தேடல் தொடங்கியதே..

Saturday 27 October 2012

கீழக்கரையில் 'தியாகப் பெருநாள்' மகிழ்ச்சியில் திளைக்கும் இஸ்லாமிய பெருமக்கள் !

கீழக்கரை நகரில் இன்று (27.10.2012) சிறப்பான முறையில் தியாகத் திருநாளாக போற்றப்படும் ஹஜ்ஜு பெருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. கீழக்கரை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் இன்று அதிகாலை 4 மணியளவில் திடீரென துவங்கிய கன மழை  தொடர்ந்து 2 மணி நேரம் நீடித்தது. காலை 6 மணிக்கு பிறகு வானம் மேக மூட்டம் இன்றி தெளிவானது. இருப்பினும்  அதிகாலையில் பஜ்ரு தொழுகையை நிறைவேற்றிய இஸ்லாமிய பெருமக்கள், காலையில் குளித்து புத்தாடை அணிந்து, பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர்கள் ஏற்பாடு செய்திருந்த திறந்த வெளி திடல்கள் அல்லது பள்ளிவாசல்களுக்கு சென்று பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர். அதனை தொடர்ந்து குத்பாவும் ஓதப்பட்டது. தொழுகை முடிந்து ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.





கீழக்கரையில் பெருநாள் தொழுகை ந‌டுத்தெரு ப‌ள்ளி, கிழ‌க்குதெரு குள‌ங்க‌ரை ப‌ள்ளி, சேகு அப்பா ப‌ள்ளி, ப‌ழைய‌ குத்பா ப‌ள்ளி, மின் ஹாஜியார் ப‌ள்ளி, மேல‌த்தெரு பள்ளி, ஓட‌க்க‌ரை ப‌ள்ளி, ஓட‌க்க‌ரை ப‌ள்ளி, வ‌ட‌க்குதெரு பள்ளி ஆகியவைகளில் நடைபெற்றது. நபி வழி திறந்த வெளி திடல் தொழுகைகள் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கிழக்குத் தெருவிலும், 500 பிளாட்டிலும், KECT சார்பில் புதுக் கிழக்குத் தெரு மைதானத்திலும், கிழ‌க்குதெரு ஜ‌மாத் சார்பில் திட‌ல் தொழுகை கைராத்து ஜ‌லாலியா மேல்நிலை பள்ளியிலும், தெற்குதெரு ஜமாத் சார்பில் புதுத் தெரு மைதானத்திலும், கடற்கரை பள்ளியிலும்  வெகு சிறப்பாக பெருநாள் தொழுகை நடை பெற்றது. கீழக்கரையை பொருத்தமட்டில் தற்போது பள்ளிவாசல்களை விட திடல் தொழுகையில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.







கீழக்கரையில் இஸ்லாமிய பெருமக்கள் அனைவரும் அக மகிழ்வுடன் தொழுகையை  முடித்தவுடன், வீட்டுக்கு வந்து பெருநாள் சாப்பாடு சாப்பிட்டு, இறை கடமையை நிறைவேற்றும் முகமாக ஆடு, மாடு போன்ற கால்நடைகளை குர்பானி கொடுத்து, அதன் இறைச்சிகளை குடும்பத்தார்களுக்கும், உறவினர்களுக்கும், ஏழை எளியவர்களுக்கும்,  கொடுத்து வருகின்றனர். பள்ளிவாசல் எங்கும் தக்பீர் முழக்கம் ஒலித்த வண்ணம் உள்ளது. 

பெரியவர்களும், பெண்மணிகளும் உறவினர் வீடுகளுக்கு சென்று பெருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்து விட்டு சிறுவர்களுக்கு பெருநாள் காசுகளை அளிப்பதால், சிறுவர்களின் முகத்தில் புன்னகை தவழுகிறது. இறைதூதர்கள் நபீ இப்ராஹீம்(அலை), நபீ இஸ்மாயீல்(அலை), மற்றும் அன்னை ஹாஜரா ஆகியோரின் மாபெரும் தியாகத்தை நினைவுகூறும் வகையில் தியாகத் திருநாள் உலகமெங்கும் உள்ள முஸ்லிம்களால் கொண்டாடப்படுகிறது. இந்த தியாகத் திருநாளில் கீழை இளையவன் வலை தளம் சார்பாக‌ அனைத்து அன்புள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த பெருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Tuesday 23 October 2012

கீழக்கரையில் சாரல் மழை தொடர்வதால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு !

கீழக்கரை சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து சாரல் மழையும் அவ்வப்போது கன மழையும் பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழையால் வறண்டு கிடந்த இடங்கள் தண்ணீர் மயமாக காட்சியளிக்கிறது. இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் நேற்று அனைத்து இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பெய்த மழையின் சராசரி மழையின் அளவு 20 .22 மில்லி மீட்டர் ஆகும்.

(மழையை இரசித்தவாறு வீதிகளை கடக்கும் போது 'கிளிக்'கிய புகைப்படங்கள்)

















சாரல் இன்னும் வரும்...

நேற்று இரவு முதல் இடை விடாது பெய்து வரும் சாரல் மழையால் பொதுமக்கள் வெளியே வர முடியாமல் வீட்டினுள்ளே முடங்கி கிடக்கின்றனர். சாலையோர சிறு வியாபாரிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது குளுமையான சீதோசன நிலையால் நகரமெங்கும் மிக இரம்மியமான சூழல் நிலவுகிறது.

கீழக்கரையில் குடிநீருக்காக தினமும் போராட்டமாகி வரும் வாழ்க்கை - அடை மழை பெய்தாலும் அகலாத அவலம் !

கீழக்கரை நகருக்குள் ஒரு காலத்தில், மழை நீரை சேமித்து வைக்கவும், பயன்படுத்தவும் குளங்களும், ஊரணிகளும் நிறைந்து காணப்பட்டது. ஆனால் மிக குறுகிய காலத்திலேயே அசுர வேக நகர்மயமானதாலும், தனியார் ஆக்கிரமிப்புகளாலும் குலங்களெல்லாம், அறிச்சுவடுகள் கூட தெரியாத அளவுக்கு அழிக்கப்பட்டு காணாமலே போய் விட்டது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவலின் படி கீழக்கரையில் 1990ஆண்டு, கிணறுகள் மற்றும் ஊரணிகள் குறித்த விபரப் பதிவேட்டின் படி  10 குளங்களும், ஊரணிகளும் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இன்று ஒரு நீர் நிலை கூட நகருக்குள் காணப்படவில்லை என்பது அதிர்ச்சி ரக தகவல். இந்நிலையில் பலத்த மழை பொழிவு இருந்தாலும் கூட, குடிநீருக்காக மக்கள் படும் கஷ்டங்கள் குறைந்த பாடில்லை.

படம் : 'FORTH BOY' நெய்னா

கீழக்கரை நகரில் பெரும்பாலான குடி தண்ணீர் தேவைகள் தீர்க்கப்படுவதில், தற்போது 500 பிளாட்டு பகுதியிலிருந்து எடுத்து வந்து, நகருக்குள் விற்கப்படும் மாட்டுமாட்டு வண்டி தண்ணீர் பெருமளவு பங்கு வகிக்கிறது.  இவ்வாறு விற்கப்படும் குடி தண்ணீர் ஒரு குடம் 5 ரூபாய்க்கும், தனியார்  லாரிகளில் கொண்டு வரப்படும் தண்ணீர் ஒரு குடம்  6 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இது இன்னும் சிறிது காலங்களில் 10 ரூபாய் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

கீழக்கரை ந‌க‌ராட்சியில் பெரும்பாலான‌ தெருக்க‌ளில் உள்ள பொது குழாய் மூலம் குடிநீர் விநியோக‌ம் செய்ய‌ப்ப‌ட்டு வந்தாலும், இவைகளும் தற்போது பழுதடைந்த நிலையில் இருப்பதால், குறைந்த அளவே விநியோகிக்கப்படும் குடிநீரும் கூட, குடிக்க தகுதி இல்லாமல் கலங்கிய நிலையில் வருவதாலும் நல்ல குடி தண்ணீர்  கிடைக்காமல் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.


'நீரின்றி அமையாது உலகு' என்பது பெரியோர்கள் வாக்கு. அரசுத் துறைகளில் தவறு செய்வபர்களை 'தண்ணீர் இல்லாத காட்டிற்கு மாற்ற வேண்டும்' என்று அரசியல் சாணக்கியர்கள் அடிக்கடி கூறுவதை நாம் கேட்டிருப்போம். அவ்வாறு .தண்ணீர் இல்லாத காடு', 'வறட்சியான மாவட்டம்' என்று அடை மொழிகளால் அழைக்கப்பட்டு வரும் நம் இராமநாதபுரம் மாவட்டத்தின் குடிநீர் தட்டுப்பாட்டை தடுக்கும் வகையில், கடந்த தி.மு.க ஆட்சியின் போது  616 கோடி ரூபாய் செலவில் காவிரி கூட்டு குடி நீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. மராமத்து செய்கிறோம்; பராமரிப்பு செய்கிறோம்.. என்ற பெயரில் மாதத்தில் பாதி நாள்கள் காவிரி நீர் வினியோகம் நிறுத்தப்படுவதால் பொது மக்கள் தொடர்ந்து சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். 



இதனால் பொது மக்கள் காலை முதலே குடங்களை தூக்கி கொண்டு குடி தண்ணீருக்காக அலைந்து திரியும் நிலை காணப்படுகிறது. ஒரு சில நேரங்கள் லாரியில் விற்கப்படும் தண்ணீரோ, மாட்டு வண்டி தண்ணீரோ வராமல் போவதால், என்ன செய்வதென்று தெரியாமல், வீட்டு வாசல் படிகளிலேயே காத்துக் கிடக்கின்றனர். இந்த காலகட்டத்தில், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் என்று கூறி, ISI முத்திரைகள் இல்லாத, கலப்பட தண்ணீரினை கேன்களில் அடைத்து விற்கும் வியாபாரமும் களை கட்ட துவங்கியுள்ளது. இருப்பினும் தற்போது நகர் முழுதும் போடப்பட்டு வரும் குடிநீர் குழாய்கள் மூலம் ஓரளவு தண்ணீர் தாகம் தீர்க்கப்படும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

Sunday 21 October 2012

கீழக்கரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் வரவழைக்கப்பட்டுள்ள 'குர்பானி' ஒட்டகங்கள் !

கீழக்கரையில் ஒவ்வொரு வருடமும் ஹஜ்ஜுப் பெருநாளையொட்டி, இஸ்லாமிய சட்டப்படி குர்பானி கொடுப்பதற்காக, கீழக்கரை தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இராஜஸ்தானிலிருந்து ஒட்டகங்கள் வரவழைக்கப்படும். அதே போல் இந்த ஆண்டும்,  இரண்டு ஒட்டகம்  வரவழைக்கப்பட்டுள்ளன. இதே போன்று பக்ரீத் பண்டிகையையொட்டி பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர்களும், இஸ்லாமிய பெருமக்களும் மூன்று நாட்களுக்கு ஒட்டகம், மாடு, ஆடுகள் குர்பானி கொடுத்து அதன் இறைச்சிகளை, இறை வழியில் முஸ்லீம்களுக்கும், உறவினர்களுக்கும், ஏழை எளியோர்களுக்கும்  வழங்கி மகிழ்வர்.


கீழக்கரைக்கு வரவழைக்கப்பட்டுள்ள அந்த இரண்டு ஒட்டகங்களும், கீழக்கரை 500 பிளாட்டில் உள்ள தனியார் தோப்பில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. வழக்கம் போல பக்ரீத் பண்டிகையிலிருந்து மூன்றாவது நாள் இவை குர்பானி கொடுக்கப்படும் என TNTJ நிர்வாகி ஜனாப். ஹாஜா மைதீன் அவர்கள் தெரிவித்தார். கடந்தாண்டு இராமநாதபுரம் மாவட்டத்திற்கு, 12 ஒட்டகங்கள் கொண்டு வரப்பட்டு குர்பானி கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


தற்போது கீழக்கரை நகருக்குள் குடிநீர்க் குழாய்களுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களால், சாலைகள் உருக்குலைந்து போயுள்ளதால், ஒட்டகங்களை ஊருக்குள் அழைத்து வர வேண்டாம் என்றும் அழைத்து வந்தால் ஒட்டகங்கள் இடறி விழும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் சில சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.