தேடல் தொடங்கியதே..

Sunday 13 October 2013

கீழக்கரையின் அமானுஷ்ய பக்கமா..? 'அஞ்சு வாசல் கிட்டங்கி' ! (சரித்திரப் பகுதி -1)

கீழக்கரையின் மிக தொன்மையான தெருக்களில் ஒன்றான பழைய குத்பா பள்ளி தெருவில், புரதான குத்பா பள்ளியின் அருகாமையில், சிதிலமடைந்த ஒரு பழமையான கட்டிடம் காணபடுகிறது. கீழக்கரைவாசிகள் அனைவருக்கும் அஞ்சு வாசல் கிட்டங்கி என்றால் தெரியாமல் இருக்காது. இந்த கட்டிடம் இருக்கும் பாதையின் வழியே, மிக அருகாமையில் பழைய ஜெட்டிப் பாலம் இருக்கிறது. இந்த கட்டிடத்தின் முகப்பில் ஐந்து வாசல்கள் காணப்படுவதால், இது  'அஞ்சு வாசல் கிட்டங்கி' என அழைக்கப்பட்டு வந்துள்ளது.



கீழக்கரை மக்கள் மத்தியில் இந்த 'அஞ்சு வாசல் கிட்டங்கி' குறித்து பல்வேறான அமானுஷ்ய கதைகள் பேசப்பட்டு வருகிறது. அதனால் அந்தி மயங்கும் மாலை வேலைகளிலும், இருள் சூழ்ந்த பிறகும் இந்த பகுதிக்கு செல்ல இளைஞர்களும், கட்டிளங் காளைகளும் கூட செல்வதற்கு அஞ்சுவதுண்டு. பெரும்பாலும் தனியாக இந்த பக்கம் யாரும் செல்ல பயப்படுகின்றனர்.



பார்ப்பதற்கு பேய் படங்களில் வரும் 'பேய் பங்களா' போல காட்சி தரும் இந்த ஒட்டடை சூழ்ந்த கட்டிடத்தின் வரலாறு தான் என்ன ?  இது என்ன கட்டிடம் ? எதற்காக கட்டப்பட்டது ? என்ற கேள்விக்கான விடைகளையும், ஒரு காலத்தில் எவ்வளவு பரபரப்பாக இயங்கிய இடம் இது என்பதையும் எத்துணை பெரிய மனிதர்கள் எல்லாம் இங்கு வந்து சென்று இருக்கிறார்கள் ? என்கிற சரித்திர வரலாறுகளும் தெரிய வரும் போது அஞ்சு வாசல் கிட்டங்கி பற்றிய கோணம் சற்றே மாறுகிறது. .

அஞ்சு வாசல் கிட்டங்கி பற்றி நாம் அறிய வேண்டுமெனில், அதற்கு முன்னதாக கீழக்கரையின் புரதான வாணிகம் குறித்தும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. கீழக்கரை நகர மக்களின் ஆதி தொழில் கடலும் கடல் சார்ந்த வாணிபத்தை மையமாக கொண்டே இருந்துள்ளது. தென் தமிழகத்தில்  தொழில் நகரங்களாக விளங்கிய கீழக்கரை, தொண்டி, நாகப்பட்டினம் சங்கு, முத்து, பவளம், கப்பல் கட்டுமானப் பொருள்கள், கப்பல் உதிரிப் பாகங்கள், கருவாடு, மாசி உள்ளிட்ட பதப்படுத்தப்பட்ட கடல் உணவு வகைகள், கடல் அட்டை, கொப்பரை, எள், மிளகாய் போன்றவற்றை, ஏற்றுமதி செய்யும் முக்கிய தளங்களாக விளங்கியுள்ளது.

அஞ்சு வாசல் கிட்டங்கியின் 'தலைவாசல்'



கீழக்கரையில் இருந்து ஏற்றுமதி பொருள்கள் கடல் மார்க்கமாக கப்பல்களில் இலங்கை, சீனா, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு அனுப்பப்பட்டு வந்தது. இதற்கென கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில், ஏற்றுமதி செய்ய இருக்கும் பொருள்களை சேமித்து பாதுகாக்கவும், பத்திரப்படுத்தவும், பதப்படுத்தவும், பண்டக சாலைகள் உருவாக்கப்பட்டன. ஆரம்ப காலத்தில் பண்டக சாலைகள் என்றழைக்கப்பட்ட சொல் பின்னாளில் மருவி கிட்டங்கியானது. 

கீழக்கரையில் கடந்த நூற்றாண்டு வரை செனா நெனா பண்டக சாலை, உனா இனா பண்டக சாலை, செனா முனா பண்டக சாலை, கருப்பட்டி மரைக்காயர் பண்டக சாலை, பீனா செனா பண்டக சாலை, ஆனா செனா வானா பண்டக சாலை என்று பல முக்கிய கிட்டங்கிகள், இரவு பகலாக ஏற்றுமதி வணிகத்தில் சிறப்புற்று விளங்கியுள்ளது. அவற்றுள் ஒன்றாகத் தான் இந்த நூற்றாண்டுகள் தாண்டிய பழமைகள் பேசும் 'அஞ்சு வாசல் பண்டக சாலையும்' நிறுவப்பட்டு சிறப்பாக செயல் பட்டு வந்துள்ளது.

(அஞ்சு வாசல் கிட்டங்கியில் நடந்த ஒரு கொலை சம்பவம் குறித்து அடுத்த பகுதியில் காண்போம்.)

அஞ்சு வாசல் கிட்டங்கியின் இரண்டாம்  பகுதியை வாசிக்க :


சரித்திர சேகரிப்பில் உதவி : வரலாற்று ஆய்வாளர் ஆனா. மூனா சுல்தான் அவர்கள் 

பொறுத்திருங்கள்... பழமைகள் பேசுவோம்..!    (தொடரும் >>>>)  

No comments:

Post a Comment