தேடல் தொடங்கியதே..

Thursday 23 August 2012

கீழக்கரையில் குப்பை காடாக காட்சி தரும் மணல் மேடு கண்காட்சித் திடல் - சுகாதாரப் பணிகள் மேம்பட பொதுமக்கள் கோரிக்கை !

கீழக்கரையில் நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் வடக்குத் தெரு பகுதியில் அமைந்திருக்கும் மணல் மேடு பகுதியில் கண்காட்சித் திடல் அமைப்பது வழக்கம். இந்த ஆண்டும் அதே போல் மணல் மேடு பகுதியில் மூன்று நாட்கள் கண்காட்சி நடை பெற்றது. கண்காட்சியின் மையப் பகுதியில் குப்பைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியும் சிறப்பாக நடத்தப்பட்டது. அதே வேளையில், இந்த கண்காட்சித் திடலில் ஒரு பகுதியில் கூட குப்பை தொட்டிகள் காணப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பிளாஸ்டிக் கழிவுகளையும், துர்நாற்றம் வீசும் உணவு மிச்சங்களையும், வேறு வழியின்றி அங்கேயே வீசி சென்றுள்ளனர். தற்போது இந்தப் பகுதி குப்பைக் காடாக காட்சி அளிக்கிறது. 




இது குறித்து சமூக ஆர்வலர் சேகு சதக் இபுறாகீம் அவர்கள் தன் முகப் புத்தகத்தில்
கூறும் போது "கீழக்கரையில் பெருநாளை முன்னிட்டு தனியார் நடத்தும் பொருட்காட்சியில் அதிக மக்கள் கூடுகின்றனர், அங்கு போதுமான கழிப்பிட வசதியோ, குடிநீரோ இல்லை. இரண்டு மற்றும் மூன்றாம் நாட்களில் அங்கு குப்பை அதிகமாக காணப்படுகிறது. இதனால் மக்கள் அவதிபடுகின்றனர். இங்கு தீ அணைப்பு வண்டி இல்லாதது பொதுமக்களுக்கு பாதுகாப்பு இன்மையை காட்டுகிறது." என்று தெரிவித்து இருந்தார். 




இந்த கண்காட்சித் திடலை ஏற்பாடு செய்பவர்கள், இனி வருங்காலங்களில் பொது மக்களின் சுகாதாரத்தையும் பேணும் நோக்கோடு திட்டமிட வேண்டும்.
குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்வது நலம் பயக்கும். பொது மக்கள் அதிகமாக கூடும், இந்த இடத்தில் அனைவரும் பயன் பெறும் வண்ணம் நல்ல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த முன் வர வேண்டும். 

ஆண்களும், பெண்களும் கலக்காதவாறு, இருவருக்கும் தனித்தனி நுழைவு வாயில்களை அமைக்க வேண்டும். இதனால் கலாச்சார சீர்கேடுகள் நடைபெறுவதில் இருந்து அனைத்து சமுதாய மக்களையும் பாதுகாக்க முடியும்.இந்த பணிகளுக்காக ஆகும் செலவுகளுக்காக, குறைந்தளவு நுழைவு கட்டணம் வசூலித்தாலும் நல்லது தான்.

கீழக்கரை ஹமீதியா ஆண்கள் மேனிலைப் பள்ளியில் நடை பெற்ற விலையில்லா மடிக் கணினி வழங்கும் நிகழ்ச்சி !

கீழக்கரை ஹமீதியா ஆண்கள் மேனிலைப் பள்ளியில் சுதந்திர தின நாளன்று, தமிழக அரசின் விலையில்லா மடிக் கணினி (லாப்டாப்) வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 80 க்கும் மேற்பட்ட +2  நிறைவு செய்த மாணவர்களுக்கு  தமிழக அரசின் விலையில்லா லாப்டாப் வழங்கப்பட்டது. 
 
 

 
 
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக‌ முகம்மது சதக் அறக்கட்டளையின் தலைவர் ஜனாப்.ஹமீது அப்துல் காதர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு விலையில்லா மடிக் கணினியினை வழங்கி சிறப்புரை ஆற்றினார். இந்த விழாவில் பள்ளியின் தாளாளர் ஜனாப். யூசுப் சாஹிப் தலைமை ஏற்று இருந்தார், தலைமை ஆசிரியர் ஹசன் இபுராகிம் வரவேற்றார். 
 
 

 
 
இவ்விழாவில் ம‌க்க‌ள் சேவை அற‌க்க‌ட்ட‌ளை நிறுவனர் ஜனாப்.உமர் அப்துல் காதர், ஜனாப்.சிராஜுதீன்,  கவுன்சிலர். முகைதீன் இபுறாகீம், மக்கள் நலப் பாதுகாப்புக் கழகத்தின் பொருளாளர். முஹம்மது சாலிஹ் ஹுசைன் உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். முன்னதாக ஜனாப்.ஹமீது அப்துல் காதர்  அவர்கள் தேசியக் கொடியேற்றி,மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

கீழக்கரையில் வங்கிப் பணிகள் முடங்கியதால் வெறிச்சோடிக் கிடக்கும் வங்கிச் சாலை - பொது மக்கள் கடும் அவதி !

நாடு தழுவிய வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் இன்று இரண்டாவது நாளாக  தொடரும் நிலையில், தமிழகத்தில் 7,200 வங்கிக் கிளைகள் மூடப்பட்டுள்ளதால் பணம் செலுத்துவது, பணம் எடுப்பது, வங்கிப் பரிவர்த்தனைகள் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டு வாடிக்கையாளர்கள் பெரும்  சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 




வங்கி ஒழுங்கு முறைச் சட்டம், ஓய்வூதிய மறுபரிசீலனை, அயல்பணி ஒப்படைப்பு  மூலம் வங்கிப் பணிகளை மேற் கொள்ள எதிர்ப்பு உள்ளிட்டவற்றை மையமாக வைத்து வங்கிகள் நேற்று (22.08.2012) தொடங்கிய இரண்டு நாள் வேலைநிறுத்ததால் நாடு முழுவதும் வங்கிப்  பணிகள் முடங்கின. நம் கீழக்கரை நகரிலும் அனைத்து வங்கிகளும் மூடப்பட்டுள்ளது. இதனால் கீழக்கரை முஸ்லீம் பஜாரின் பிரதான சாலையான வங்கிச் சாலை மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. 




இதனால் வங்கிப் பணப் பரிமாற்றம், காசோலை பரிமாற்றம், வெளிநாட்டு  பணப் பரிமாற்றம் உள்ளிட்ட பல பணிகள் பாதிக்கப்பட்டன.  கீழக்கரையின் மூன்று ஏ.டி.எம் மையங்களும் செயல்படவில்லை. இதனால், அவசர பணத் தேவைகளுக்கு பணம் எடுக்க முடியாமல் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்த திடீர் வேலைநிறுத்தம் குறித்து அறியாத பொதுமக்கள் பலர் வங்கிகளுக்கு வந்து ஏமாற்றத்துடன்  திரும்பிச் செல்கின்றனர்.  

Wednesday 22 August 2012

கீழக்கரையில் சமூக சேவைக்கு ஒரு மணிமகுடம் - தமிழக முதல்வரிடம் விருது பெற்ற தாசீம் பீவி மகளீர் கல்லூரி முதல்வர் !

தமிழக அளவில் சிறந்த சமூக சேவகர்களுக்கான (மகளிர் நலன்) விருதான, "சிறந்த சமூக சேவகர்" விருது, கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியின் முதல்வர் ஜனாபா.டாக்டர் எஸ். சுமையா தாவூது அவர்களுக்கு மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா அவர்களால் வழங்கப்பட்டது. மாநில அளவிலான இந்த விருதினை, சுதந்திர தின நாளன்று (15.08.2012) சென்னையிலுள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற விழாவின் போது, இவருக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.




இந்த அளப்பெரும் விருதினைப் பெற்ற சுமையா தாவூது அவர்களுக்கு, இராமநாதபுரம் மாவ‌ட்ட‌ க‌லெக்ட‌ர் திரு. ந‌ந்த‌குமார், அமைச்ச‌ர் திரு.சுந்த‌ர்ராஜ‌ன் உள்ளிட்டோர்கள் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர். மேலும் தமிழகத்தின் ப‌ல்வேறு பகுதிகளிலிருந்தும் பொது நல அமைப்பினர்களும், கீழக்கரையின் முக்கியப் பிரமுகர்களும் வாழ்த்துக்க‌ளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

எதற்காக இந்த விருது ?

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இந்த விருதுக்கு தேர்தெடுக்கப்பட்டது குறித்து கூறப்பட்டுள்ளதாவது :

இவர் ராமநாதபுரம் மாவட்டத்தில் இது வரை 840 ஏழை முஸ்லீம் பெண்களுக்கு 18லட்சத்து 41ஆயிரம் ரூபாயை மாவட்ட முஸ்லீம் பெண்கள் உதவி சங்கத்தின் மூலம் வழங்கியுள்ளார்.

இவர் இராமநாதபுரம் மாவட்டத்தின் பெண்கள் சுய உதவு குழுக்கள் மூலம் வரதட்சனை தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

சுனாமி மீட்பு திட்டத்தையும் செயல்படுத்தி வருவதோடு மட்டுமல்லாமல், 2 ஆயிரம் சுய உதவி குழு பெண்களுக்கு வருமானம் ஈட்டும் வகையில் தொழில் துவங்க பயிற்சி அளித்து வருகிறார்.

மேலும் சுய உதவிக் குழுக்கள் மூலம் குடும்பக் கட்டுப்பாடு, கண்தானம், ரத்ததானம் மற்றும் எய்ட்ஸ் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

2007 -2009 மற்றும் 2010 - 2012 ஆகிய ஆண்டுகளில் பெண்கல்விக்கான தேசிய சிறுபாண்மையினர் கல்வியியல் நிறுவனத்தில் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினராக பணியாற்றி வருகிறார். இவ்வாறு அதில் கூற‌ப்ப‌ட்டுள்ளது.




இந்த விருது தவிர, மேலும் 19  பேர்களுக்கு விருதுகளும் பதக்கங்களும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கி கவுரவிக்கப்பட்டது. அந்த விருதுகளின் விபரம் வருமாறு :

1. தீர செயலுக்கான கல்பனா சாவ்லா விருது:
(a) டி. ராஜலட்சுமி
(b) டி. சிவரஞ்சனி

2. சிறந்த மாநகராட்சி: கோயம்புத்தூர்

3. சிறந்த நகராட்சி:

(a) முதல் இடம்: பொள்ளாச்சி
(b) இரண்டாம் இடம்: தேனி அல்லிநகரம்
(c) மூன்றாம் இடம்: நாமக்கல்

4. சிறந்த டவுன் பஞ்சாயத்:

(a) முதல் இடம்: தென்கரை
(b) இரண்டாம் இடம்: முசிறி
(c) மூன்றாம் இடம்: பெருந்துறை

5. மாற்று திறனாளிகளுக்கு சேவை செய்தோர்:

(a) சிறந்த மருத்துவர்: டாக்டர் டி.எஸ். சந்திரசேகர் (Medindia Hospital, சென்னை)

(b) சிறந்த சமூக சேவகர்: ஜெயா கிருஷ்ணஸ்வாமி (சிறப்பு குழந்தைகளுக்கான மதுரம் நாராயண் நிலையம், சென்னை)

(c) சிறந்த நிறுவனம்: நேத்ரோதயா, சென்னை

(d) அதிக மாற்று திறனாளிகளுக்கு வேலை வழங்கிய தனியார் நிறுவனம்: Texmo Industries, கோயம்புத்தூர்

6. சிறந்த மாவட்ட கூட்டுறவு வங்கி: சேலம் மாவட்ட கூட்டுறவு வங்கி

7. பெண்களுக்கான சேவைகள்:

(a) பெண்கள் சேவையில் சிறந்த நிறுவனம்: உதகமண்டலம் சமூக நல சங்கம்

(b) பெண்கள் சேவையில் சிறந்த சமூக சேவகர்: டாக்டர் எஸ். சுமையா தாவூத் (திட்ட அலுவலர், சீதக்காதி NGO, ராமநாதபுரம் மாவட்டம்)

8. கடற்படை ஊழியர்கள் - பாராட்டு சான்றிதழ்:
(a) அப்துல் காதர் அக்பர்
(b) ராகேஷ் குமார்
(c) பல்வந்த்
(d) ராஜ் குமார் தொகஸ் 

தமிழக அள‌விலான‌ விருது பெற்று நம் கீழக்கரை நகருக்கும், அவர் சார்ந்த கல்லூரிக்கும் பெருமை சேர்த்ததோடு மட்டுமல்லாமல் சமூக சேவைகளில் ஈடுபட்டிருக்கும் சமூக ஆர்வலர்களுக்கு முன்னுதாரனமாக திகழும் தாசிம் பீவி அப்துல் காத‌ர் மகளீர் கல்லூரியின் முத‌ல்வ‌ர் ஜனாபா. சுமையா தாவூது அவர்களுக்கும், விருதுகள் பெற்ற ஏனைய செம்மல்களுக்கும், கீழை இளையவன் வலை தளம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Tuesday 21 August 2012

கீழக்கரை மணல் மேடு கண்காட்சி திடலில் 'குப்பைகள் குறித்த விழிப்புணர்வு' - யூத் எக்ஸனோரா அமைப்பினரின் புதிய முயற்சி !

நம் கீழக்கரை நகரில் நோன்புப் பெருநாளை முன்னிட்டு வடக்கு தெரு பகுதியில் அமைந்திருக்கும் மணல் மேட்டில் ஆண்டுதோறும் கண்காட்சி திடல் அமைக்கப்படும். இங்கு குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு இராட்டினம், உணவு விடுதிகள், சிறுவர்களுக்கான விளையாட்டு சாமான்கள் கடைகள் உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்திருக்கும். இந்த கண்காட்சித் திடல் மாலை 6 மணியிலிருந்து இரவு 10 மணி வரை நடைபெறுகிறது. 





இந்நிலையில் இந்த வருடமும் வழக்கம் போல் மணல்மேடு பகுதியில் கண்காட்சி துவங்கியது. இந்த மக்கள் கூடும் பகுதியில், குப்பைகள் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கோடு, கீழக்கரை மேலத் தெருவைச் சேர்ந்த யூத் எக்ஸனோரா அமைப்பினர்கள், திரையில் ஒளிரும் வண்ணம் விழிப்புணர்வு காணொளி (வீடியோ) காட்சிகளை திரையிட்டு வருகின்றனர். இந்த வீடியோ காட்சியில் நகராட்சி கமிஷனர், நகராட்சிச் தலைவர், பெரும்பாலான கவுன்சிலர்கள், பல்வேறு ஜமாஅத் அமைப்புகளின் நிவாகிகள், பொது நல அமைப்பினர்கள் மற்றும் பொது மக்கள் பலர், சிறப்பாக பேசியுள்ளனர். 




முக்கியமாக மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை வீட்டிலேயே எப்படி பிரித்து கொடுப்பது ?  நம் கீழக்கரை நகரை குப்பைகள் இல்லாத நகரமாக எப்படி மாற்றுவது ? குப்பைகளால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன ? இவைகளை எப்படி எதிர் கொள்வது? நிரந்தர தீர்வுகள் யாவை ? போன்ற கேள்விகளுக்கு முக்கியஸ்தர்கள் பலரின் உரையில் விடை கிடைக்கிறது. இதனை ஏராளமான பொது மக்கள் மிக உன்னிப்பாக கவனித்து செயலாற்ற உறுதி மொழி எடுத்துள்ளனர். இந்த நல்ல முயற்சிக்கு பொதுமக்களும், சமூக ஆர்வலர்கள் பலரும் தங்கள் ஆதரவையும், வாழ்த்துக்களையும்  தெரிவித்த வண்ணம் உள்ளனர்.  

கீழக்கரையில் நோன்பு பெருநாள் மகிழ்ச்சி தருணங்களில் திளைத்த இஸ்லாமிய பெருமக்கள் !

இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான நோன்பை கடந்த ரமலான் மாதத்தில் கடைபிடித்து வந்தனர். இதையடுத்து நேற்று முன் தினம் முப்பது நோன்புகள் நிறைவடைந்த நிலையில், ரமலான் மாதத்தில் நோன்பிருந்து கடமையாற்றிய இஸ்லாமியர்கள் நோன்பு முடித்து, நேற்று (20.08.2012) ரம்ஜான் பண்டிகையைக் கோலாகலமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும் நேற்று தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. 




நம் கீழக்கரை பகுதியிலும் நோன்புப் பெருநாளையொட்டி பல்வேறு மசூதிகளிலும், தொழுகைக்கென அமைக்கப்பட்டிருந்த திறந்த வெளித் திடல்களிலும், மைதானங்களிலும் நேற்று காலை 7.30 மணி முதல் 10.30 மணி வரை நோன்புப் பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இறைவனின் கட்டளைகளை இனிதே நிறைவேற்றிய மகிழ்ச்சியில், புத்தாடை அணிந்து குழந்தைகளும் உற்றார், உறவினர்களும், நண்பர்களும், தங்கள் சந்தோசத்தை வெளிப்படுத்தும் முகமாக, வீதிகள் தோறும் இறைவனின் சாந்தியும் சமாதானத்தை (ஸலாத்தினை) பரப்பியவர்களாக, தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.




இறைவனை தொழுதுவிட்டு தங்களது நண்பர்களுக்கு ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இஸ்லாமியர்கள் அல்லாத சகோதரர்களும், தங்களது இஸ்லாமிய நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் ரம்ஜான் வாழ்த்துக்களை நேரடியாகச் சென்றும், தொலைபேசியில் அழைத்தும் தெரிவித்து வருகின்றனர். நோன்புப் பெருநாளை அனைத்து இஸ்லாமியர்களுக்கும், கீழை இளையவன் வலை தளம் சார்பில் எங்களது ரம்ஜான் நோன்பு பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Sunday 19 August 2012

கீழக்கரையில் பொதுநல அமைப்பினர்கள் இணைந்து நடத்திய இப்தார் நிகழ்ச்சி !

கீழக்கரை முஸ்லீம் அறக்கட்டளை (KMT), கீழக்கரை நகர் மக்கள் விழிப்புணர்வு நல முன்னேற்ற சங்கம் (KMSS) மற்றும் சமூக நல மனித உரிமைகள் நுகர்வோர் சேவை இயக்கம் ஆகியோர்கள் இணைத்து நடத்திய நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்ச்சி நேற்று (18.08.2012) மாலை 6 மணியளவில் கிழக்குத் தெரு கைராத்துல் ஜலாலியா தொடக்கப்பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடை பெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கீழக்கரை நகர் நல இயக்கத்தின் தலைவர் ஜனாப்.செய்யது இபுறாகீம் தலைமை வகித்தார். நகராட்சி துணைத் தலைவர் ஜனாப்.ஹாஜா முஹைதீன் முன்னிலை வகித்தார். கீழக்கரை முஸ்லீம் லீக் நிர்வாகி ஜனாப்.லெப்பைத் தம்பி சிறப்புரை ஆற்றினார். 




முன்னதாக சமூக நல மனித உரிமைகள் நுகர்வோர் சேவை இயக்கத்தின் செயலாளர் திரு தங்கம் இராதாகிருஸ்ணன் வரவேற்புரை ஆற்றினார். மக்கள் நலப் பாதுகாப்புக் கழகத்தின் பொருளாளரும், கீழக்கரை முஸ்லீம் அறக்கட்டளையின் ஆலோசகருமான முஹம்மது சாலிஹ் ஹுசைன் நன்றி தெரிவித்தார். இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை கீழக்கரை முஸ்லீம் அறகட்டளை மற்றும் கீழக்கரை நகர் மக்கள் விழிப்புணர்வு நல முன்னேற்ற சங்கத்தின் செயலாளர் ஜனாப்.இஸ்மாயில் ஒருங்கிணைத்திருந்தார்.