தேடல் தொடங்கியதே..

Saturday 28 September 2013

கீழக்கரை வீடுகளில் இன்றும் மாறாமல் நிலைத்திருக்கும் 'பனை ஓலை' பொருள்களின் உபயோகம் - நீங்காத நினைவலைகள் !

கீழக்கரையில் பிறந்த அனைவருக்கும், சிறுவயது காலங்களில் இந்த பனை ஓலையாலான கலர் கலரான இடியப்ப பொட்டிகளை எடுத்து கொண்டு, இடியப்பம் அவிக்கும் வீடுகளில் கால் கடுக்க காத்திருந்து வாங்கி சென்ற அனுபவம் கட்டாயம் இருக்கும். சிறு பிள்ளையாய் இருக்கும் போது நண்பர்களுடன் விளையாடப் போற அவசரத்துலே வீட்டிலிருந்து கிளம்புகையில், 'உம்மா' இடியப்ப பொட்டிய கையில் தந்து, இடியப்பம் வாங்கி வர சொல்லுவார்கள். இடியப்பக்கார வீட்டுலே போயி உம்மா அவசரமா இடியப்பம் கேட்டாங்கனு மூச்சிரைக்க சொல்லுவோம். "பொட்டிய கீழே வச்சிட்டு செத்த இரு வாப்பா, இடியப்பம் அடுப்புலே இருக்கு.. புதுசா மாவு பீச்சி தாரேன்.." என்று சொல்லி ஒரு மணி நேரம் காத்திருக்க வைத்து கலவரப்படுத்துவார். 



கீழக்கரையில் பனை ஓலையால் செய்யப்பட்ட இடியப்ப பெட்டிகள், தலை சுமை பெட்டிகள், கலவாடைகள், கீழக்கரையில் பேச்சு வழக்கில் சொல்லப்படும் சொளவு என்கிற அரிசி புடைக்கும் முறம், கல்யாண சீர்வரிசைப் பெட்டி, போன்ற கை வினைப் பொருள்களுக்கு கிராக்கி இன்னும் அதிகமாகவே காணப்படுகிறது. கீழக்கரை வீடுகளில் எது இருக்கிறதோ இல்லையோ பெரும்பாலும் அனைவரின் வீட்டிலும் பனை ஓலையில் செய்யப்பட்ட இடியப்ப பொட்டியும், பனை ஓலை விசிறியும் நிச்சயம் இருக்கும்.  இருப்பினும் பனை ஓலையால் செய்யப்பட்டு வந்த ஓலை பாய், கிலுகிலுப்பை உள்ளிட்ட சிறுவர் விளையாட்டுப் பொருள்கள் போன்ற பல்வேறு கைவினை பொருள்கள் தற்போது வழக்கொழிந்து வருகிறது. 


அழகிய வண்ண சாயங்கள் தோய்க்கப்பட்ட பனை ஓலைகளால் பின்னப்பட்ட கண் கவரும் இடியப்ப பொட்டிகள் இன்றும் கீழக்கரை மக்களால் விரும்பி வாங்கப்பட்டும், உபயோகப்படுத்தப்பட்டும் வருகிறது. கீழக்கரையில் 10 ஆண்டுகளுக்கு முன் வரைக்கும் தெருவுக்கு இரண்டு குடும்பத்தினர் வீதம் இந்த பனை ஓலை கைவினைப் பொருள்களை செய்து வந்தனர். ஆனால் தற்போது பலர் இந்த தொழிலை கைவிட்டு விட்ட நிலையில் இந்த பொருள்களுக்கு கிராக்கி இருந்தாலும், உடனடியாக கிடைப்பதில்லை. பனை ஓலையால் செய்யப்பட்ட பொருட்களில் வைக்கக்கூடிய உணவுப்பொருட்கள், உடலுக்கு ஆராக்கியம் தருவதோடு மட்டுமல்லாமல், அதில் வைக்கப்படும் உணவுப் பொருள்களும்  பலநாட்கள் கெடாமல் இருக்கும்.


அது மட்டுமல்லாமல் பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் என்பதற் கேற்றார் போல் ஓலைப் பெட்டியில் வைக்கப்படும் உணவுப்பொருளும் பனை ஓலைப்பெட்டியால் தனி மணத்தை பெறும். இதனால் கீழக்கரை மக்கள் பனை ஓலையால் செய்யப்பட்ட பெட்டிகள் உள்ளிட்ட பொருட்களை இன்னும் மறக்காமல்  பயன்படுத்தி வருகின்றனர். கீழக்கரையில் முன்னொரு காலத்தில் உறவினர்கள் நண்பர்களின் இல்லங்களுக்கு செல்பவர்கள் ஓலைப்பெட்டிகளில் வைக்கப்பட்டுள்ள தின்பண்டங்களை விரும்பி வாங்கிச் செல்வார்கள்.

கீழக்கரை பகுதிகளில் தொதல், அல்வா, மைசூர்பாகு உள்ளிட்ட திண்பண்டங்கள் கூட பனை ஓலைப் பெட்டிகளிலேயே வைத்து விற்கப்பட்டு வந்தது.  கடந்த 1980 கால கட்டங்களில் மக்கள் அதிகளவில் பயன்படுத்தியதால் பனை ஓலைப்பெட்டிகளின் தேவை அதிகமாக இருந்தது. இதனால் பனை ஓலை பொருட்கள் தொழில் மிகவும் நன்றாக இருந்தது. நாளடைவில் பிளாஸ்டிக் பைகள் மற்றும் அட்டைப் பெட்டிகளின் வருகையை தொடர்ந்து ஓலைப் பெட்டிகளின் பயன்பாடானது குறையத் தொடங்கியது. இதனால் பெரும்பான்மையானவர்கள் ஈடுபட்டு வந்த இத்தொழிலில் தற்பொழுது ஒரு சில குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டும் ஈடுபடக்கூடிய நிலை ஏற்பட்டுவிட்டது.

இராமநாதபுரம் இரயில் நிலையத்தில் விசிறி விற்கும் மூதாட்டி 

புதிய புதிய பெயர் தெரியாத பல நோய்களுக்கு அடித்தளமாக இருக்கும் பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன்களுக்கு மாற்றாக இந்த பனை ஓலைப்பெட்டிகள் திகழ்கிறது. ஆகவே உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்காத பனை ஓலைப்பெட்டிகளை பயன்படுத்துவதன் மூலம், அனைவரும் உடல் நலத்தை காக்கலாம். மேலும் நலிவடைந்து வரும் பனைப்பொருட்கள் தொழிலுக்கு புத்துயிர் அளித்து சுற்றுச்சூழலை பாதுகாக்க, பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து கையினால் செய்யப்படும்  ஓலைபெட்டிகளை பொதுமக்கள் பயன்படுத்த முன்வர வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் பலரின் விருப்பமாக இருக்கிறது.

No comments:

Post a Comment