தேடல் தொடங்கியதே..

Thursday 13 June 2013

கீழக்கரையில் வரலாறு காணாத வகையில் கோழிக் கறி விலை ரூ.200 ஆக உயர்வு - விற்பனை இன்றி வெறிச்சோடி கிடக்கும் பிராய்லர் கடைகள் !

கீழக்கரையில் கடந்த வாரம் வரை ரூ.160க்கு விற்பனையான கோழிக்கறி தற்போது ரூ.200 க்கும், சில கடைகளில் ரூ.210 க்கும் விற்பனை செய்யப்படுவதால் பொது மக்கள் பெரும் வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர். நமது கீழக்கரை நகரில் கோழிக்கறி பிரியர்கள் ஏராளமானோர் உள்ளனர். இது தவிர ஏராளமான  சிக்கன் ஸ்டால்களும் உள்ளன. இந்த கடும் விலை உயர்வால் இந்த தொழில் சார்ந்த அனைத்து தரப்பு மக்களும் பாதிப்படைந்துள்ளனர். இந்த திடீர் கடும் விலை உயர்வால், கீழக்கரை நகரில் உள்ள அனைத்து பிராய்லர் கடைகளும் விற்பனை இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.


நாமக்கல் மண்டலத்தில், கடந்த மார்ச் மாதம் முதல் தீவனங்களின் விலை அதிகரித்துள்ளதால், நாடு தழுவிய அளவில், பிராய்லர் கோழி விலை, 30 சதவீதம் உயர்ந்துள்ளது. இது தவிர, முட்டை விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது. கோழி தீவனம் தயாரிக்க பயன்படும் சோயா உள்ளிட்ட முக்கிய மூலப்பொருட்கள், கடந்த ஆறு மாதங்களாக அதிக விலையேற்றம் அடைந்துள்ளதும் இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. 





இது குறித்து கீழக்கரை 'மாஸ்டர் பிராய்லர்ஸ்' கோழிக் கடை உரிமையாளர், சகோதரர் அய்யூப் அவர்கள் கூறும் போது "நான் இந்த பிராய்லர் தொழிலை துவங்கி 15 வருட காலத்தில், கிலோ ரூ.200க்கு விற்பனையாவது இதுவே முதல் முறை. கோழிக்கறியை விரும்பி சாப்பிடும் வாடிக்கையாளர்கள் பலர் விலையை கேட்டவுடன், வாங்காமல் வேகமாக நடையை கட்டுகின்றனர். கடந்த வாரத்தில் நடந்த விற்பனையை காட்டிலும், தற்போது வெகுவாக குறைந்துள்ளது. தற்போது நிலவும் இந்த திடீர் விலையேற்றம் இன்னும் ஒரு சில வாரங்கள் நீடிக்கும் என தெரிகிறது" என்று வருத்தம் தோய்ந்த முகத்துடன் தெரிவித்தார்.

கோழி மேல் கோபம் வேண்டாமே..?
அதே வேளையில், கீழக்கரையில் கடந்த நவம்பர் 2012 ல் கறிக் கோழி ரூ.100 க்கும், சில இடங்களில் ரூ.90 க்கும் விற்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சியோடு வாங்கி சென்றனர். ஆனால் இப்போது அதை காட்டிலும் இரு மடங்காக விற்கப்படுகிறது. இது குறித்து நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த செய்தியை வாசிக்க கீழே உள்ள லிங்கை சொடுக்கி பார்வையிடவும்.

கீழக்கரையில் கோழிக்கறி விலைச் சரிவால் நடுத்தர, ஏழை எளிய மக்கள் மகிழ்ச்சி !

உங்கள் பொது அறிவுக்கு :

உலகளவில், கோழி உற்பத்தியில் வளர்ந்து வரும் முன்னணி நாடுகளுள் ஒன்றாக, இந்தியா விளங்குகிறது. குறிப்பாக, சர்வதேச அளவில், நம் நாடு, பிராய்லர் உற்பத்தியில், ஐந்தாவது இடத்திலும், முட்டை உற்பத்தியில், நான்காவது இடத்திலும் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக, இந்திய கோழிப் பண்ணை துறை, ஆண்டுக்கு, 8 முதல் 10 சதவீதம் வரை வளர்ச்சி கண்டு வருகிறது. மேலும் பெரிய அளவிலான ஒருங்கிணைக்கப்பட்ட வர்த்தக வாய்ப்புகள் கொண்ட துறையாக, இந்திய கோழிப் பண்ணை துறை உருவெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. கோழி விலை உயர்வால் வெள்ளிகிழமை பட்ஜெட் அதிகாமாகி இருச்சி....!

    ReplyDelete