தேடல் தொடங்கியதே..

Friday 17 August 2012

கீழக்கரையில் ஒற்றுமையுடன் பணியாற்ற முனைந்திருக்கும் சேர்மன் மற்றும் துணை சேர்மன் - நடுநிலையாளர்கள் மகிழ்ச்சி !

கீழக்கரை நகர் மன்றம் பொறுப்பேற்று கடந்த பத்து மாதங்களில், நகர் மன்ற உறுப்பினர்களுக்குள் ஏற்பட்ட ஒற்றுமையின்மை காரணமாக, மக்களுக்கான ஆக்கப் பணிகளில் பெருமளவு தேக்கம் ஏற்பட்டு வருகிறது. கவுன்சிலர்களுக்குள் ஏற்பட்ட பிளவால், பல குழுக்களாக இவர்கள் பிரிந்து நின்றனர். இதனால் பொறுப்பேற்றிருந்த  நகர் மன்றம் குறித்து பொதுமக்கள் பெரும் அதிருப்தி தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தற்போது சில கவுன்சிலர்களைத் தவிர பெரும்பாலானோர் மனக் கசப்புகளை களைந்து, ஒற்றுமையுடன் மக்கள் பணியாற்ற முனைந்திருப்பது நகரின் நடுநிலையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.


ஆய்வுப் பணியில் சேர்மன், துணை சேர்மன் மற்றும் கவுன்சிலர்கள்

நம் கீழக்கரை நகரின் பெரும்பாலான பகுதிகளில் மூடியிடப்படாத  கழிவுநீர் கால்வாய்கள், கொலைவெறி கொசுக்களின் உற்பத்தி தொழிற்சாலையாக திகழ்ந்து வருகிறது.  இந்த வாறுகால்கள் திறந்தே கிடப்பதால், சகிக்க முடியாத துர்நாற்றமும், பிளாஸ்டிக் குப்பைகள் சேர்வதால் அடிக்கடி அடைப்பும் ஏற்பட்டு சாக்கடை நீர் சாலைகளில் வழிந்தோடும் நிலை ஏற்பட்டு வந்தது. மேலும் இதில் சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் கால் தவறி விழும் நிலையும் உள்ளது.

பல காலங்களுக்கு முன் போடப்பட்ட சிமெண்ட் மூடிகள், தற்போது பல இடங்களில் முற்றிலும்  சேதமடைந்து காணப்படுகிறது. ஆகவே பொது மக்களின் சுகாதார நலனை முன்னிறுத்தி, கழிவு நீர் கால்வாயின் மேல் பகுதியில் சிமென்ட் மூடிகளை அமைப்பதற்கு ரூ 5 இலட்சத்தை ஒதுக்கி, அதற்கான சிமென்ட் மூடிகள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகளை நகராட்சி சேர்மன் ராவியத்துல் காதரியா மற்றும் துணை சேர்மன் ஹாஜா முகைதீன் மற்றும் கவுன்சிலர்கள் பலர் ஒற்றுமையுடன் வேலை நடக்கும் இடத்திற்கு சென்று நேரடி ஆய்வு செய்தனர்.

 மேலும் "முத‌ல் க‌ட்ட‌மாக‌ 500க்கும் மேற்ப‌ட்ட‌ சிமெண்ட் மூடிக‌ள் த‌யார் செய்யும் ப‌ணிக‌ள் ந‌டைபெற்று வருவதாகவும், இன்னும் இரண்டு வாரங்களில் இவை தயார் ஆகி விடும் என்றும், மேலும் கீழக்கரை நகரில் எங்கெல்லாம் சாக்கடை கால்வாய்களுக்கு மூடி இல்லாமல் இருக்கிறதோ, அங்கெல்லாம் மூடி அமைத்து இத்திட்டத்தை விரிவுபடுத்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, மிக விரைவில் செய‌ல்ப‌டுத்த‌ப்ப‌டும் என்றும், இனி எதிர் வரும் காலங்களில் மக்கள்  பணிகள் சிறக்கும் என்றும்" நகர் மன்ற தலைவர் ராவியத்துல் கதரியா அவர்களும் நகர் மன்ற துணைத் தலைவர் ஹாஜா முகைதீன் அவர்களும் ஒருமித்த குரலில் தெரிவித்தனர்.

Thursday 16 August 2012

முதல்வரின் தனிப் பிரிவிற்கு புகார் அனுப்ப புதிய வலைத் தளம் துவக்கம் - பொதுமக்கள் வரவேற்பு !

முதல்வரின் தனிப் பிரிவிற்கு, பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க உதவியாக புதிய வலைதளத்தினை, மாண்பு மிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்து உள்ளார். இந்த இணையத்தின் வழியே மனுதாரர்களுக்கு குறுந்தகவல் மூலம் ஒப்புகைச் செய்தி அனுப்பும் முறையையும் அறிமுகப்படுத்தியுள்ளார். இனி தாமதமின்றி, உடனுக்குடன் புகார்களை, முதல்வரின் தனி கவனத்திற்கு கொண்டு செல்ல முடியும் என்பதால் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 



 
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

முதல்வரின் தனிப்பிரிவிற்கு நாள்தோறும் பொதுமக்களிடமிருந்து நேரடியாகவும், தபால் வழி, மின்னஞ்சல் மற்றும் இதர ஊடகங்கள் வாயிலாகவும் நாளொன்றுக்கு சுமார் 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் மனுக்கள் பெறப்படுகின்றன. இம்மனுக்கள் தனிக் குறியீடுகள் மூலம் வகைப்படுத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இப்பிரிவில் பெறப்படும் மனுக்கள் மீது விரைந்து எடுக்கப்படும் நடவடிக்கையால் பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர்.

முதல்வரின் தனிப்பிரிவின் மூலம் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்கும் நோக்கில் முதல்வரின் தனிப்பிரிவிற்கு, http://cmcell.tn.gov.in/ என்ற புதிய வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதை மாண்பு மிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று முன் தினம் தலைமைச் செயலகத்தில் துவக்கி வைத்தார். 

முதல்வரின் தனி பிரிவில் புகார் செய்ய கீழே கிளிக்கவும்

ஒப்புகைச் சீட்டு:

இவ்வலைதளத்தின் மூலம் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீதான ஒப்புகைச் சீட்டு, உடனே மனுதாரர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு பதிவு எண்ணுடன் அனுப்பி வைக்கப்படும். புதிய வலைதளம் மூலம் பெறப்படும் மனுக்கள், அம்மனு தொடர்புடைய அலுவலகத்திற்கு கணினி மூலம் மாற்றப்பட்டு, அதன் விவரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படும். சம்பந்தப்பட்ட அலுவலகத்திலுள்ள முதல்வர் தனிப்பிரிவின் ஒருங்கிணைப்பு அலுவலரின் பெயர் இந்த வலைதளத்தில் குறிப்பிடப்படும். இதன்மூலம் மனுதாரர் அந்த அலுவலரை நேரடியாக தொடர்பு கொள்ள முடியும்.




மேலும், இப்பிரிவில் பெறப்படும் மனுக்களுக்கு குறுந்தகவல்(எஸ்.எம்.எஸ்.) மூலம் மனுதாரர்களுக்கு ஒப்புகை செய்தி அனுப்பும் முறையையும் முதல்வர் துவக்கி வைத்தார். அதேபோல், தபால் வழியாக அனுப்பும் மனுக்களில் மனுதாரர் கைபேசி எண்ணை குறிப்பிட்டிருந்தால், முதல்வரின் தனிப்பிரிவினால் வழங்கப்படும் பதிவு எண், தொடர்புடைய அலுவலகம் மற்றும் அலுவலர் ஆகிய விவரங்கள் முதல்வர் தனிப்பிரிவிலிருந்து குறுந்தகவல் மூலம் மனுதாரர்களுக்கு அனுப்பப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

நன்றி : திரு.அண்ணா கண்ணன் 

கீழக்கரையில் நோன்பு வைப்பவர்களுக்கு வழங்கப்பட்ட பிரியாணி உணவு - KMSS சங்கத்தினரின் தொடர் சேவை !

நம் கீழக்கரை நகரில் ஒவ்வொரு வருடமும், ரமலான் மாதம் 27 வது நோன்பினை நோற்பதற்கு, மீன் கடை தெருவைச் சேர்ந்த ஜனாப். ஹாஜி காக்கா  என்கிற கலீல் ரஹ்மான் அவர்களின் தலைமையில் கீழக்கரை நகர் மக்கள் விழிப்புணர்வு நல முன்னேற்ற சங்கத்தின் (KMSS) சார்பாக பிரியாணி உள்ளிட்ட உணவு வகைகளை வழங்குவது வழக்கம். 
 
அதே போல் இந்த வருடமும் இன்று (15.08.2012) இரவுத் தொழுகைக்குப் பின்னர் 10.30 மணியளவில், மீன் கடைத் தெரு மின் ஹாஜியார் பள்ளியில் பிரியாணி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நோன்பு வைப்பதற்கான சஹர் உணவு, இரவுத் தொழுகைக்கு வந்தவர்களுக்கும், பெண்கள் தொழுகை பள்ளிகளுக்கும், சுற்றுப் புறத்திலுள்ள வீடுகளில் நோன்பு வைப்பவர்களுக்கும் வழக்கப்பட்டது. 
 
 



இது குறித்து KMSS சங்கத்தின் தலைவர். ஜனாப்.ஜமால் அஸ்ரப் அவர்கள் கூறும் போது "பல்லாண்டு காலமாக இந்த சேவையை தொடர்ந்து செய்து வருகிறோம். இந்த வருடம் ஏறத்தாழ 500 க்கும் மேற்ப்பட்ட நோன்பாளிகளுக்கு பிரியாணி உணவு  வழங்கப்பட்டது. இந்த பிரியாணியை அக மகிழ்ச்சியுடன் நோன்பு நோற்பவர்கள் பெற்று சென்றனர். 
 
இது தவிர முப்பது நோன்புகளுக்கும் மீன் கடைத் தெரு மின் ஹாஜியார் பள்ளிவாசலில் நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்ச்சியினை எங்கள் சங்கம் சார்பாக சிறப்பாக நடத்தி வருகிறோம். எங்களுடய சங்கத்தின் தலையாய நோக்கமே 'மக்கள் பணி, மறுமையில் பலன் என்பதே'. தொடர்ந்து எங்கள் பொது நலப் பணிகள் தொடர அனைவரும் இறைவனை வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்." என்று தெரிவித்தார்.

Wednesday 15 August 2012

கீழக்கரையில் களை கட்டிய சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் !

நம் இந்திய தேசம் அடிமைத் தளையிலிருந்து விடுபட்டு சுதந்திரம் பெற்ற இந் நன்னாளிலே நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், கீழக்கரையில் நகராட்சி அலுவலகம், அரசு அலுவலகங்கள், கல்லூரிகள், மற்றும் பல்வேறு பொது நல அமைப்புகள் சார்பில் இன்று (15.08.2012) காலை சுதந்திர தின விழா நிகழ்வுகள் நடைபெற்றது.

இந்திய தேசிய கொடி ஏற்றப்பட்டு, சுதந்திரத்திற்காக உயிர் நீர்த்த தியாக திருமகன்களை நினைவு கூர்ந்தனர். விழா இறுதியில் மாணவ மாணவியருக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. பொதுமக்களும் ஆர்வமுடன் திரளாக கலந்து கொண்டனர். 


கீழக்கரை மக்கள் நலப் பாதுகாப்புக் கழகத்தில் தேசியக் கொடி ஏற்றும் காட்சி!

கீழக்கரை மக்கள் நல பாதுகாப்புக் கழகத்தின் அலுவலக வாயிலில் தேசியக் கொடியேற்றும் நிகழ்ச்சி இன்று காலை 8.30 மணியளவில் நடை பெற்றது. கழகத்தின் செயலாளர் ஜனாப்.M.U.V.முகைதீன் இபுறாகீம் வரவேற்புரை ஆற்றினார். கழகத்தின் தலைவர் ஜனாப்.A.M.S.தமீமுதீன் தேசியக் கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார். கழகப் பொருளாளர் ஜனாப்.A.M.D.முஹம்மது சாலிஹ் ஹுசைன் சுதந்திர தின உரையாற்றினார்.



இந்த சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் ஊழல், வேலையில்லா திண்டாட்டம், வறுமை, தீவிரவாதம் போன்ற தீவினைகள் இல்லாத, தாய் திரு நாட்டை வென்றெடுக்க உறுதி மொழி எடுக்கப்பட்டது. இதில் துணை தலைவர் திரு.M.மாணிக்கம், நிர்வாகிகள் ஜனாப்.N.முசம்மில் ஹுசைன், ஜனாப்.M.சீனி முஹம்மது சேட், ஜனாப்.S.சீனி பாபா பஹ்ருதீன், ஜனாப்.M.I.செய்யது சாகுல் ஹமீது, ஜனாப்.L.பவுசுல் அமீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த 66 வது சுதந்திர தின திரு நாளிலே, எங்கள் கீழை இளையவன் வலை தளம் சார்பாக அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

Tuesday 14 August 2012

கீழக்கரை தாசிம் பீவி மகளீர் கல்லூரியில் நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சி - மாவட்ட கலெக்டர் பங்கேற்பு !

கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் கடந்த (11.08.2010) அன்று நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சீதக்காதி அறக்கட்டளையின் செயலாளர் ஜனாப்.காலித் புகாரி தலைமை வகித்தார். கல்லூரியின் முதல்வர் சுமையா தாவூது வரவேற்புரை ஆற்றினார். மாணவி ஷானாஸ் கிராஅத் ஓதி நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்.


மாவட்ட கலெக்டர் திரு.நந்தகுமார், நகராட்சி தலைவர் ராவியத்துல் கதரியா, முகம்மது ஹாருன் ஆலிம், துணை முதல்வர் நாதிரா கமால் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சிக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

 
இந்த நிகழ்ச்சியின் போது மாவட்ட ஆட்சியர் திரு.நந்தகுமார் அவர்கள் மரக்கன்றுகளை நட்டு சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியின் முடிவில் கதிஜா பாமிதா ஆலிமா துஆ ஓதினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கீழக்கரை மேலாளர் சேக் தாவுது மற்றும் கல்லூரி மேலாளர் அப்துல் அஜீஸ் மற்றும் துறை தலைவர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.