தேடல் தொடங்கியதே..

Saturday 4 August 2012

கீழக்கரையில் நடைபெற்ற டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி !

கீழக்கரை ரோட்டரி சங்கத்தினரின் பங்களிப்பில் இராமநாதபுரம் மாவட்ட சுகாதார நலத் துறையினரும் இணைந்து நடத்திய டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கமும் அதனைத் தொடர்ந்து நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்ச்சியும் கடந்த வியாழன் அன்று (02.08.2012) மாலை 4 மணியளவில், ஹைராத்துல் ஜலாலியா மேல் நிலைப் பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சிக்கு முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர். பேராசிரியர் A.அலாவுதீன் தலைமை வகித்தார். தாளாளர். பேரா.J.சாதிக் காக்கா, நகராட்சி தலைவர் ராவியத்துல் கதரியா ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். திருப்புல்லாணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவ அலுவலர் டாக்டர்.M.H. செய்யது ராசிக்தீன் அறிமுக உரை நிகழ்த்தினர். 




இராமநாதபுரம் சுகாதார நலத் துறை துணை இயக்குனர் திரு.S.பாலசுப்ரமணியன் 'வரும் முன் காப்போம்' என்ற அடிப்படையில் டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பது எப்படி? என்பது குறித்து சிறப்புரையாற்றினார். கீழக்கரை மக்கள் நல அறக்கட்டளை நிறுவனர் M.K.E உமர் அப்துல் காதர் வாழ்த்துரை வழங்கினார். கீழக்கரை ரோட்டரி சங்கத்தின் செயலாளர் P.பாலசுப்ரமணியன் வருகை தந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். 

கீழக்கரை ரோட்டரி சங்கத்தின் தலைவர் ஆசாத் ஹமீது நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார். இந்த நிகழ்ச்சிக்கு தாசீம் பீவி அப்துல் காதர் மகளீர் கல்லூரியின் ரோட்டரி சங்க நிர்வாகிகள், ஆசிரியைகள் மற்றும் மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். மேலும் பல்வேறு சமூக நல அமைப்பினர்களும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து மாலை 6.45 மணியளவில்  நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்ச்சி சிறப்பாக நடை பெற்றது.




நம் கீழக்கரை நகரில் தொடர்ச்சியாக மலேரியா மற்றும் டெங்கு காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டு இராமநாதபுரம் மற்றும் மதுரை தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பி வருகின்றனர். கடந்த மாதம் கீழக்கரை தெற்குத் தெருவை சேர்ந்த அப்துல் வாஹிது என்பவரின் ஒன்றரை மாத குழந்தை அறியப்படாத காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, ராமநாதபுரம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காத நிலையில், மதுரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கும் உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அக்குழந்தை உயிரிழந்தது அனைவரையும் டெங்கு காய்ச்சல் குறித்த அச்சத்தில் ஆழ்த்தியது. 

அதே நேரம் 'கீழக்கரை நகர் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் மலேரியா மற்றும் டெங்கு காய்ச்சல் அறவே இல்லை' என்று கீழக்கரை முன்னாள் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) முஜீபுர் ரஹ்மான், சமீபத்தில் ஒரு தொலைகாட்சி பேட்டியின் போது தெரிவித்திருந்தார். இவருடைய தவறான கருத்துக்கு, கீழக்கரை நகரின் சமூக ஆர்வலர்களும், பொது நல அமைப்பினர்களும் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் இது போன்ற டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மன ஆறுதல் அளிப்பதாக பொது மக்கள் பலர் கருத்து தெரிவித்தனர்.

Friday 3 August 2012

கீழக்கரையில் ஜனாஸா (மரண) அறிவிப்பு !

கீழக்கரை ஓடைக்கரைப் பள்ளி ஜமாத்தை சேர்ந்த கருப்பட்டிக்காரத் தெரு மர்ஹூம். சிக்கந்தர் பாதுஷா, மர்ஹூமா. முஹம்மது சதக் இபுராஹீமா ஆகியோர்களின் மகளும், ஜனாப். முஹம்மது மீரா சாகிபு அவர்களின் மனைவியும், மர்ஹூம். மதார் சாகிபு, ஜனாப். சுலைமான் ஆகியோரின் சிறிய தாயாரும், ஜனாப். செய்யது முஹம்மது, ஜனாப். சிக்கந்தர், ஜனாப். பாரூக்  ஆகியோர்களின் உம்மம்மாவுமாகிய 'ஹஜ்ஜத்தும்மா' என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட ஹதிஜத்துல் குபுரா அவர்கள் இன்று நண்பகல் சுமார் 1 மணியளவில் வபாத்தாகி விட்டார்கள்.


                            (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்)

அன்னாரின்  ஜனாஸா நல்லடக்கம் ஓடக்கரை பள்ளி மைய வாடியில் இன்று அஷர் தொழுகைக்குப் பின் மாலை 5 மணியளவில் நடை பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

கீழக்கரையில் ஒரு வரலாற்று ஆய்வாளர் - ஆனா. மூனா சுல்தான் அவர்களின் ஆச்சரியமூட்டும் ஆய்வுகள் !

'வரலாறு தெரியாதவர்களால்... வரலாறுகள் படைக்க முடியாது' என்று சொல்லுவார்கள்.  இன்று நம் கீழக்கரையின் சிறப்புமிகு வரலாறுகளை அத்தாட்சிகளுடன், தகுந்த சான்றாவணங்களுடன் எடுத்துரைக்கும் அறிவாற்றல் மிகுந்த ஆசானாக ஆனா. மூனா சுல்தான் அவர்கள் திகழ்ந்து கொண்டிருக்கிறார்.  1968 ஆம் ஆண்டுகளிலேயே உலகத் தமிழ்க் கழகத்தின் கீழக்கரை நகரச் செயலாளராக சேவையாற்றியவர். அதே ஆண்டில் வள்ளல் சீதக்காதிக்கு நினைவு நாள் கொண்டாடி மகிழ்ந்தவர்.

ஓலைச் சுவடிகளை ஆய்வும் செய்யும் வரலாற்று ஆய்வாளர்

உலக மொழிகளில் தமிழ் மொழி தான் மூத்ததும், மிகத் தொன்மையான காலத்திலேயே செம்மையான மொழியாக வடிவம் பெற்றது என்பதையும் உலகுக்கு காட்டிய, பல நூல்களை படைத்த  தேவநேயப் பாவாணர், பெருஞ்சித்திரனார், தமிழ்க் குடிமகன் போன்ற சான்றோர்களிடம் மிகுந்த நட்புறவு கொண்டிருந்தவர். தமிழ் மீது கொண்டிருக்கும் அவாவின் காரணமாக தற்போது பழங்காலத்து தமிழ் எழுத்துக்களை, எதிர் கால சந்ததியருக்கு எளிதில் விளங்க வைக்கும் முகமாக, எழுத்துக்களை தொகுத்துக் கொண்டிருக்கிறார். 

கல்வெட்டு எழுத்துக்களை விளக்கும் ஆசான்

பழங்காலத்து பத்திரங்களை பிழையில்லாமல் படிக்கும் இவரிடம், பல்வேறு சமூகத்தினரும் தங்கள் வீட்டில் தூசு படிந்து கிடந்த மூதாதையர் காலத்து சொத்து பத்திரங்களை படிக்க கொடுத்து, பல்வேறு சொத்துக்களை மீட்டுள்ளனர் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி. இவை மட்டுமின்றி கல்வெட்டுகள், ஓலைச் சுவடிகள் போன்றவற்றை தங்கு தடையின்றி தெளிவுறப் படிக்கும் ஆற்றல் மிக்கவர். கடந்த மாதம் கீழக்கரைக்கு வருகை தந்திருந்த அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாண பல்கலைகழகத்தின் வரலாற்று மாணவர் திரு.சுந்தர், "18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டில் தமிழ் முஸ்லீம்களின் கடல் வணிகமும், சமூகமும்" என்ற தலைப்பில் ஆய்வறிக்கை சமர்ப்பிக்க இவருடன் பல நாள்கள் தங்கியிருந்து சான்றாவணங்களுடன் குறிப்பெடுத்து சென்றது குறிப்பிடத்தக்கது. 


இது குறித்து ஆனா. மூனா சுல்தான் அவர்களிடம் கேட்ட போது "நான் எந்த பல்கலைகழகத்திலும் வரலாற்று மாணவனாக இருந்ததில்லை. சிறு வயதிலிருந்தே கல்வெட்டுகள், ஓலைச் சுவடிகள் போன்றவற்றினை படிக்கும் ஆர்வம் மிகுதியாக இருந்தது. அதன் காரணமாக பல்வேறு வரலாற்று ஆய்வு நூல்களைத் தேடித் தேடி புரிதலுடன் வாசிக்கத் துவங்கினேன். இதனால் பல்வேறு ஆய்வு நூல்களில், ஒரே விசயத்தில் பல முரண்பாடுகளை காண நேர்ந்தது. அதனை களையும் நோக்கோடு, நான் என்னுடைய ஆய்வுகளை தொடர்ந்தேன். அந்த வரலாற்று ஆய்வுகள் இன்றளவும் தொடர்கிறது. ஆனால் எனக்கு சரியான அங்கீகாரம் யாரும் வழங்காததன் விளைவாக, வரலாற்று ஆய்வுகளில் சற்றே தொய்வு நிலை காணப்படுகிறது. இருந்தாலும் விடா முயற்சியோடு, சில ஆர்வமுடைய நல்ல உள்ளங்களின் ஒத்துழைப்போடு, தொடர்ந்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறேன்." என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

தற்போது பெயிண்டர் தொழிலை கசடற செய்து வரும் இவர், கீழக்கரையின் ஆதி வரலாறுகளை முற்காலம் முதல் இக்காலம் வரை, இளம் தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் பொருட்டு, தகுந்த ஆதாரங்களுடன் நூலாக்கம் செய்யும் பெரும் முயற்சியில், பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் ஈடுபட்டு வருகிறார். இவருடைய கீழக்கரை குறித்த பல்வேறு தலைப்பிலான ஆய்வுகளும், பார்வைகளும் ஆச்சிரியமூட்டுவதாக இருக்கிறது. இவருடைய வரலாற்று ஆய்வுப் பணிகள் மென் மேலும் சிறக்க கீழை இளையவன் வலை தளம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். 

தொடர்புக்கு : ஆனா. மூனா சுல்தான் - 98655 69595
3/252,பெத்தரித் தெரு, கீழக்கரை , இராமநாதபுரம் மாவட்டம் 

Thursday 2 August 2012

கீழக்கரையில் ஆம்னி ஓட்டுனர்கள் வேலை நிறுத்தத்தினால் மாணவ மாணவிகள் கடும் அவதி - காவல் துறையினர் வழங்கிய புத்திமதி !


கீழக்கரை நகரில் முறைகேடான படி பள்ளிக் குழந்தைகளை அளவுக்கு அதிகமாக ஏற்றிச் செல்வதாகவும், இதனால் பெரும் ஆபத்தை பள்ளிக் குழந்தைகள் எதிர் நோக்கி இருப்பதாகவும், சம்பந்தப்பட்ட வாகனங்களில் முறையான ஆவணங்கள் இல்லாமல் இருப்பதாகவும் பல்வேறு புகார்கள் எழுந்ததை ஒட்டி, பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களை, காவல் துறையினர் கடந்த (30.07.2012) அன்று திடீர் வாகன சோதனை செய்தனர். இந்த வாகன சோதனையின் போது பல வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.




இந்நிலையில் நேற்று முன் தினம் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளை ஏற்றும் ஆம்னி டிரைவர்கள் திடிரென வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் சரியான நேரத்தில் கல்வியகங்களுக்கு செல்ல முடியாமல் மாணவ மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாயினர். பெரும்பாலானவர்கள் கட்டாய விடுப்பு எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

பெற்றோர்களில் பலரும் தங்கள் பிள்ளைகளை பள்ளி, கல்லூரிகளுக்கு அழைத்து செல்வதில் கடும் சிரமம் ஏற்பட்டது. முன்னதாக தின நாளிதழ் ஒன்றில் இது குறித்து வாகன விழிப்புணர்வு செய்தி வெளியிட்டிருந்த கீழக்கரை பத்திரிகையாளரை கண்டித்து, அடையாளம் காணப்படாத நபர்கள் துண்டுப் பிரசுரம் வெளியிட்டிருந்தனர். இதனால் நேற்று முன் தினம் சிறிது பரபரப்பு நிலவியது.




இதற்கிடையே கீழக்கரை காவல் நிலையத்தில் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில், கீழக்கரை காவல் துறையினர், ஆம்னி ஓட்டுனர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்தாய்வு கூட்டம் நேற்று காலை 11 மணியளவில் கீழக்கரை காவல் நிலையத்தில் நடைபெற்றது. இதில் காவல் ஆய்வாளர் திரு.இளங்கோவன், சார்பு ஆய்வாளர் திரு.கார்மேகம் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் பள்ளி, கல்லூரி ஆம்னி ஓட்டுனர்களுக்கு பல்வேறு அறிவுரைகளும், புத்திமதிகளும், காவல் துறையினராலும், சமூக ஆர்வலர்களாலும் வழங்கப்பட்டது. அத்தனை அறிவுரைகளையும் ஏற்று முறையாக நடப்பதாக ஆம்னி ஓட்டுனர்கள் உறுதி மொழி அளித்தனர்.


இறுதியாக காவல் துறையினரால் எழுத்து மூலம் பெறப்பட்ட பின் வரும் கட்டுப்பாடுகளை, ஆம்னி ஓட்டுனர்கள் மீறும் பட்சத்தில், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்து அனுப்பினர்.

1. பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு, மாணவ, மாணவிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களில் எப்போதும் முறையான ஆவணங்களும், வாகனம் தகுந்த பராமரிப்புடனும் இருக்க வேண்டும்.

2. தங்கள் வாகனங்களில் வரும் மாணவ, மாணவிகளை நல்ல முறையில் பள்ளிக்கு அழைத்து சென்று வீட்டில் விட வேண்டும். முக்கியமாக ஓட்டுனர்கள் எந்த பிள்ளையையும் தங்கள் மடியில் உட்கார வைத்து வாகனத்தை ஓட்டக் கூடாது.

3. பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லு ஆம்னி வாகன ஓட்டிகள் தங்கள் பெயர், முகவர் உள்ளிட்ட முழு விபரம், வாகன உரிமையாளர் குறித்த விபரம், ஓட்டுனர் உரிமை நகல், ஆர். சி. புத்தக நகல், வாகனங்களில் ஏற்றி செல்லும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை மற்றும் விபரம் போன்றவற்றை உடனடியாக காவல் நிலையத்தில் அளிக்க வேண்டும்.

4. பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் ஆம்னி வாகனங்களில் கண்டிப்பாக சினிமா பாடல்களை ஒலித்து கொண்டு ஓட்டக் கூடாது.

5.  புத்தக பைகளை அதிக அளவில் மேற்கூரையில் ஏற்றுவதால் வளைவுகளில் கவிழும் ஆபத்து உள்ளது. மேலும் நகருக்குள் தெருக்க‌ளிலும், வ‌ளைவுக‌ளிலும் மின்னல் வேகத்தில் செல‌வதால் அடிக்க‌டி சிறு சிறு விபத்துக்கள்   ஏற்ப‌டுகின்ற‌ன‌. இதனை தவிர்க்க முறையான வேகத்தில் வாகனங்களை இயக்க வேண்டும். (இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.)


கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையை அடுத்த தாம்பரத்தில்  2 ஆம் வகுப்பு படித்து வந்த ஸ்ருதி என்கிற பள்ளி சிறுமி, பள்ளி வாகன ஓட்டை வழியாக விழுந்து உயிரழந்த பரிதாப சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் பள்ளி வாகனங்களை வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.


இதையடுத்து பள்ளி வாகனங்களுக்கான புதிய விதிகள் அடங்கிய அறிக்கையொன்றினை தமிழக அரசு நியமித்த 6 பேர் கொண்ட குழு இன்று (02.08.2012) சமர்ப்பிக்க இருக்கிறது. ஆக அசம்பாவிதங்களால் உயிரிழப்பு ஏற்பட்ட பின்னர், அதிரடியாக விதிகளை புகுத்துவதை விட, வரு முன் காக்க, பொதுமக்கள் அனைவரும் விழிப்புணர்வு பெறுவது அவசியமாகிறது. இது நம் கீழக்கரை நகருக்கும் பொருந்தும் என்பதில் ஐயமில்லை. 

Tuesday 31 July 2012

கீழக்கரை நக‌ர் நல இயக்கம் வழங்கிய 65 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கான இலவச பள்ளிச் சீருடைகள் !

கீழக்கரை நகர் நல இயக்கம் சார்பில் மாணவ, மாணவியருக்கான இலவச சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி தெருவிலுள்ள மஹ்தூமியா தொடக்கப்பள்ளியில் நேற்று (30.07.2012) காலை 11 மணியளவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கீழக்கரை நகர் நல இயக்கத்தின் தலைவர் ஜனாப்.செய்யது இபுராகிம் தலைமை வகித்தார்.





பள்ளியின் தாளாளர் ஜனாப்.மன்சூர் அலி, இயக்கத்தின் செயலாளர் ஜனாப். பசீர் அகமது, பொருளாளர் ஜனாப்.ஹாஜா அனீஸ், பழைய குத்பா பள்ளி ஜமாத் தலைவர் ஜனாப். முகமது சேக்தம்பி, மக்கள் நல பாதுகாப்புக் கழக பொருளாளர் ஜனாப். முஹம்மது சாலிஹ் ஹுசைன், திரு. கிருஷ்ணமூர்த்தி, கீழக்கரை நகர் நல இயக்கத்தின் மகளிர் அணி பொறுப்பாளர் ஜனாபா. சித்தி ஜரினா ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.




முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்தி பிரேமா வரவேற்புரை ஆற்றினார். ஆலோசகர் திரு. பாரதி நன்றி கூறினார். இதில் 65க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கான பள்ளிச் சீருடைகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மக்கள் தொடர்பாளர் ஜனாப். கமால் நாசர், திரு. விஜயன், திரு. பாரதி மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Monday 30 July 2012

கீழக்கரைக்கு அதி விரைவில் தனி நகராட்சி ஆணையர் அமைய நகராட்சித் தலைவர் முயற்சி - பொதுமக்கள் மகிழ்ச்சி !

கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் ராவிய‌த்துல் காத‌ரியா அவர்கள் தமிழக உள்ளாட்சி துறை அமைச்ச‌ர் கே.பி.முனுசாமி ம‌ற்றும் உய‌ர் அதிகாரிக‌ளை நேற்று (27.07.2012) சென்னையில் சந்தித்தார். அமைச்சர் அவர்களின் வழிக்காட்டுதலின் படி, தமிழ் நாடு தலைமை நகராட்சி நிர்வாகத் துறை ஆனையர் திரு சந்திர காந்த் பி. காம்ப்ளே ஐ.ஏ.எஸ். அவர்களை சந்தித்து கீழ‌க்க‌ரைக்கு த‌னி க‌மிஷ‌னர் நியமனம் உள்ளிட்ட‌ கீழ‌க்க‌ரை நகர் ந‌ல‌ன் குறித்த பின் வரும் கோரிக்கைக‌ளை செய‌ல்ப‌டுத்துமாறு வ‌லியுறுத்தினார்.


  1. கீழக்கரைக்கு உடனே  தனி நகராட்சி ஆனையர் நியமிக்கவேண்டும்
  2. நகர் நல பணிகளுக்காக 3 தொழில் நுட்ப பணியாளர்களை நியமிக்கவேண்டும்
  3. நகராட்சி திட்டப்பணிகளுக்காக  ரூ1.66 கோடி நகராட்சி வைப்பு நிதியை திரும்ப பெறுவது
இந்த கோரிக்கைகளை பரிசீலித்த தலைமை நகராட்சி நிர்வாக துறை ஆணையர், கீழக்கரைக்கு  தனி நகராட்சி ஆணையரை  நியமிக்கும் பணி ஒரு மாதத்தில் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்தார். தமிழகம் முழுவதும் 40 நகராட்சி ஆணையர்களை நியமிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் , முதல் கட்டமாக 20 பேரை நியமிக்கும் பணி வரும் மாதம் இறுதியில் நடைபெறும் என்றும் அதில் கீழக்கரை கண்டிப்பாக இடம்பெற இருப்பதாகவும் தெரிகிறது. இதனால் பொது மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.