தேடல் தொடங்கியதே..

Tuesday 5 November 2013

கீழக்கரை 18 வது வார்டு பகுதியில் மின்சார கம்பிகளில் உரசும் ஆபத்தான மரக் கிளைகளால் அடிக்கடி பழுதாகும் 'தெரு விளக்குகள்' - கவுன்சிலர் சிகாமணி கவனிப்பாரா ?

கீழக்கரை சின்னகடை தெருவில் இருந்து நடுத்தெரு செல்லும் பாதையில் (முத்தலிபு மாமா அரிசிக் கடை அருகாமையில்) நிற்கும் மரத்தின் கிளை, உயர் அழுத்த மின்சார கம்பிகளில் உரசி செல்வதால், மின் கம்பத்தில் (மின் கம்ப எண் : 18/29) நகராட்சியால் பொருத்தப்பட்டு இருக்கும் தெருவிளக்கு அடிக்கடி பழுதாகி விடுகிறது. மேலும் சில வேளைகளில் டிரான்ஸ்பார்மரில், மின் தடை (FUSE) ஏற்பட்டு விடுகிறது. இதனால் இந்த பகுதியில் எப்போது மின்சாரம் தடைபடும் என்று தெரியாததால், இங்கு வசிக்கும் பொதுமக்கள் இரவு வந்து விட்டால் மெழுகுவர்த்தி சகிதம் மின்தடையை எதிர் நோக்கி இருக்கின்றனர். 



இதே போல் 18 வது வார்டு பகுதிக்கு உட்பட்ட சின்னக்கடை தெரு கருவாட்டுக்கடை அருகாமையில், எந்நேரமும் ஆபத்தை விளைவிக்க காத்திருக்கும் பட்டுப் போன மரத்தில் இருந்து முறிந்து விழும் நிலையில் அதன் கிளைகள் பொதுமக்களை பயமுறுத்தி வருகிறது.  அதுவும் முறிந்து விழ நேர்ந்தால் உயர் அழுத்த மின்சார வயர்கள் மீது தான் விழும். தற்போது கீழக்கரையில் மழை பெய்து வருவதால், மகத்துவமிக்க மனித உயிர்களுக்கு, மாபெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது.  


இது குறித்து நான் ஏற்கனவே வெளியிட்டிருந்த பதிவினை வாசிக்க கீழ் வரும் லிங்கை சொடுக்கவும். 


இது குறித்து இந்த மின் கம்பத்தின் அருகாமையில் உள்ள இல்லத்தில் வசிக்கும் சகோதரர். முஹம்மது ஹுசைன் அவர்கள் நம்மிடையே பேசும் போது 

"இந்த பகுதியில் உள்ள மரத்தில் இருந்து செல்லும் கிளைகள் மின் கம்பிகளை உரசி செல்வதால், இரவு நேரங்களில் திடீர் திடீரெனெ வயர்கள் தீப்பிடித்து கருகுகிறது. 

மேலும் இதனால் வயர்கள் அறுந்து விழும் ஆபத்தும் உள்ளது. இது பெண்கள் அதிகம் புழங்கும் பாதை. வாரம் ஒரு முறை தெருவிளக்கில் பழுது ஏற்பட்டு விடுவதால், இந்த பகுதியில் இரவு ஆனதும், தெருவிளக்கு எரியாததால் இருள் சூழ்ந்து பாதசாரிகளுக்கு பெரும் இடையூறாகி விடுகிறது.

இதனை உடனடியாக சீர் செய்யக் கோரி 18 வது வார்டு கவுன்சிலரிடம் முறையிட்டுள்ளோம். ஆனால் இன்னும் ஒரு நல்ல வழி பிறக்கவில்லை. ஆகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரு மக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்" என்று வருத்துத்துடன் பேசினார். 

கீழக்கரையில் உயிர் பலி கேட்டு காத்திருக்கும் மரங்கள் குறித்த முந்தைய பதிவுகள்:



கீழக்கரை நகராட்சி.. இது போன்ற மரங்களை இனியும் வெட்டாமல் காலம் தாழ்த்துவது, பொதுமக்களின் நலனில் அக்கறையில்லாமல் செயல்படும் விதமாகவே அமையும். இந்த அபாய மரங்களால் ஏதேனும் உயிர் சேதமோ, விபத்தோ ஏற்படுமாயின் அதற்கான தார்மீக பொறுப்பு முழுக்க நகராட்சி நிர்வாகத்தையே சாரும். 

No comments:

Post a Comment