள் தந்திருக்கிறார்கள். இவர்கள் மீது நீண்ட காலமாக பல புகார்கள் இருக்கிறது. ஆணையரிடம் கலந்தாய்வு செய்து, தவறுகள் நடந்திருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட வரி விதிப்பு அலுவலர்கள் மீது துறைசார் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும்" என்று தெரிவித்தார்.




    இந்த அலைக்கழிப்புகள் அத்தனையும் இலஞ்சப் பணத்திற்காகவே நடைபெறுவதாக அப்பட்டமாக தெரிகிறது. ஆகவே இந்த இலஞ்சப் பேர்வழிகளும், இவர்களுக்கு உடந்தையாக முழு நேரப் பணியாற்றும் கவுன் 'சிலர்' புரோக்கர்களும், பகல் கொள்ளையாக, இலஞ்சம் பெறுவதற்கு பதிலாக, தங்கள் குடும்பத்தாருடனும், குழந்தை குட்டிகளுடனும் தெருத் தெருவாக திருவோடு ஏந்தி, பிச்சை எடுக்கும் படி எங்கள் கீழை இளையவன் வலை தளம் சார்பாக அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

    அரசாங்கம் அள்ளி வழங்கும் சமபளத்தை விடுத்து.. கிம்பளத்தை எண்ணாதே ! இலஞ்சம் வாங்காதே.. பிச்சை எடு..

    Thursday 7 June 2012

    கீழக்கரையில் நடைபெற்ற மரம் நடும் விழா நிகழ்ச்சி - பொது நல அமைப்பினர்கள் பங்கேற்பு !

    நம் கீழக்கரை நகரில் மக்கள் தொகை உயர்ந்து வருவதாலும், கட்டப்படும் புதிய வீடுகளின் எண்ணிகை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதாலும், நிழல் தரும் மரங்களும், தோட்டங்களும் அழிக்கப்பட்டு வருகிறது.  பண்டைய காலங்களில் எழில் கொஞ்சும் கடற்கரை நகரமாக திகழ்ந்த நம் கீழக்கரை, மரங்களற்ற பாலை நிலமாக மாறி விடுமோ ? என்ற அச்சப்பட தோன்றுகிறது. இதனை தடுக்கும் நல்ல நோக்கோடு  மரக் கன்றுகளை நட்டு பராமரிக்க பல்வேறு சமூக நல அமைப்பினரும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.




    இதன் முதற்கட்டமாக, கீழக்கரை நகராட்சித் துணைத் தலைவர் ஜனாப்.ஹாஜா முஹைதீன் அவர்கள் தலைமையில் கீழக்கரை மக்கள் விழிப்புணர்வு நல சங்கம் (K.M.M.S) மற்றும் கீழக்கரை முஸ்லீம் அரக்கட்டளையினரின் முயற்சியில், வேம்பு, வாவரசு, புங்கை, வாகை உள்ளிட்ட 22 நிழல் தரும் மரங்களை, கீழக்கரை புதிய கடல் பாலம் பகுதியில் நட்டு பராமரிக்க முன் வந்துள்ளனர்.




    இதற்கான மரக் கன்றுகள் நடும் விழா இன்று (07.06.2012) காலை 10 மணியளவில் கலங்கரை விளக்கம் பகுதியில் நடை பெற்றது. இந்த விழாவில் கீழக்கரை மக்கள் நல பாதுகாப்புக் கழகத்தினர், கீழக்கரை நுகர்வோர் சமூக நல சங்கத்தினர், கீழக்கரை காவல் துறை சார்பு ஆய்வாளர் (பொறுப்பு), பெரும்பாலான வார்டு கவுன்சிலர்கள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.




    தற்போது எங்கு நோக்கினும் "சுற்றுச் சூழலைப் பாதுகாப்போம்", "புவி வெப்பமயமாதல்" "மரம் வளர்ப்போம்", "இயற்கையைக் காப்போம்", "இயற்கையை நேசி" "இயற்கையோடு வாழ்வோம்", "பசுமைக் குடில் வாயுக்கள்" என்றெல்லாம் முழக்கங்கள் ஓயாது ஒழித்துக் கொண்டே இருக்கிறது. காரணம்... புவி வெப்பம் அடைந்து மனிதன் அழிவை நோக்கி செல்ல வேண்டிய கட்டாயமாகிவிட்டது. இதனை தவிர்க்கவே மனித மனங்கள் இயற்கை பக்கம் வேகமாக திரும்பியிருக்கின்றது.




    எனவே புவி வெப்பமயமாவதைத் தடுக்கும் முக்கிய காரணியாக இருக்கும் மரங்களை வளர்க்க நம் நகரவாசிகள் முன் வர வேண்டும். இது இன்றைய இன்றியமையாத அவசியமாகயிருக்கின்றது. "வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்" என்ற நிலைமாறி "ஆளுக்கொரு மரம் வளர்ப்போம்" என்று பேசும் நிலைக்கு வந்துள்ளோம். எனவே இன்று இயற்கை அழிவை காக்க, வெப்பம் தவிர்க்க முதற்காரணியாக மரங்களை நட்டு வளர்க்க வேண்டும் என்ற உணர்வை நாம் அனைவரும் பெறுவோம்.

    Wednesday 6 June 2012

    கீழக்கரை நகராட்சி சார்பில் நடை பெற உள்ள நகர்ப் புற இளைஞர்களுக்கான 'இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி' !

    கீழக்கரை நகராட்சி ஆணையர் (கூடுதல் பொறுப்பு) முஜீபுர் ரஹ்மான் அவர்கள் வெளியிட்டுள்ள கவுன்சிலர்களுக்கான சுற்றறிக்கையில் பின் வரும் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும், வறுமைக்கோட்டு பட்டியலில் கண்டுள்ள, 18 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில் (பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற / தோல்வி அடைந்த அல்லது அதற்கும் மேல் தகுதி உள்ள) நகர்ப் புற இளைஞர்களுக்கான 'இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி' அளிக்கப்பட உள்ளது.



    அதற்கான பயனாளிகளை தேர்வு செய்யும் சிறப்பு முகாம் நம் நகராட்சி வளாகத்தில் எதிர் வரும் 09.06.2012 மற்றும் 10.06.2012 தேதிகளில் (சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில்) நடை பெற இருக்கிறது. இந்த முகாமில் தேர்வு பெறுபவர்களுக்கு பின் வரும் கணினி மென்பொருள் வகுப்புகள் நடத்தி சான்றிதழ்கள் வழங்கப்பட இருக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள் 

    • DIPLOMA IN BUSINESS ACCOUNTING APPLICATION
    •  COMPUTER FUNDAMENTALS
    •  MS OFFICE PACKAGE
    •  INTERNET, SOFT SKILLS  & DTP
    • COMPUTER HARDWARE & NETWORKING
    • ARCHITECTURAL & CIVIL 2D DRAFTING
    • AUTO CAD

    ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் கீழக்கரை நகர் சுற்று வட்டாரங்களில் உள்ள 'கிராமப் புற' இளைஞர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி சிறப்பாக நடைபெற்று 50 க்கும் மேற்பட்டோர் பயனடைந்தது குறிப்பிடத்தக்கது.

    இது குறித்து நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த செய்தி
    http://www.keelaiilayyavan.blogspot.in/2012/03/blog-post_4867.html 

    மேலும் இது குறித்த தகவல்கள் பெற கீழக்கரை நகராட்சியை 04567 - 241317 என்ற தொலை பேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். 
     
    இந்த நல்ல வாய்ப்பினை நழுவ விடாமல், நம் பகுதி இளைஞர்கள் மற்றும் இளைய சமுதாயத்தினர்கள்,  நகராட்சி நடத்தும் முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு எங்கள் கீழை இளையவன் வலை தளம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

    Monday 4 June 2012

    கீழக்கரை நகரில் இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி மாணவி முதலிடம் பெற்று சாதனை !

    நம் கீழக்கரை நகர் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் S.S.L.C தேர்வுகளை எழுதி, முடிவுகளுக்காக காத்திருந்த 1500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளின் எதிர் கால பாதையை தீர்மானிக்கும் விதமாக, இன்று பிற்பகல் 1.30 மணியளவில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.  இது வரை பெறப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், இஸ்லாமியா மெட்ரிகுலேசன் பள்ளி மாணவி. முஹம்மது ஹபீஷா 480 மதிப்பெண்கள் பெற்று கீழக்கரை பள்ளி மாணவ, மாணவிகளில் முத‌லிட‌ம் பெற்றுள்ளார்.


    இதில் இஸ்லாமியா மெட்ரிகுலேசன் பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. ஏற்கனவே பிளஸ் டூ தேர்விலும் இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த பள்ளியில் 85 பேர் தேர்வெழுதி அனைவரும் தேர்வு பெற்று 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவி ஆர். வர்ஷினி 478 மதிப்பெண்கள் பெற்று 2 ஆம் இடம் பெற்றுள்ளார். மாணவி. இர்ஷாத் பாத்திமா 476 பெற்று  மூன்றாமிடம் பெற்றுள்ளார்.


    இது தவிர கீழக்கரை நகரில் மஹ்தூமியா பள்ளி, ஹமீதியா பெண்கள் பள்ளி ஆகியவை 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. ஹமீதியா மெட்ரிக் பள்ளியில் 477 அதிக‌ மதிப்பெண்ணாகவும் 94 % தேர்ச்சியும் பெற்றுள்ளது. ஹமீதியா ஆண்கள் உயர்நிலை பள்ளியில் 417 அதிக‌ மதிப்பெண்ணாகவும் 93 %  தேர்ச்சியும் பெற்றுள்ளது. ஹமீதியா பெண்கள் பள்ளியில் 453 அதிக‌ மதிப்பெண்ணாகவும் 100 % தேர்ச்சியும் பெற்றுள்ளது.

    முஹைதீனியா மெட்ரிக் பள்ளியில் 464 அதிக‌ மதிப்பெண்ணாகவும் 94 % தேர்ச்சியும் பெற்றுள்ளது. மஹ்தூமியா பள்ளியில் 450 அதிக‌ மதிப்பெண்ணாகவும் 100 % தேர்ச்சியும் பெற்றுள்ளது. கீழக்கரை கிழக்குத் தெரு கைராத்துல் ஜலாலியா மேனிலைப்பள்ளி 94 சதவீத தேர்ச்சியுடன் இருக்கிறது. மாணவர். ஹிக்மத்துல்லா 436 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார்.

    வெற்றி பெற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் எங்கள் கீழை இளையவன் வலை தளம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

    தமிழகமெங்கும் இன்று வெளியாகும் 'பத்தாம் வகுப்பு' தேர்வு முடிவுகள் - இணைய தளங்களில் காண ஏற்பாடு !

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 11 லட்சம் மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பு தேர்வுகளை எழுதியுள்ளனர். கடந்த ஏப்ரல் 4-ந் தேதி தொடங்கிய பத்தாம் வகுப்பு தேர்வுகள் 23-ந் தேதி வரை நடைபெற்றது. இதையடுத்து விடைத்தாள்களைத் திருத்தும் பணி விரைவாக நடந்து முடிவடைந்த நிலையில், தற்போது தேர்வு முடிவுகள் இன்று (04.06.2012) பிற்பகல் 1.30 மணிக்கு வெளியாகும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ் நடந்த முதல் தேர்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.

     


    இந்த தேர்வை பள்ளிகள் மூலம் நேரடியாக 10,84,575 மாணவர்களும்,  தனிர்வாளர்களாக 19,575 பேரும் எழுதி உள்ளனர். நம் கீழக்கரை நகரிலும், அதன் சுற்று வட்டாரங்களிலும் 4 தேர்வு மையங்களில் சுமார் 1500 க்கும் மேற்ப்பட்ட மாணவ மாணவிகள் தேர்வெழுதி, முடிவுக்காக காத்திருக்கின்றனர்.

    தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள கீழ் காணும் ஏதேனும் ஒரு  இணையதள முகவரியை கிளிக் செய்து காணலாம்.






    மறுகூட்டல்:

    அனைத்துப் பாடங்களுக்கும் மதிப்பெண் மறுகூட்டல் செய்ய விரும்பும்  மாணவர்கள், 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பம், மாவட்ட கல்வி அலுவலகங்கள், முதன்மைக் கல்வி அலுவலகங்கள் மற்றும் மண்டல தேர்வுத் துறை துணை இயக்குனர் அலுவலகங்களில் வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் திருப்பி ஒப்படைக்க வேண்டும்.



    கட்டணம் எவ்வளவு?:

    பழைய மற்றும் புதிய பத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தின் கீழ், மொழிப் பாடங்களுக்கு 305 ரூபாய்; இதரப் பாடங்களுக்கு 205 ரூபாய். பழைய ஓ.எஸ்.எல்.சி., திட்டத்திற்கும், இதே கட்டணம் பொருந்தும். மெட்ரிக் பாடத் திட்டத்தில், ஒவ்வொரு பாடத்திற்கும் 305 ரூபாய். ஆங்கிலோ இந்திய பாடத்திட்டத்திற்கு, மொழிப்பாடத்திற்கு 205 ரூபாயும், இதரப் பாடங்களுக்கு 305 ரூபாயும் செலுத்த வேண்டும்.



    மதிப்பெண் பட்டியல்:

    பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு, 21ம் தேதி, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் மூலம், மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும். தனித் தேர்வர், தாங்கள் தேர்வெழுதிய மையங்களுக்குச் சென்று பெற்றுக் கொள்ளலாம். பிளஸ் டூ வகுப்பு போலவே, இந்த ஆண்டு முதல்  பத்தாம்  வகுப்பு மாணவர்களுக்கும் போட்டோவுடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது. 

    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை மிகுந்த எதிர்பார்ப்புடன், எதிர் நோக்கி காத்திருக்கும் மாணவ மாணவிகள் அனைவருக்கும் எங்கள் கீழை இளையவன் வலை தளம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.