தேடல் தொடங்கியதே..

Sunday 11 August 2013

கீழக்கரையில் 'மணல் மேடு' கண்காட்சித் திடலில் நிலவும் சுகாதார சீர்கேட்டால் நோய் தொற்றும் அபாயம் - 'மணல் மேடா.. குப்பை காடா' என பொதுமக்கள் குமுறல் !

கீழக்கரை நகரில் வருடம் தோறும் நோன்புப் பெருநாள் மற்றும் ஹஜ்ஜுப் பெருநாளைத் தொடர்ந்து வரும் முதல் மூன்று தினங்களுக்கு வடக்குத் தெரு பகுதியில் அமைந்திருக்கும் மணல் மேட்டில் 'கண்காட்சித் திடல்' அமைப்பது வழக்கம். இங்கு சிறுவர்களை அதிகம் மகிழ்விக்கும் கேளிக்கைகள், மெகா இராட்டினம், கப்பல் ஊஞ்சல், தொட்டி ஊஞ்சல், குடை இராட்டினம், விளையாட்டுப் பொருள் கடைகள், விரைவு உணவு விடுதிகள் உள்ளிட்டவை அமையப் பெறும். 


இதனால் கீழக்கரை மக்கள், மாலை வேளைகளில், தங்களின் சிறு பிள்ளைகளுடனும், குடும்பத்தாருடனும், இங்கு வருகை தந்து பெருநாளை மகிழ்வுடன் கழித்து செல்வர். இந்த ஆண்டும் இதே போல், நோன்புப் பெருநாளை முன்னிட்டு, மணல் மேடு பகுதியில், கடந்த மூன்று நாள்களாக கண்காட்சி நடை பெற்று வருகிறது.

இங்கு வரும் பொதுமக்கள் பிளாஸ்டிக் கழிவுகளையும், துர்நாற்றம் வீசும் உணவு மிச்சங்களையும், குப்பைக் கூடைகள் வைக்கப்படாததால், வேறு வழியின்றி தாங்கள் இருக்கும் இடங்களிலேயே வீசி விட்டு செல்கின்றனர்.

இதனை முறைப்படி மணல் மேடு நடத்தும் நிர்வாகத்தினர் தினமும் சுத்தம் செய்வது இல்லை. இதனால் தற்போது மணல் மேட்டில் கடும் சுகாதாரக் கேடு நிலவுகிறது. இங்கு வரும் பொதுமக்கள் "இது மணல் மேடா.. இல்லை குப்பைக் காடா" என வருத்தத்துடன், முகம் சுளித்து வீடு திரும்பி வருகின்றனர்.  
இது குறித்து மணல் மேடு பகுதிக்கு வருகை தந்திருந்த கீழக்கரை முஸ்லீம் லீக் நிர்வாகி லெப்பை தம்பி அவர்கள் நம்மிடையே பேசும் போது "கீழக்கரை மக்களுக்கு பெருநாள் தினங்களில் ஒரு மாபெரும் பொழுது போக்கு இடமாக இந்த மணல் மேடு பகுதியினை ஆண்டு தோறும் மிக சிறப்பாக, தொடர்ந்து நடத்தி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. 
கீழக்கரையின் எழில் கொஞ்சும் மணல் மேடு பகுதி, இப்போது கீழக்கரையின்  மாபெரும் குப்பை மேடாக காட்சியளிக்கிறது. கண்காட்சி நடக்கும் மூன்று  நாள்களும் குப்பைகளை அள்ளாமல் விட்டு விட்டு, கடைசியாக கூட்டிப் பெருக்குவதில் எந்த பயனுமில்லை." என்று முகம் சுளித்தவாறே பேசி முடித்தார். 


இது குறித்து நெய்னா முஹம்மது தண்டையல் தெருவைச் சேர்ந்த ஹாமீது இபுறாஹீம் அவர்கள் கூறும் போது "இங்கு வரும் பொதுமக்கள் யாரும் குப்பைகளை வீசி எறிய வேண்டும் என்று நினைக்க வில்லை. சம்பந்தப்பட்ட வடக்குத் தெரு, மணல் மேடு நிர்வாகத்தினர் குப்பை கூடைகளை அனைத்து இடங்களிலும் வைத்திருந்தால்... ஏன் குப்பைகளை எல்லா இடங்களிலும் வீசி எறியப் போகிறார்கள்.?

இங்கு முதல் நாள் வரும் போது இருக்கும் சுகாதாரம், மூன்றாவது நாள் இருப்பதில்லை. மூன்று நாள்களும் இங்கு சேரும் நாற்றமெடுக்கும் குப்பைகளை இனி வரும் காலங்களிலாவது, தினமும் காலை நேரங்களில் சுத்தம் செய்து, இங்கு வரும் பொதுமக்களை நோய் நொடிகளில் இருந்து காக்க வேண்டும்." என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.

இது குறித்து நாம் ஏற்கனவே கடந்த ஆண்டு வெளியிட்டிருந்த செய்தியை வாசிக்க கீழ் வரும் லிங்கை சொடுக்கி பார்வையிடலாம்.

கீழக்கரையில் குப்பை காடாக காட்சி தரும் மணல் மேடு கண்காட்சித் திடல் - சுகாதாரப் பணிகள் மேம்பட பொதுமக்கள் கோரிக்கை !

கீழக்கரை மணல் மேடு கண்காட்சி திடலில் 'குப்பைகள் குறித்த விழிப்புணர்வு' - யூத் எக்ஸனோரா அமைப்பினரின் புதிய முயற்சி !

No comments:

Post a Comment