தேடல் தொடங்கியதே..

Saturday 20 October 2012

கீழக்கரையில் இரவு பகலாக பெய்து வரும் கன மழை - குளிர்ந்த பூமியால் பொதுமக்கள் மகிழ்ச்சி !

கீழக்கரையில் கடந்த வாரம் முதல் மிதமாக பெய்து வந்த மழை, நேற்று முன் தினம் முதல் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழையாக பெய்ய துவங்கியுள்ளது. இதனால் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நீர் பிடிப்பு பகுதிகளில், நீர் வரத்து காணப்படுகிறது. இந்த மாத துவக்கத்தில் கடும் வறட்சியால் பாளம், பாளமாக வெடித்து காணப்பட்ட 'சக்கரை கோட்டை கண்மாய்' தற்போது தண்ணீர் காடாக காட்சியளிக்கிறது.



இன்றும் (20.10.2012) கீழக்கரை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. தொடர்ச்சியாக இடைவிடாமல் சாரல் மழையும் பெய்து வருகிறது. எங்கும் குளிர்ந்த காற்றும் வீசுகிறது.  இதனால் கோடையின் தாக்கத்தால் புழுங்கித் தவித்து வந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 


'சக்கரை கோட்டை கண்மாய்'
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை தமிழக கடலோரப் பகுதிகளை நெருங்கி வருவதால், தமிழகத்தில் தற்போது பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் கன மழை கொட்டிக் கொண்டிருக்கிறது. அடுத்த 24 மணி  நேரத்தில் தமிழகத்தில் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் 'சென்னை முதல் கன்னியாகுமரி' வரை கடலோர மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  



கடந்த கால மழைப் பதிவுகளை வைத்து பார்க்கும் போது காற்றழுத்த தாழ்வு நிலையானது, மன்னார் வளைகுடா பகுதியில் கடக்கும் போதும், அந்த பகுதியில் நிலை கொண்டு  நீடிக்கும் போதும் மிக, மிக பலத்த மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே இறைவன் நாடினால் அடுத்த 24 மணி  நேரத்தில், நம் தென் தமிழ் கடலோர மாவட்டங்களில் இன்னும் அதிகமான பலத்த மழையை எதிர்பார்க்கலாம். இது போன்ற மலை பெய்யும் தருணங்களில் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டியது அவசியமாகிறது.


இடியில் இருந்தும், மின்னலின் தாக்கத்திலிருந்தும் பாதுகாத்துக் கொள்ள, பொதுமக்கள் வெட்ட வெளியில் நிற்க கூடாது. ஒற்றை மரத்தின் கீழ் நிற்பதை தவிர்க்க வேண்டும்.  மேலும் நிறைய மரங்கள் இருந்து அதில் உயரமான மரத்தின் கீழும் நிற்க கூடாது.

மழை பெய்யும் போது வீட்டில் இருப்பது நல்லது. வீடுகளில் இடி அல்லது மின்னலின் போது, டிவி, மிக்சி, கிரைண்டர், கம்ப்யூட்டர் மற்றும் தொலைபேசி போன்றவற்றை பயன்படுத்த கூடாது.

மழை காலங்களில் மின் மாற்றிகள், மின் கம்பங்கள், மின் பகிர்வு பெட்டிகள், ஸ்டே ஒயர்கள் ஆகியவற்றின் அருகே செல்ல வேண்டாம.

மழையாலும், பெருங்காற்றாலும் அறுந்து விழுந்த மேல்நிலை மின்சார கம்பி அருகே செல்ல கூடாது என மற்றவரையும் எச்சரியுங்கள்.

விபத்து ஏற்பட்டால், மின்வாரிய அலுவலகத்துக்கு உடனடி தகவல் அளியுங்கள். இடி அல்லது மின்னலின் போது, தஞ்சம் அடைய அருகில் எதுவும் இல்லாத பட்சத்தில் மின் கம்பிகள், கம்பங்கள், மரங்கள், உலோக கம்பிவேலி போன்றவை இல்லாத தாழ்வான பகுதிகளை தேர்ந்தெடுங்கள்.

Comments  
  • KeelaiPamaran Karuthu (கீழை பாமரன் கருத்து) : ம‌ழை அருளாள‌னின் அருட்கொடை இந்த‌ அருட்கொடையை சேமித்து வைக்க‌ ந‌ம்மிட‌ம் திட்டமில்லை த‌மிழ்நாடு அர‌சு ம‌ழை நீர் சேமிப்பு திட்ட‌த்தை முழுமைப்ப‌டுத்த‌ வேண்டும் அப்போதுதான் வ‌ற‌ட்சியான‌ கால‌ங்க‌ளில் த‌ண்ணீர் ப‌ஞ்ச‌ம் இல்லாம‌ல் பாதுகாக்க‌ முடியும்.எது எப்ப‌டியோ ம‌ழை நீரை க‌ண்ட‌வுட‌ன் இத‌ய‌ம் இனிக்கிற‌து க‌ண்க‌ள் ப‌ணிக்கிற‌து.

Friday 19 October 2012

கீழக்கரையில் டெங்கும் இல்லை.. மலேரியாவும் இல்லை.. - சுகாதாரத் துறையினர் தரும் 'நகைச்சுவைத் தகவல்' !

த‌மிழ‌க‌ம் முழுவ‌தும் டெங்கு காய்ச்ச‌லால் ஏராள‌மான‌வ‌ர்க‌ள் இறந்துள்ளனர். பலர் கடுமையான நோய் தாக்கத்தால் பாதிக்க‌ப்ப‌ட்டுள்ள‌ நிலையில், அரசு மருத்துவமனைகளுக்கு செல்ல அச்சப்பட்டு, தனியார் மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். நம் இராமநாதபுரம் மாவட்டத்திலும் பெரியவர்கள், குழந்தைகள் என பலர் இரத்த சிவப்பணுக்கள் மற்றும் இரத்த அழுத்தம் வெகுவாக குறைந்த நிலையில், கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் டெங்கும் இல்லை, மலேரியாவும் இல்லை என சுகாதாரத் துறையினர் செய்தி ஊடகங்களுக்கு நகைச்சுவைத் தகவல் அளித்திருக்கின்றனர். இது கீழக்கரை பகுதி பொதுமக்களிடையே பெரும் எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. 




அதே வேளையில் ஆறுதல் அளிக்கும் விதமாக, சுகாதாரத் துறையினருடன் கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி, தாசிம் பீவி அப்துல் காத‌ர் மகளீர் க‌ல்லூரி, இஸ்லாமியா ப‌ள்ளிக‌ள், ச‌த‌க்க‌த்துன் ஜாரியா ப‌ள்ளி, கைராத்துல் ஜ‌லாலியா ப‌ள்ளி, செய்ய‌து ஹ‌மீதா க‌ல்லூரி ஆகியவை இணைந்து, கீழக்கரை பகுதியில் டெங்கு காய்ச்சல் மேலும் பரவாமல் தடுக்க விழிப்புண‌ர்வு பேரணி ந‌டைபெற்ற‌து. இந்த பேரணியில் பெரும் திரளாக பங்கேற்ற ஆயிர‌க்க‌ண‌க்கான‌ மாண‌வ‌ மாண‌விய‌ர் டெங்கு ஒழிப்பு குறித்த‌ வாச‌க‌ங்க‌ள் அட‌ங்கிய‌ ப‌தாகைக‌ளை கையில் ஏந்திய‌ப‌டி வ‌ந்த‌ன‌ர். மேலும் "கொசுக்களை அழிப்போம்.. டெங்குவை ஒழிப்போம்.." என்று டெங்கு கொசுக்களுக்கு எதிரான கண்டனங்களையும் பதிவு செய்தனர். மேலும் இஸ்லாமியா கல்வி நிறுவனங்கள் சார்பாக   விழிப்புண‌ர்வு  நோட்டீஸ்க‌ளை, மாணவர்கள் வீடு வீடாக‌ சென்று விநியோகித்த‌ன‌ர்.


              சுகாதாரத் துறையினருக்கு ஒரு அன்பான வேண்டுகோள் :

டெங்கு என்பது மனநோயா? 'டெங்கு இல்லவே.. இல்லை.' என அடிக்கடி செய்தி ஊடகங்களில் அறிக்கைகள் விட்டு, எங்களை மனதளவில் பண்படுத்த நினைக்கின்றீர்களே.. மன நோயாக இருந்திருந்தால் உங்கள் நகைச்சுவை அறிக்கைகளே போதும். பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு  மருந்தாக அமைந்திருக்கும். ஆனால் இது உடல் கூறுகளை எல்லாம் கூறு போடும் அபாய  கோடரியாக அல்லவா இருக்கிறது. அரசு மருத்துவ மனைகளில் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அனுமதிக்கப்படாததால், உங்களுக்கு புள்ளி விபரங்கள் கிடைக்க வில்லை என்பதற்காக... புள்ளியே இல்லாமல் இந்த பகுதியில் கோலம் போட்டு குதூகலித்துக் கொண்டிருக்கும் டெங்குவை இல்லை என்று சொல்லுவதா??

நிற்க. கீழக்கரையில் டெங்கு இல்லை என்றாவது சொல்லி விட்டு செல்லுங்கள்.. எங்களின் பிறப்போடு நகமும், சதையுமாக, எங்களை முடக்கிப் போட்டு, நடை பிணமாக மாற்றி, எங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கும் மலேரியாவும் இல்லை என அறிக்கை விட்டு எறியும் நெருப்பில் எண்ணையை ஊற்றாதீர்கள். 'மழை காலத்தில் வரும் காய்ச்சல்கள் எல்லாம் டெங்கு என கருத முடியாது' என தமிழக முதல்வர் அவர்கள் அறிக்கை விட்டு இருக்கிறார்கள். அவ்வாறே உண்மையாக இருப்பின், மட்டற்ற மகிழ்ச்சி அடைவது எம் மக்களைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்??

Thursday 18 October 2012

கீழக்கரையில் கடும் மின் வெட்டிலும் அயராது உழைக்கும் பாட்டாளிகள் !

கீழக்கரையில்  நிலவி வரும் அறிவிக்கப்படாத 14 மணி நேர மின் வெட்டு அமலில் இருப்பதால், அதிகமாக பாதிக்கப்பட்டு இருப்பது மனைவி மக்களின் பசியை போக்க அயராது 'உழைத்துக் கொண்டிருக்கும் பாட்டாளிகளும்', கணவன் ஈட்டும் குறைவான வருவாயிலும் உலை பொங்க வைக்கும் 'அடுப்பாங்கரை இல்லத்தரசிகளும்' தான். கீழக்கரையில் தற்போது மின்சாரத்தை நம்பி தொழில் புரிந்த பலர், வேறு தொழில்களுக்கு மாறியுள்ளனர். அல்லது மின்சாரத்துக்கு மாற்றான தொழில்களை துவங்கியுள்ளனர். இன்னும் வேறு சிலர் இருக்கும் தொழிலை சரிவர செய்ய முடியாமல் திணறி வருகின்றனர். இந்நிலையில் தொடர் மின்வெட்டு இருந்தாலும், அரை சாண் வயிற்றுக்கு உழைக்க வேண்டிய சூழலில் சிலர் தன்னம்பிக்கையுடன் தொழில் நடத்தி வருவது மெய் சிலிர்க்க வைக்கிறது.


இது குறித்து முஸ்லீம் பஜார் (லெப்பை மாமா டீக் கடை அருகில்) சலூன் நடத்தி வரும் திரு. தயாளன் அவர்கள் கூறும் போது "இது போன்ற ஒரு மோசமான மின் வெட்டினை நான் கண்டதில்லை. இதனால் வாடிக்கையாளர்கள் வருகை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, சம்பாத்தியம் மிகவும் குறைந்து போனது. தொடர் மின் வெட்டால் எமெர்ஜென்சி லைட் கூட சார்ஜ் செய்ய முடியவில்லை. ஜெனரேட்டர், UPS போன்றவை வைத்து பயன்படுத்தினால் தாக்கு பிடிக்க முடியாது. அதனால் தான், சீப்பில் மெழுகுவர்த்தி ஏற்றி அதன் வெளிச்சத்தில் முடி திருத்தம் செய்து வருகிறேன். இந்த புது யுக்தியை கடைபிடிப்பதால், மிகக் குறைந்த செலவில் இப்பொது ஓரளவுக்கு வருமானம் வருகிறது."என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.


இது குறித்து புது கிழக்குத் தெருவைச் சேர்ந்த இல்லத்தரசி ஆசிபா அமீன் அவர்கள் கூறும் போது "காலையில் இருந்து கால் கடுக்க நின்று, மூன்று வேலையும் சமைக்க அடுப்பாங்கரையிலேயே குறைந்தது எட்டு மணி நேரங்கள் கழிந்து விடுகிறது. கீழக்கரையில் தற்போது கட்டப்பட்டு வரும் கோழிக்கூடு போன்று அமைந்திருக்கும் சமையல் அறைகளில் புகை போக்கிகள் இல்லை. இதனோடு மின் விசிறியும் இயக்க முடியாததால், நாள் முழுதும் வெக்கையில் உழன்று வருகிறோம். எப்போது மின்சாரம் வரும் ?  எப்போது மின்சாரம் போகும் ?? என்பது புரியாத புதிராகவே இருக்கிறது. எது எப்படி இருந்தாலும், உழைத்துக் களைத்து வரும் கணவருக்கும், படித்துக் களைத்து பிள்ளைகளுக்கும் அடுப்பாங்கரையில் அடைக்கலமாவதை மின்வெட்டு தடுக்க முடியாது தானே..." என்று பொறுப்புடன் தெரிவித்தார்.

Comments :
  • KeelaiPamaran Karuthu : மின்சார‌ துண்டிப்பை உண‌ர்த்தும் அழ‌கான‌ ப‌ட‌ம் தோழ‌ரே அதே ச‌ம‌ய‌த்தில் ப‌ணி செய்யும் தோழ‌ருக்கு இரும‌லோ,தும்ம‌லோ ஏற்ப‌ட்டால் மெழுகுவ‌ரத்தி முக‌த்தில் தெறித்து நிலைமை ஆப‌த்தாகி விடும்.இப்ப‌டி செய்ய‌ வேண்டாம் என‌ அறிவுறுத்துங்க‌ள்.இந்த‌ மின் வெட்டால் சிகை அல‌ங்கார‌ தொழில் கூட‌ செய்ய‌முடிய‌வில்லை...எப்போது தீரும் இந்த‌ மின்சார‌ வேத‌னை

  • கீழக்கரை 'புதிய ஒற்றுமை'  : நல்ல பதிவு.. கீழக்கரையை பொருத்தமட்டில் மின்னல் போல வந்து மறையும் மின்சாரத்தினால் பாட்டளிகளின் வாழ்க்கையில் டன் கணக்கில் சோகங்கள் இடியாய் வந்து இறங்கி இருக்கிறது. இதனால் வாழ்க்கை சக்கரத்தை நகர்த்த பாடாய்படும் பாட்டளிகளின் எதிர் நீச்சல் சாகசங்கள் அனு தினமும் நடந்து கொண்டிருப்பதை உணர முடிகிறது. மின் வெட்டின் கும்மிருட்டிலும் தன்னம்பிக்கையோடு உழைக்க துணிந்திருக்கும், தம்பி தயாளா.. ஆபத்தான வழிகளை விடுத்து, இன்னும்கொஞ்சம் சிந்தித்து மாற்று வழிகளை தேடலாமே..
  • Fouz Ameen  : இதுக்குலான் எப்போது விடிவு கிடைக்கும் ? யாராவது விடை தெரிந்தால் சொல்லுங்களேன்.. ப்ளீஸ்

Wednesday 17 October 2012

கீழக்கரை மலேரியா கிளினிக்கிற்கு தொண்டு நிறுவனம் வழங்கிய இலவச இருக்கைகள் எங்கே ? அவதியில் பொது மக்கள் கேள்வி !

கீழக்கரை நகராட்சி அலுவலகம் அருகில் எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மலேரியா சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் அமர்வதற்கு நாற்காலிகள் கூட இல்லாததால், ஆங்காங்கே நின்று கொண்டும், சிகிச்சை மையத்தின் வாசல் அருகே தரையில் அமர்ந்தும் அவதிப்பட்டு வந்தனர். 


இந்நிலையினை, கடந்த மாதம் செய்தி ஊடகங்கள் மூலம் அறிந்த கீழக்கரை ம‌க்க‌ள் சேவை அற‌க்க‌ட்ட‌ளை நிறுவ‌னர் ஜனாப். உம‌ர் அப்துல் காதர் அவர்கள் ஆர‌ம்ப‌ சுகாதார‌ நிலைய‌த்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு உடனடியாக த‌ன‌து அற‌க்க‌ட்ட‌ளை சார்பில் ப‌த்து இருக்கைகளை நோயாளிகள் பயன்பாட்டிற்கு இலவசமாக வழங்கினார்.

படம் : கீழக்கரை டைம்ஸ்

இந்நிலையில் தற்போது ஏராளமான குழந்தைகள் மற்றும் குழந்தைகள்  மலேரியா போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு இங்கு சிகிச்சை பெற வந்த வண்ணம் உள்ளனர். ஆனால் இங்கு தொண்டு நிறுவனத்தால் வழங்கப்பட்ட நாற்காலிகள் போடப்படாததால் மீண்டும் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.


இது குறித்து இங்கு சிகிச்சைக்கு வந்திருந்த சின்ன மாயாகுளத்தை சேர்ந்த திரு. இன்பராஜ் அவர்கள் கூறும் போது "இங்கு கடந்த சில மாதங்களுக்கு முன் தொண்டு நிறுவனத்தினரால் வழங்கப்பட்ட சேர்கள் எங்கே போனது? என்று தெரியவில்லை. இங்கு சிகிச்சைக்காக சிறு குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள், அமர்வதற்கு வழியில்லாமல் படும்பாடு பரிதாபத்துக்குரியது. இது சம்பந்தமாக அங்குள்ளவர்களிடம் கேட்ட போது 'எல்லா நாளிலும் நோயாளிகளுக்கு சேர் போட முடியாதாம்; வாரத்தில் புதன் கிழமை குழந்தைகளுக்கு தடுப்பூசி போட வருபவர்களுக்கு மட்டும் தான் அந்த சேர்களை போடுவார்களாம். மற்ற நாள்களில் இந்த சேர்களை வாடகைக்கு விடுகிறார்களா?" என்று கேள்வி எழுப்பினார்.

Comments  :


  • கீழக்கரை 'புதிய ஒற்றுமை' இங்கு மிகுந்த சிரமத்துடன் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் அமர்வதற்கும், ஆசுவாசப் படுத்திக் கொள்வதற்கும் தொண்டு நிறுவனத்தால் வாங்கி கொடுக்கப்பட்ட சேர்களை பயன்பாட்டுக்கு போடாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. மலேரியா சிகிச்சை மைய ஊழியர்களின் இது போன்ற மெத்தனப் போக்கினால், இனி வரும் காலங்களில் யாரும் உதவக் கூட முன் வர மாட்டார்கள். உடனே நோயாளிகள் அமர்வதற்கு அந்த இருக்கைகளை உரிய இடத்தில் வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.