தேடல் தொடங்கியதே..

Saturday 14 July 2012

கீழக்கரை ரோட்டரி சங்கத்தின் புதிய தலைவராக இஞ்சினீயர் ஆசாத் பதவியேற்பு - சிறப்பான நலத் திட்டங்கள் அறிவிப்பு !

கீழக்கரை ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா, நேற்று முன் தினம் உசைனியா மஹாலில் சிறப்பாக நடைபெற்றது.  இந்த விழாவில் கடந்த ஆண்டின் தலைவர் செய்யது இபுராகிம் தலைமை வகித்தார். மாவட்ட ஆளுநர் ஜெசிய வில்லவராயர், மாவட்ட ரோட்டரி துணை ஆளுநர் சின்னத்துரை அப்துல்லா, கீழக்கரை ரோட்டரி பட்டயத் தலைவர். முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர். அலாவுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.




புதிய தலைவராக இஞ்சினீயர் ஆசாத் ஹமீது மற்றும் செயலாளராக சுப்பிரமணியன் ஆகியோருக்கு மாவட்ட ரோட்டரி ஆளுநர் ஜெசிய வில்லவராயர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.  'ஆல் இந்தியா ரேடியோ  - மதுரை கோடை பண்பலை புகழ்' திரு. சவித்ரா ராஜாராம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.




இந்த நல்ல நிகழ்ச்சியில், பொதுமக்களின் நலனை முன்னிறுத்தி பல்வேறு நலத் திட்டங்கள் செயலாக்கம் பெற்றது. குறிப்பாக கீழக்கரை - இராமநாதபுரம் சாலை வண்ணாந்துறை வளைவில் ஒளிரும் எச்சரிக்கை பலகைகள் அர்ப்பணித்தல், நகரின் அனைத்து வீடுகளின் வாசல்களிலும், கதவு எண், மின்சார இணைப்பு மற்றும் கேஸ் இணைப்பு எண்களை குறிப்பிடும் விதமான ஸ்டிக்கர்கள் வழங்குதல், இலவச தையல் இயந்திரம் வழங்குதல் மட்டுமல்லாது, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர் மற்றும் சிறந்த ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.




நிகழ்ச்சியில் ராமநாதபுரம் ரோட்டரி சங்க பட்டய தலைவர் திரு. ரவிசந்திர ராமவன்னி உட்பட கீழக்கரை சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். ரோட்டரி பட்டய செயலாளர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார். புதிய தலைவராக பொறுப்பேற்றிருக்கும் ஜனாப்.இஞ்சினீயர் ஆசாத் ஹமீது அவர்களின் தலைமையிலான கீழக்கரை ரோட்டரி சங்கத்தின் பணிகள் மென் மேலும் சிறக்க, கீழை இளையவன் வலை தளம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம.

Thursday 12 July 2012

கீழக்கரையில் கார் விபத்தில் காலமான செய்தி- விபத்துக்களும், விழிப்புணர்வுகளும் !

கீழ‌க்க‌ரை மேல‌த்தெரு புதுப் பள்ளிவாசல் ஜமாத்தை சேர்ந்த மர்ஹூம் ஜனாப். N.D.M.முஹம்மது காசீம் மரைக்காயர் அவர்களின் மகனும் ஜனாப். சித்தீக் தம்பி அவர்களின் மருமகனுமாகிய யாசீன் சுப்யான் அவர்கள் காரில், தஞ்சாவூரிலிருந்து  கீழக்கரை நோக்கி வந்து கொண்டிருந்த போது, நடு இரவு சுமார் 2 மணியளவில் தொண்டி அருகிலுள்ள உப்பூர் அருகே வாக‌ன விப‌த்தில் வபாத்தாகி விட்டார்கள் .

(இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்.)


அன்னாரின்  ஜனாஸா இன்று (12.07.2012) மேலத் தெரு புதுப்பள்ளி மைய வாடியில் இஷா தொழுகைக்குப் முன்னர் 8 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவர்களின் மஹ்பிரத்துக்காகவும்,  ஜன்னத் பிர்தௌவ்ஸில் நற்பதவி கிடைக்கவும், அன்னாரின் பிரிவால் வாடும் உள்ளங்களுக்கு சபூர் தன்மை கிடைக்கவும் படைத்த வல்ல ரஹ்மானிடத்தில் துவா செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.


விபத்துக்களும், விழிப்புணர்வுகளும் ! 

மீபகாலாமாக விபத்துக்களை பற்றி கேட்கும் போதே கண்களில் நீர் வருகிறது. அந்த அளவிற்கு விபத்துக்கள் நடந்து கொண்டு இருக்கின்றது. இதற்கு முன் விபத்துக்கள் எல்லாம் லாரியும், பேருந்தும் நேருக்கு நேர் மோதல் என்றும் சாலையோர மரத்தில் மோதியது என்றும் தான் அதிகம் நடந்து கொண்டு இருந்தது.

ஆனால் தற்போது இரவு நேரங்களில் தமிழகத்தில் நடக்கும் சாலை விபத்துக்களில், நின்ற லாரியில் மீது வாகனங்கள் மோதி உயிர் இழப்பது சர்வ சாதாரணமாகி விட்டது.... நேற்று நடந்த விபத்தின் சாரமும் அப்படித்தான் தெரிவிக்கின்றது. நெடுஞ்சாலை விபத்துக்கு முக்கிய காரணமாக, தூக்கம் இல்லாமல் தொடர்ச்சியாக வாகனம் ஓட்டுவதும் அடங்குகிறது.

ஒருவேளை லாரி முழுச் சுமையுடன் இருக்கும் போது, டயர் வெடித்து ரோட்டில் நின்றால் அதை எப்படி ஓரம் கட்டுவது.?? உண்மைதான் அதை ஒரம் கட்ட முடியாது தான்.. ஆனால்  லாரி பழுதாகி  நின்று விட்டது என்று பத்து மீட்டருக்கு முன் அறிவிப்பாக இரவு நேரத்தில் ஒளிரும் முக்கோண பிரதிபலிப்பான் (ரிப்ளெக்டர்) வைக்க வேண்டும்.. ஆனால் பழுதாகி நின்ற எந்த லாரிக்கு பின்னாலும் இப்படிபட்ட அறிவிப்பை நாம் எங்கும் பார்க்க முடிவது இல்லை...

பகல் நேரங்களை விட இரவு நேரங்களில் வாகனம் ஓட்டும் போது வேகத்தையும், தூரத்தையும் கணிப்பதில் பல சிரமங்கள் ஏற்படுகின்றன. தவிர, எதிரே வரும் வாகனங்களின் முகப்பு விளக்குகளின் வெளிச்சம் நம் கண்களை சில வினாடிகள் இருளாக்கி விடும். இதனால் இரவு நேரங்களில் அதிக விபத்துக்கள் நடக்கின்றன. பகல் நேரத்தைவிட இரவு நேரத்தில், விபத்துக்கள் மூன்று மடங்கு அதிகம் நிகழ்வதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

பகல் நேரத்தை போன்று இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு போதிய வெளிச்சமும், பார்வை திறனும் கிடைப்பதில்லை. வாகனத்தின் முகப்பு விளக்குகள் குறைந்த தூரத்திற்கு மட்டுமே வெளிச்சத்தை தருகின்றன. இதனால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் சாலையை கணித்து ஓட்டுவதில் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன. எனவே, இரவு நேர பயணங்களில் வாகன ஓட்டிகள் மிகவும் விழிப்புடன் செயல்படுவதற்கான சில முன் யோசனைகள்...


இரவு நேரங்களில் பாதுகாப்பான நெடுந்தூர பயணங்களுக்கான விழிப்புணர்வு தகவல்கள் 

•கார்களில் இரவு நேர பயணம் செல்வதை பெரும்பாலும், தவிர்த்து விடுங்கள். தவிர்க்க முடியாத காரணங்களால் செல்லும் போது, டிரைவர் இருந்தாலும் கார் ஓட்ட தெரிந்த மற்றொருவர் காரில் இருப்பது அவசியம். அவசர சமயங்களிலோ அல்லது டிரைவருக்கு அயர்ச்சி ஏற்பட்டாலோ மற்றொருவர் காரை ஓட்டலாம்.

•கார்களில் அடிக்கடி இரவு பயணங்கள் செல்லும் தேவை இருந்தால், வெள்ளை நிற காரில் செல்வது பாதுகாப்பானது. கார் வாங்கும் போதே இதை நினைவில் கொள்ளுங்கள். இரவில் சாலை ஓரங்களில் நிறுத்தினாலோ அல்லது இருளான பகுதிகளில் செல்லும்போதோ பின்னால் வரும் வாகன ஓட்டிகள் மற்றும் எதிரே வரும் வாகன ஓட்டிகளுக்கு வெள்ளை நிறம் கொண்ட கார் தெளிவாக தெரியும்.

•பவர் ஸ்டியரிங் மற்றும் அதிக எஞ்சின் திறன் கொண்ட கார்களை ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இரவில் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.

•இரவு நேர பயணத்தின் போது முகப்பு கண்ணாடிகள், முகப்பு விளக்குகள், பின்பக்கமுள்ள எச்சரிக்கை விளக்குகளை துடைத்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

•முகப்பு விளக்குகள் எதிரில் சரியான திசையில் ஒளிரும் வகையில் பொருத்தி இருக்க வேண்டும். இல்லையென்றால் உங்களுக்கு மட்டுமல்ல எதிரில் வாகன ஓட்டிகளுக்கும் சிரமத்தை ஏற்படுத்தும்.

•மது அருந்திவிட்டு இரவில் வாகனம் ஓட்டுவதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். ஆல்கஹால் தரும் ஒரு சில மணி நேர சந்தோஷம், ஒரு சில வினாடிகளில் உங்கள் உயிரையே பறித்து விடக்கூடும்.

•முன்னால் செல்லும் வாகனத்துக்கும், உங்கள் வாகனத்துக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்குமாறு பார்த்து வாகனத்தை ஓட்டுங்கள். மேலும், பின்தொடரும் போதும், எதிரில் வாகனம் வரும்போதும் முகப்பு விளக்கை டிம் செயது ஓட்டுங்கள்.

•தொடர்ந்து கார் ஓட்டுவதை தவிர்த்து விடுங்கள்.குறிப்பிட்ட தூரத்திற்கு ஒரு முறை காரை நிறுத்தி டீ,காபி அல்லது கூல் டிரிங்ஸ் குடித்து உடலை ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள்.

•எதிரில் அதிக வெளிச்சத்துடனும், அதிவேகமாகவும் வாகனங்கள் வருவதை உணர்ந்தால், வேகத்தை குறைத்து கவனமாக ஓட்டுங்கள்.

நள்ளிரவில் தூக்கம் வருவதாக தோன்றினால், பார்க்கிங் லே-பை அல்லது மக்கள் நடமாட்டமிக்க பகுதிகளில் காரை நிறுத்தி விட்டு குட்டி தூக்கம் போடுங்கள். அதன்பின், முகத்தை தண்ணீரில் நன்றாக கழுவிக்கொண்டு பயணத்தை தொடர்வது நல்லது.

•எதிர் திசையில் வாகனம் வருவது தூரத்தில் தெரிந்தாலும், முன்னால் செல்லும் வாகனத்தை அவசரப்பட்டு ஓவர்டேக் செய்ய வேண்டாம். இரவு நேரத்தில் எதிரில் வரும் வாகனம் தொலைவு மற்றும் வேகத்தை கணிப்பது கடினம். இது போன்று ஓவர்டேக் செய்வதால் தான் அதிக விபத்துக்கள் நிகழ்கின்றன.

காரில் இரவு பயணம் செல்லும்போது மேற்கண்ட சில எளிய வழிமுறைகளை பின்பற்றினால், உங்கள் இரவு பயணமும், (இறைவன் நாடினால்) மகிழ்ச்சியானதாகவே அமையும் என்பதில் எள் அளவும் ஐயமில்லை.

Tuesday 10 July 2012

கீழக்கரையில் நீரிழிவு நோயாளிக்கு 'O' POSITIVE' இரத்தம் தேவை - உடனடியாக உதவ வேண்டுகோள் !

கீழக்கரை தெற்குத் தெருவைச் சேர்ந்த, 70 வயதுள்ள அபுல் ஹசன் என்ற முதியவர், நீரிழிவு நோயின் கடுமையால்  பாதிக்கப்பட்டு, தற்போது இராமநாதபுரம் கனகமணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளார். இவருக்கு  O POSITIVE இரத்த வகை அவசரமாக தேவைப்படுகிறது.
 

உடனடியாக இரத்த தானம் செய்ய விரும்புபவர்கள் தங்கள் பெயரை கீழ் காணும் அலைப்பேசி எண்ணில் தெரிவிக்குமாறு, கீழை இளையவன் வலை தளம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

தொடர்புக்கு :           ஜனாப். நிஸ்பர்  -  93452 99090

          "இரத்த தானம் செய்வோம்.. மனித உயிர் காப்போம்" 

தமிழகத்தில் 1870 வி.ஏ.ஓ. பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு - கீழக்கரை பகுதி தேர்வர்கள் மகிழ்ச்சி !

தமிழகத்தில் காலியாகவுள்ள 1,870 கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நேற்று (09.07.2012) திங்கள்கிழமை வெளியிட்டுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10-ம் தேதி கடைசி நாளாகும். செப்டம்பர் 30-ம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் அவ்வப்போது காலியாகி வருகின்றன. கடந்த ஆண்டு பிப்ரவரியில் நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வின் மூலமாக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வி.ஏ.ஓ.க்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் அண்மையில் பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்த நிலையில், காலியாக உள்ள மேலும் 1,870 இடங்களுக்கு எழுத்துத் தேர்வின் மூலமாக ஆள்களைத் தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொடங்கியுள்ளது. 


விண்ணப்பிக்க கடைசித் தேதி:
எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பிக்க தேர்வாணையத்தின் இணையதளத்தை (http://www.tnpsc.gov.in/latest-notification.html) மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஏற்கெனவே நிரந்தரப் பதிவு எண் வைத்திருப்பவர்கள் அதையே பயன்படுத்தி வி.ஏ.ஓ. தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை இணையதளம் மூலம் அனுப்புவதற்கான கடைசித் தேதி ஆகஸ்ட் 10 ஆகும். வங்கி அல்லது அஞ்சலகங்கள் மூலம் கட்டணத்தைச் செலுத்த ஆகஸ்ட் 14-ம் தேதி கடைசி நாளாகும். செப்டம்பர் மாதம் 30-ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 வரை தேர்வு நடைபெறும். 



FILE PHOTO
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது 21 ஆகும். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் (அருந்ததியர்), பழங்குடியினர், மிகவும் பிற்பட்ட வகுப்புனர், சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்) மற்றும் அனைத்து வகுப்புகளைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோர் 40 வயது வரை தேர்வு எழுதலாம்.

பாடத் திட்டம்:
பொது அறிவுடன் தமிழ் அல்லது ஆங்கில மொழியில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். பொது அறிவு பகுதியில் இருந்து 100 வினாக்களும், பொதுத் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் இருந்து 100 வினாக்களும் கேட்கப்படும். தேர்வுக்குத் தகுதி பெற குறைந்தபட்ச மதிப்பெண்கள் 90 ஆகும். தேர்வுக் கட்டணமாக ரூ.125 செலுத்த வேண்டும்.  




V.A.O.தேர்வுக்கு விண்ணப்பிக்க பின் வரும்  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இனைய தள முகவரியை சொடுக்கி விண்ணப்பிக்கலாம்.

                                             தேர்வுக்கு விண்ணப்பிக்க

மேலும் விவரங்களுக்கு:
விண்ணப்பதாரர்களுக்கு ஏதேனும் விவரங்கள் தேவையெனில், தேர்வாணைய அலுவலகத்தை நேரடியாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ (044-2829 7591 மற்றும் 2829 7584), கட்டணமில்லாத சேவை எண்ணிலோ (1800 425 1002) தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த V.A.O தேர்வுக்கான அறிவிப்பினால், அரசு வேலையில் சேர கனவுகளுடன் காத்திருக்கும், படித்த இளைஞர்களுக்கு, பெரும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் இவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நம் கீழக்கரையை சார்ந்த V.A.O தேர்வுக்கு முயற்சிக்கும் தேர்வாளர்கள் அனைவரும், கடைசி நேர பர பரப்பை தவிர்க்கும் பொருட்டு, இப்போதே ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் இந்த செய்தியை வாசிக்கும் அன்பாளர்கள் அனைவரும், தேர்வுக்கு முயற்சிக்கும் பலருக்கும் சென்றடைய ஏதுவாக, நம் நண்பர்கள் அனைவருக்கும் இந்த பக்கத்தை பகிர்ந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

Monday 9 July 2012

கீழக்கரையில் ஜனாஸா ( மரண ) அறிவிப்பு !

கீழக்கரை நடுத் தெரு ஜூம்மா மஸ்ஜித் ஜமாத்தை சேர்ந்த, தம்பி நெய்னாப் பிள்ளை தெரு, மர்ஹூம் ஜனாப். செய்யது அப்துல் காதர், மர்ஹூம். ஜனாபா. செய்யது ராவியத்தும்மால் ஆகியோர்களின் மூத்த மகனும், ஜனாபா. ரைஹானா பேகம் அவர்களின் கணவரும், ஜனாபா.S.செய்யதலி பாத்திமா, ஜனாப்.S.ஹாமீது இபுறாஹீம், ஜனாப்.S.அஹமது இபுறாஹீம், ஜனாப். S.முஹம்மது இபுறாஹீம் (ஆலிமுசா), ஜனாப்.S.சுல்தான் இபுறாஹீம் ஆகியோர்களின் சகோதரரும், 

ஜனாப். M.அஹமது கஸ்ஸாலி, ஜனாப்.M.அப்துல் காதர், ஜனாபா. M.ஆயிசத் பர்கானா, ஜனாபா.M.தஸ்லிமா, ஜனாபா.M.பாத்திமா ஆகியோர்களின் தந்தையாரும், ஜனாப். A.M.D.ஹபீப் முஹம்மது மன்சூர், ஜனாப். A.M.D.முஹம்மது சாலிஹ் ஹுசைன் ஆகியோர்களின் சாச்சாவும் ஆகிய ஜனாப். S.முஹம்மது மௌலா தம்பி அவர்கள் இன்று (09.07.2012) மதியம்  சுமார் 1.30 மணியளவில், சவூதி அரேபியாவிலுள்ள ரியாத் நகரில் வாபாத்தாகி விட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்).



அன்னாரின்  ஜனாஸா நல்லடக்கம் நாளை (10.07.2012) சவூதி அரேபியாவில் உள்ள ரியாத் நகரில் நடை பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தொடர்புக்கு :

ஜனாப். S.ஹாமீது இபுறாஹீம்  - 0091 8870221922
ஜனாப்.S.அஹமது இபுறாஹீம் -00971 554026224
ஜனாப்.S.சுல்தான் இபுறாஹீம் - 00973 38464944
ஜனாப்.A.M.D. ஹபீப் முஹம்மது மன்சூர் - 00966 559307013

கீழக்கரை அருகே தனியாக வீடுகளில் இருக்கும் முதியவர்களை குறி வைக்கும் ஆசாமிகள் - உஷார் ரிப்போர்ட் !

கீழக்கரை அருகே உள்ள ஏர்வாடி தர்ஹா காட்டுப்பள்ளி பகுதியில், கடந்த வாரம் வீட்டில் தனியாக இருந்த,  கீழக்கரை சின்னக்கடை தெருவை சேர்ந்த சித்தி பரிதா பீவி, (வயது 65 ) என்பவரை தலையணையால் அமுக்கி, கொலை செய்து விட்டு நகை கொள்ளையடிக்கப்பட்டது. இது சம்பந்தமாக மூன்று பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இயற்கை மரணம் என்று கருதி இவரது உடலை, உறவினர்கள் அடக்கம் செய்தனர்.




இதற்கிடையே, மதுரை நகைக்கடையில் நகையை அடகு வைக்க சென்ற மூவரை, மதுரை போலீசார் சந்தேகத்தில் பிடித்து விசாரித்த போது, ஏர்வாடியில் மூதாட்டி கொலை செய்த விபரம் தெரிய வந்தது. மூவரும் ஏர்வாடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இவர்கள் மூவரும்  விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த அருணாச்சலம், 30, ராஜா, 28, மகேஸ்வரன், 32. எனபது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது, ஏர்வாடியில் வீட்டில் தனியாக இருந்த பரிதா பீவியின் முகத்தை தலையணையால் அமுக்கி, கொலை செய்துவிட்டு, நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.




இதன் காரணமாக, இதனை கொலை வழக்காக பதிவு செய்த ஏர்வாடி போலீசார், இன்று மதியம் 12 மணியளவில், கடற்கரைப்பள்ளி மைய வாடியில் அடக்கம் செய்யப்பட்டிருந்த மூதாட்டி பரிதா பீவியின் உடலை தோண்டி, அங்கேயே வைத்து பிரேத பரிசோதனை செய்து அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். போலீசாரால் முக்கிய கொலையாளி அங்கு கொண்டு வரப்பட்டு, பிரேதம் அடையாளம் காட்டப்பட்டது. பின்னர் மீண்டும் அதே இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனால் கீழக்கரை பகுதி மக்களிடையே சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாத வண்ணம், வீடுகளில் தனியாக இருக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் பின் வரும் அறிவுரைகளை கடைபிடிப்பது அவசியமாகிறது.


வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களுக்கு 12 அறிவுரைகள்

  1.  வீட்டில் பெண்கள் தனியாக இருக்கும்போது கதவை உள்பக்கம் பூட்டிக்கொள்ள வேண்டும். கதவை திறந்து போட்டுக்கொண்டு வீட்டு வேலைகளை செய்யக்கூடாது.
  2. வீட்டு கதவின் முன்புறம் கண்டிப்பாக `லென்ஸ்' பொருத்தினால் நல்லது. வீட்டின் மர கதவுக்கு முன்பாக கண்டிப்பாக இரும்பு கிரில் கதவுகள் பொருத்த வேண்டும்.
  3.  ஷாப்பிங் அல்லது மார்க்கெட் செல்லும்போது அங்கு புதிய நண்பர்கள் யாரிடமாவது பழக்கம் ஏற்பட்டால் உடனே அவர்களை வீட்டிற்கு அழைத்து வராதீர்கள்.
  4.  புதிதாக பழகுபவர்களிடம் வீட்டில் தனியாக இருக்கும் விஷயத்தையும் சொல்லாதீர்கள். தங்கள் கணவர்கள் எப்போது அலுவலகம் செல்வார்கள், எப்போது வீடு திரும்புவார்கள் என்பன போன்ற விஷயங்களையும், கணவர் வெளியூர் செல்லும் விஷயங்களையும் புதிதாக பழகுபவர்களிடம் பெண்கள் சொல்லக்கூடாது.
  5. வீடுகளில் தனியாக இருக்கும் இளம் பெண்கள் தற்காப்பு கலைகளான கராத்தே போன்ற கலைகளை கற்றுக்கொண்டால் நல்லது. திடீரென்று கொள்ளையர்களாக மாறும் நண்பர்களை சாதுர்யமாக சமாளிக்க வேண்டும். நகைகளை கொடுக்கமாட்டேன் என்று சத்தம் போட்டு ஆபத்தை வரவழைப்பதைவிட, கொள்ளையர்களிடம் புத்திசாலித்தனமாக பேசி அவர்களை வீட்டிற்குள் தள்ளி கதவை பூட்டிவிடலாம். அல்லது மிளகாய் பொடி போன்ற பொருளை கொள்ளையர்களின் கண்ணில் தூவி சமாளிக்கலாம்.
  6. அறிமுகம் இல்லாத நபர்களையோ, அல்லது ஓரளவு தெரிந்த நபர்களையோ சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக வீட்டிற்குள் அனுமதிக்க நேர்ந்தால் அவர்கள் குடிநீர் கேட்டால் கொடுக்காதீர்கள். அவர்கள் எதற்காக வந்தார்களோ அந்த விஷயத்தை மட்டும் பேசிவிட்டு உடனடியாக வெளியே அனுப்பி விடுங்கள்.
  7. வீட்டு வேலைக்காரர்கள், கார் டிரைவர்கள், சமையல்காரர்களை நியமிக்கும்போது அவர்களின் பெயர் உள்பட முழு விவரங்களையும் சேகரிக்க வேண்டும். அவர்களுடைய புகைப்படம் மற்றும் கைரேகையை எடுத்து வைப்பதும் நல்லது. கைரேகையை எடுத்து வைத்தால் திருடும் எண்ணமுள்ள வேலைக்காரர்கள் கூட பயந்து போய் திருடமாட்டார்கள்.
  8. வீடுகளில் வயதான பெண்கள் தனியாக இருக்கும் நிலை ஏற்பட்டால் பணம் மற்றும் நகைகளை வங்கி லாக்கரில் கண்டிப்பாக வைக்க வேண்டும். யாராவது மர்ம நபர்கள் புகுந்து வயதான பெண்களை எளிதில் ஏமாற்றி நகை மற்றும் பணத்தை எடுத்து செல்வதை இதன் மூலம் தடுக்கலாம்.
  9. அடுக்குமாடிகள் மற்றும் பங்களா போன்ற வீடுகளில் வசிக்கும் பெண்கள் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் நட்போடு பழக்கம் வைத்துக்கொண்டால் ஆபத்து நேரங்களில் பக்கத்து வீட்டுக்காரர்கள் உதவி செய்ய வாய்ப்பாக இருக்கும்.
  10. ஜோதிடர்கள், குறி சொல்பவர்கள், போலி சாமியார்கள், நகை பாலிஷ் போடுபவர்கள், பழைய பொருட்கள் வாங்குபவர்கள் போன்ற நபர்களை, தனியாக இருக்கும் பெண்கள் தங்கள் வீட்டிற்குள் அனுமதிக்க கூடாது. பால்காரர், பேப்பர்காரர், காய்கறி விற்பவர், கேபிள் டி.வி. ஆபரேட்டர், சமையல் கியாஸ் சிலிண்டர் கொண்டு வருபவர், சலவைகாரர் போன்றவர்களின் பெயர்கள், அவர்களது முகவரி போன்றவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும். அவர்களை பெரும்பாலும் வீட்டிற்குள் அனுமதிக்காமல் இருப்பது நல்லது. வெளியில் வைத்தே காரியத்தை முடித்துவிட்டு, அவர்களை அனுப்பிவிடுவது சால சிறந்தது.
  11. அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக இருக்கும் பெண்களை, பார்வையாளர்கள் யாராவது பார்க்க வந்தால், அவர்களை காவலாளிகள் நன்கு விசாரிக்க வேண்டும். அந்த பார்வையாளர்களின் பெயர், முகவரி போன்ற விவரங்களை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். பார்வையாளர்கள் வந்திருக்கிறார்கள் என்ற விஷயத்தை சம்பந்தப்பட்ட பெண்ணிடம் தகவல் சொல்லி அவர்கள் அனுமதித்தால் மட்டுமே பார்வையாளர்களை வீட்டுக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும்.
  12. ஒவ்வொரு வீட்டிலும் அருகிலுள்ள போலீஸ் நிலைய தொலைபேசி எண், தீயணைப்புத்துறை டெலிபோன் எண், அவசர போலீஸ் தொலைபேசி எண், அல்லது தங்களுக்கு தெரிந்த போலீஸ் துறையில் பணிபுரியும் அதிகாரிகளின் தொலைபேசி எண் போன்றவற்றை ஒரு டைரியில் எழுதி வைத்திருக்கலாம். அல்லது டெலிபோன் எண்களை ஒரு பேப்பரில் எழுதி சுவரில் ஒட்டி வைத்திருக்கலாம். ஆபத்து காலங்களில் இந்த டெலிபோன் எண்கள் மூலம் தொடர்பு கொண்டு உதவி கேட்பதற்கு வசதியாக இருக்கும்.
  13. கீழக்கரை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில், இது போன்ற அசம்பாவித சம்பவங்கள் நிகழும் போது தகவல் தெரிவிக்க வேண்டிய தொலை பேசி எண்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

    கீழக்கரை காவல் நிலைய தொலைபேசி எண் : 04567 - 241272
    காவல் ஆய்வாளர் திரு. இளங்கோவன் : 90438 33408
    சார்பு ஆய்வாளர் திரு. கார்மேகம் : 94434 95524

நகராட்சி ஆணையர், சார் பதிவாளர் உள்ளிட்ட 3631 பணியிடங்களுக்கான 'குரூப் 2 தேர்வு' - விண்ணப்பிக்க 13.07.2012 கடைசி நாள் !

TNPSC குரூப் 2 தேர்வின், முதற்கட்ட தேர்வு ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு டி.என்.பி.எஸ்.சி., தேர்வு (ஒருங்கிணைந்த சார்பு நிலைப் பணி - CSSE I) மூலம் மொத்தம் 3 ஆயிரத்து 631 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்காக வரும் ஜூலை மாதம் 13ம் தேதி (வெள்ளிக் கிழமை) வரை டி.என்.பி.எஸ்.சி., இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



நகராட்சி ஆணையர், சார்பதிவாளர், உதவிப் பிரிவு அலுவலர்கள், இள நிலை வேலை வாய்ப்பு அலுவலர்கள், தணிக்கை ஆய்வர், கூட்டுறவு சங்கங்களின் முது நிலை ஆய்வர், வருவாய் ஆய்வாளர்கள் உள்ளிட்ட உயர்  பதவிகளுக்கான 3631 பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கிறது. இதற்கு கல்வித் தகுதியாக, ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. சார்பதிவாளர் பதவிக்கு விண்ணப்பிக்க குறைந்த பட்சம் 20 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.


TNPSC தேர்வுக்கான அட்டவணையுடன் திரு நடராஜன் IPS

மேலும் இது குறித்த முழு விபரங்களுக்கு கீழ் காணும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணலாம்.

                                    அதிகாரப்பூர்வ இனைய தள முகவரி
                                            http://www.tnpsc.gov.in/latest-notification.html                 

தேர்வுக்கு விண்ணப்பிக்க பின் வரும்  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இனைய தள முகவரியை சொடுக்கி விண்ணப்பிக்கலாம்.

                                         தேர்வுக்கு விண்ணப்பிக்க
                                                   http://tnpscexams.net/

நம் கீழக்கரையை சார்ந்த TNPSC குரூப் 2 தேர்வுக்கு முயற்சிக்கும் தேர்வாளர்கள் அனைவரும், உடனடியாக, இப்போதே ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும் இந்த செய்தியை வாசிக்கும் அன்பாளர்கள் அனைவரும், தேர்வுக்கு முயற்சிக்கும் பலருக்கும் சென்றடைய ஏதுவாக, நம் நண்பர்கள் அனைவருக்கும் இந்த பக்கத்தை பகிர்ந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

Sunday 8 July 2012

கீழக்கரை நகராட்சியில் தொடரும் கூச்சல், குழப்பங்கள் - தீர்வு தான் என்ன ?

நம் கீழக்கரை நகராட்சியில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு, புதிய நகர் மன்றம் பொறுப்பேற்ற தருணத்திலிருந்தே, மன்ற உறுப்பினர்களுக்குள் கூச்சல்களும், குழப்பங்களும் தொடர்ந்து நடந்தேறிக் கொண்டிருக்கிறது. நகர சபை கூட்டங்களும் பெரும்பாலும் அமளியிலே முடிவடைந்துள்ளது. இதனால் நகரின் பல அத்தியாவசியப் பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நகாரட்சி அலுவலர்களும் பொது மக்களை அலைக்கழிக்கும் போக்கை கடைப்பிடித்து வருகின்றனர். நகராட்சி அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தினை குப்பையில் கிடத்தும் அவலம் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இதனால் பொது மக்கள் மிகுந்த அதிருப்தி அடைந்துள்ளனர்.




இதற்கிடையே கீழ‌க்க‌ரை நகர சபை நிர்வாகத்தில் இலட்ச்சக்கனக்கில் ஊழ‌ல் ந‌டைபெறுவ‌தாக‌வும், நகராட்சி ஆணையர்  உள்ளிட்டோர் இதில் ச‌ம்ப‌ந்த‌பட்டிருப்ப‌தாக‌வும், ம‌க்க‌ள் ப‌ண‌ம் வீண் விரயமாக்கப்பட்டு கொண்டிருப்பதாகவும்  அச்சிட்டப்பட்டுள்ள பேன‌ர்க‌ளை கைக‌ளில் பிடித்த‌வாறு நேற்று முன் தினம் 1.45 மணியளவில் ந‌டுத்தெரு ஜீம்மா ப‌ள்ளி முன் புறம் க‌வுன்சில‌ர்கள் இடிமின்ன‌ல் ஹாஜா, முகைதீன் இபுறாகீம் ஆகியோர் நின்று கொண்டிருந்த‌ன‌ர். ஜீம்மா தொழுகை முடிந்து ஏராளாமானோர் வீடு திரும்பி கொண்டிருந்த நேரமாதலால், பலர் இவர்கள் கைகளில் ஏந்திய வாசகங்களை படித்து திகைப்பில் ஆழ்ந்தவாறு சென்றனர்.




அடுத்ததாக கீழக்கரை நகராட்சி கூட்டம் கூட்டரங்கில் மாலை 4 மணியளவில் துவங்கியது. நகராட்சி தலைவர் ராவியத்துல் காதரியா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் துணை தலைவர் ஹாஜா முகைதீன், அலுவலக மேலாளர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையர் (கூடுதல் பொறுப்பு) முஜீபுர் ரஹ்மான் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இதனால் கூட்டத்தின் ஆரம்பமே சலசலப்புடன் துவங்கியது. பின்னர் கவுன்சிலர் இடிமின்னல் ஹாஜா பேசும் போது சென்ற‌ கூட்ட‌த்தில் நிறைவேற்ற‌ப்ப‌ட்ட‌ தெருவிள‌க்கு டெண்ட‌ரில் க‌மிஷ‌ன‌ர் ஊழ‌ல் செய்துள்ளார் என்றும் த‌ர‌ம் குறைந்த‌ விள‌க்குக‌ள் ந‌க‌ருக்கு வ‌ந்துள்ள‌து என்றும் நேரடியாக குற்றம் சாட்டினார்.




கவுன்சிலர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளதாக வெளியான நோட்டீஸ் குறித்து 10வது வார்டு கவுன்சிலர் அஜ்மல்கான் உள்ளிட்ட க‌வுன்சில‌ர்க‌ளிடையே க‌டும் வாக்குவாத‌ம் ஏற்ப‌ட்ட‌து. இதில் 10வ‌து வார்டு க‌வுன்சில‌ர் அஜ்ம‌ல்கான் ஆபாச‌மாக‌ பேசியதாக கூறி க‌டும் எதிர்ப்பு தெரிவித்தோடு அஜ்ம‌ல்கான் ம‌ன்னிப்பு கேட்க‌ வேண்டும் என்று கோரி க‌வுன்சில‌ர்க‌ள் முகைதீன் இப்ராகிம்(18வ‌து வார்டு),சாகுல் ஹ‌மீது(வ‌து வார்டு),இடிமின்ன‌ல் ஹாஜா(20வ‌து வார்டு) ஆகியோர் ந‌க‌ராட்சி ம‌ன்ற‌ த‌ரையில் அம‌ர்ந்து போராட்ட‌ம் நட‌த்தின‌ர். இதை தொடர்ந்து அமைதியாக இருக்குமாறு நகராட்சி தலைவர் வலியுறுத்தி கொண்டிருந்தார்.ஆனால் தொடர்ந்து அமளி நிலவியதால் நகராட்சி தலைவர் சபையிலிருந்து வெளியேறினார். இதனால் நகருக்கு நலன் தரும் பல முக்கிய பொருள்கள் குறித்து விவாதிக்கப்படமலேயே அனைத்து தீர்மானங்களும் நிறைவேறியது.




இது குறித்து நகர சபை த‌லைவ‌ர் ராவிய‌த்துல் காத‌ரியா கூறிய‌தாவ‌து, "பெரும்பாலான உறுப்பினர்கள் தீர்மானங்களை ஆதரித்து உள்ளனர். ஒரு சில உறுப்பின‌ர்க‌ள் ம‌ட்டுதான் வேண்டுமென்றே பிர‌ச்சனை செய்து கொண்டு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். சபை ஒழுக்கங்கள் முறையாக பின்பற்றப்படாததாலும், தீர்மான‌த்தை படிக்க முடியாத அளவிற்கு அமளி நிலவியதாலுமே அங்கிருந்து வெளியே வர வேண்டிய சூழல் ஏற்பட்டது. தெருவிளக்கு டெண்டரில் நான் முன்னரே தற்போதைய ஒப்பந்ததாரரான மலானி & கோவிற்கு கொடுக்க வேண்டாம் என்றேன் இப்போது கொடுக்க வலியுறித்தியவர்களே எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். தொட‌ர்ந்து ஊருக்கான‌ ந‌ல‌ப்ப‌ணிக‌ளை த‌டுத்து வ‌ருவ‌து ந‌க‌ரின் வ‌ள‌ர்ச்சிக்கு உதவாது என்ப‌தை இவ‌ர்க‌ள் புரிந்து கொள்ள‌ வேண்டும்" என்று தெரிவித்தார்.

தீர்வு தான் என்ன ?

அனைத்து பிரச்சனைகளுக்கும் முழு முதற்காரணமாக இருப்பது, நம் கீழக்கரை நகருக்கு ஒரு நிரந்தர ஆணையர் இல்லாதது தான் என்பதை யாரும் மறுக்க முடியாது. தற்போதைய ஆணையர் கூடுதல் பொறுப்பு வகிப்பவராக இருப்பதால், நம் நகரை முழுமையாக கவனிப்பதில்லை. வாரம் ஒரு முறை மட்டும் நகருக்கு வலம் வந்து என்ன பயன் ?

இது குறித்து நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த செய்தி 

நிரந்தர ஆணையர் நம் நகராட்சி அலுவலகத்திலேயே இருக்கும் பட்சத்தில், நகரின் மேல் முழு அக்கறை கொண்டு செயல்பட ஏதுவாகும். டெண்டர் குறித்த விசயங்களை தீர ஆராய்ந்து, முறைப்படுத்த முடியும். இது குறித்து நகராட்சித் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு துறை ரீதியாக, முறையான அறிவுரைகள் வழங்க ஏதுவாகும்.

நகர் மன்ற உறுப்பினர்களுக்கு இடையேயான பிணக்குகளையும், மனக் கசப்புகளையும் நீக்கி, நம் நகரை வளப்படுத்த முடியும். ஆகவே நம் கீழக்கரை நகராட்சிக்கு, இது போன்ற ஒரு நல்ல பொதுநலன் பொருந்திய, அனுபவமிக்க நிரந்தர நகராட்சி ஆணையரை வெகு சீக்கிரம் நியமனம் செய்திட, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லும் பொருட்டு, நம் நகரின் அனைத்து பொது நல அமைப்பினர்களும் ஒருங்கிணைந்து முயற்சிகளை மேற்க் கொள்ள வேண்டும்.

இளையவன் ஏக்கம் : சமீபத்தில் மதுரை மாநகருக்கு கிடைத்த திரு. சகாயம் IAS போல, தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு கிடைத்த திரு. நடராசன் IPS போல, 'ஒரு புண்ணியவான்', நம் கீழக்கரை நகருக்கு நிரந்தர நகராட்சி ஆணையராக கிடைப்பாரா??

அன்பான கீழக்கரை வாழ் பெருமக்களுக்கு ஒரு வேண்டுகோள் !

நம் நகராட்சியில் தொடரும் கூச்சல், குழப்பங்களுக்கும், அமளிகளுக்கும் முறையான தீர்வு காண, நம் நகரின் எதிர் கால நலனை மட்டும் நினைவில் கொண்டு, தங்களின் மேலான, ஆக்கப்பூர்வ அறிவுரைகளையும், சிந்தனை சிதறல்களையும், இந்த தருணத்தில், கருத்துப் பதிவுகளாக தந்து, நம் நகர் செழிக்க உதவுமாறு கீழை இளையவன் வலை தளம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

தீர்வு ?                                         தீர்வு ?                                               தீர்வு ?